Wednesday, May 4, 2011

உஸாமா பின் லாடனின் மரணமும், மஹ்தியின் வருகையும்.

உஸாமா பின் லாடனின் மரணமும், 
மஹ்தியின் வருகையும்.
RASMIN M.I.Sc

அல் காயிதா ஆயுதக் குழுவின் தலைவர் உஸாமா பின் லாடன் அமெரிக்க இராணுவத்தினால் சில நாட்களுக்கு முன்பு கொள்ளப்பட்டார் என்று அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.

உஸாமா கொள்ளப்பட்டதாக ஒபாமாவின் அறிவிப்பு வந்தவுடன் உலகின் ஒரு பகுதி மக்கள் சந்தோஷத்தினால் குதூகலித்தார்கள், இன்னொரு பகுதியினர் கவலையில் ஆழ்ந்தார்கள்.

ஏன் என்றால் உஸாமா என்பவர் உலக இராணுவங்களின் பார்வையில் எப்படி தீவிரவாதியோ, அதே போல் அவரை நேசிப்பவர்களுக்கு மத்தியில் அவர் ஒரு உண்ணதமான தலைவராகவும் மதிக்கப்பட்டார்.

பின் லாடன் கொள்ளப்பட்டதாக அமெரிக்காவும் அதனுடைய நேச நாடுகளும் சொல்லிக் கொண்டாலும் இன்னொரு தரப்பு அவா் கொள்ளப்படவில்லை, அமெரிக்கா பொய்யான ஒரு தகவலைப் பரப்புகிறது என்றும் சொல்கிறார்கள்.

அவா் கொள்ளப்பட்டாரா இல்லையா என்ற விவாதத்திற்குள் நாம் இந்தக் கட்டுரை மூலம் நுழையவில்லை.

ஆனாலும் அவரின் மரணச் செய்தி அறிவிக்கப்பட்டவுடன் அவரைப் பற்றி மக்கள் மத்தியில் பரப்பப்படும் ஒரு செய்தியைப் பற்றியே நாம் இங்கு ஆய இருக்கிறோம்.

உஸாமாதான் மஹ்தியா?

உஸாமா பின் லாடன் எப்போது அமெரிக்காவை தனது எதிரி என்று அறிவித்து அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தில் குதித்தாரோ அந்த நாளிலிருந்து அவரை ஆதரிக்கும் மக்களால் அவா் மஹ்தியாகத் தான் இனங்காணப்பட்டார்.

மஹ்தி (அலை) அவா்கள் வந்து விட்டார்கள், அமெரிக்காவை அழித்து ஒழிக்கப் போகிறார்கள் என்ற கோஷம் கடந்த பத்து ஆண்டுகளாகவே மக்கள் மத்தியில் ஒளித்துக் கொண்டு தான் இருக்கிறது.

உண்மையில் மஹ்தி பற்றிய உண்மையான தகவல்கள் இந்த சமுதாயத்திற்கு தெரியாத காரணத்தினால் தான் இது போன்ற கருத்துக்கள் மக்கள் மத்தியில் வெகுவான பாதிப்பை உண்டாக்கியது.

உஸாமாவின் மரணம் மஹ்தியின் வருகைக்கான அறிவிப்பா?

தற்போது உஸாமா பின் லாதின் கொலை செய்யப்பட்டுவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு எவ்வௌவு உண்மையானது என்பதைப் பற்றி நாம் ஆய்வு செய்ய முற்படவில்லை.

ஆனால் உஸாமாவின் மரணத்தின் மூலம் மக்கள் மத்தியில் மீண்டும் பரப்பப்படும் மஹ்தி நம்பிக்கை பற்றித்தான் பார்க்க இருக்கிறோம்.

அதாவது பாகிஸ்தானில் வைத்து பின் லாடன் கொள்ளப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பை வெளியிட்ட சில நேரங்களிலேயே இணையதளங்கள் மூலமாகவும், குறுந்தகவல்கள் மூலமாகவும் உஸாமா இறந்துவிட்டார் என்பது பெரிய விஷயமல்ல அவருடைய மரணம் தான் மஹ்தியின் வருகைக்கான ஆதாரம் என்பது போன்ற செய்திகளும், ஒரு மஹ்தியின் இறப்பு இன்னொரு மஹ்தியின் வருகைக்கான ஆதாரமே என்றும் மக்கள் மத்தியி்ல் குறுந்தகவல்கள் மின்னஞ்சல்கள் போன்றவை பரப்பப்படுகின்றன.

இந்த விஷயத்தில் மஹ்தி என்பவரைப் பற்றிய செய்திகளைப் பார்ப்பதற்கு முன்பதாக உஸாமாவிற்கும் மஹ்திக்கும் தொடர்புண்டா என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

பின் லாடனைப் பொருத்தவரையில் அவர் ஒரு பிரபல ஆயுதக் குழுவின் தலைவராகத் தான் இருந்தார். அவர் எந்த நாட்டுக்கும் ஆட்சியாளராகவோ மண்ணராகவோ இருக்கவில்லை.

அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின் எதிரியாகவிருந்து அவா்களுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்ட ஒருவர் தான் இந்த பின் லாடன்.

ஆனால் இன்று நமது இஸ்லாமியர்களில் சிலர் பின் லாடன் மீது கொண்ட அதீத பாசத்தினால் இப்படிப்பட்ட கருத்துக்களை பரப்புகிறார்கள் இது முற்றிலும் தவறான ஒன்றாகும். ஏன் என்றால் பின் லாடனுக்கும் அவருடைய வருகைக்கும், அல்லது அவருடைய மரணத்திற்கும் மஹ்தியின் வருகைக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

மஹ்தி (அலை) பற்றிய நபியின் முன்னறிவிப்பு.

மஹ்தி (அலை) பற்றிய செய்திகளை சரியான முறையில் நாம் அறிந்து கொண்டால் பின் லாடன் தான் மஹ்தியா? அல்லது பின் லாடனின் மரணத்திற்கும் மஹ்திக்கும் தொடர்புண்டா என்பவற்றை நாம் அறிந்து கொள்ள முடியும்.

ஏன் என்றால் இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்த வரையில் மஹ்தி என்ற மனிதரின் வருகைப்பற்றி நபியவர்கள் சொன்ன செய்திகளை நாம் பார்க்கும் போது மஹ்தி அவா்கள் இஸ்லாமிய ஆண்மீகத் தலைவராகவோ, அல்லது மார்க்க சட்ட நிபுணராகவோ இந்த உலகுக்கு வரமாட்டார் மாறாக ஒரு சிறப்பான ஆட்சியாளராக அவர் வருவார். அவரது ஆட்சி பரந்து விரிந்து இருக்கும். அவரது ஆட்சியில் செல்வம் செழித்து ஓடும். நீதியும் நேர்மையும் கோலோச்சும் என்பதுதான் நபியின் முன்னறிவிப்பில் அடங்கியுள்ள தத்துவமாகும்.
மஹ்தீ என்பவர் என் வழித்தோன்றலில் ஃபாத்திமாவின் வழியில் வருவார் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் 
(நூல் அபூதாவூத் – 4284)
அரபு தேசத்தை என் பெயருடையை என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஆட்சி செய்யும் வரை உலகம் அழியாது என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். 
(நூல் திர்மிதி – 2230)
பூமியின் வாழ்நாளில் ஒரே ஒரு நாள் மீதமாக இருந்தால் கூட அந்த நாளை அல்லாஹ் நீட்டுவான். அதில் என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை அல்லாஹ் அனுப்புவான். அவர் பெயரும் என் பெயரும் ஒன்றாக இருக்கும். அவரது தந்தையின் பெயரும் என் தந்தையின் பெயரும் ஒன்றாக இருக்கும். அநீதியால் நிரப்பப்பட்டுள்ள பூமி முழுவதும் நீதியால் நிரப்புவார் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
(நூல் அபூதாவூத் – 4282)

உஸாமாதான் மஹ்தியென்று சொல்லக் கூடியவர்கள் அல்லது உஸாமாவின் மரணம் மஹ்தியின் வருகைக்கான ஆதாரம் என்றெல்லாம் சொல்பவர்கள் மேற்கண்ட ஹதீஸ்களை நன்கு கவணிக்க வேண்டும்.

மஹ்தி என்பவர் நபியவர்களின் வழித் தோன்றலில் வருவார் என்று நபி (ஸல்) அவா்களே குறிப்பிடுகிறார்கள். ஆனால் உஸாமா பின் லாடனுக்கும் நபியின் வழித் தோன்றலுக்கும் தொடர்பில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதே போல் அரபு தேசத்தை என் பெயருடையை என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஆட்சி செய்யும் வரை உலகம் அழியாது என்று நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஆனால் உஸாமா பின் லாடன் ஒரு நாள் கூட அரபு தேசத்தின் ஆட்சியாளராக இருக்கவில்லை.

மஹ்தி அவர்கள் புமி முழுவதையும் நீதியால் நிரப்புவார் என்ற நபியின் முன்னறிவிப்புக்கும் உஸாமாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மொத்தத்தில் பின் லாடனுக்கும் மஹ்தி (அலை) அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது போல் உஸாமாவின் மரணம் தான் மஹ்தியின் வருகைக்கான ஆதாரம் என்றும் எந்தத் தகவலும் இல்லை.

மஹ்தி (அலை) அவா்கள் வருவார்கள் சிறப்பான ஆட்சியாளராக இருப்பார்கள் போன்றவை மட்டும் தான் உள்ளதே தவிர வேறு எதுவும் நபியவர்களினால் சொல்லப்படவில்லை. இதைத் தாண்டி மஹ்தி விஷயமாக சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும் ஷீயாக்களினால் இட்டுக் கட்டப்பட்டவை என்பதையும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மேற்கண்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் மஹ்தீ என்ற பெயரில்  ஒரு மன்னர் வருவார் என்று முன்னறிவிப்புச் செய்கின்றன. இந்த முன்னறிவிப்பில் நாம் செயல்படுத்துவதற்கு ஒரு விஷயமும் இல்லை. நமது காலத்தில் அப்படி ஒருவர் வந்தால் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் முன்னறிவிப்பு நிறைவேறி விட்டது என்று புரிந்து கொள்ளலாம். அப்படி வராவிட்டால் எதிர்காலத்தில் அவர் வருவார் என்று கருதிக் கொள்ள வேண்டும்.
இதைத் தவிர மார்க்க ரீதியாக மஹ்திக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.
உஸாமாவுக்கும் மஹ்தியின் வருகைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை

Thanks To: www.rasminmisc.tk

0 comments:

Post a Comment