Showing posts with label பித்அத். Show all posts
Showing posts with label பித்அத். Show all posts

Saturday, July 9, 2011

பாவியாக்கும் பராஅத் இரவும் மறுத்துரைக்கும் மத்ஹபு நூல்களும்


லைலத்துல் பராஅத், பராஅத் இரவு, ஷபே பராஅத் என்று பல பெயர்களில் கொண்டாடப்பட்டுவரும் இந்த இரவு, நமது மக்களால் மாண்பார் இரவுகளில் ஒன்றாகக் கருதப்பட்டுவருகிறது.‘லைலத்துல் கத்ரு, லைலத்துல் ஜும்ஆ’ போன்ற இரவுகளுக்கு ஆதாரங்கள் உள்ளன.



ஆனால் ‘லைலத்துல் பராஅத்’ என்ற சொல் குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ இடம் பெறவில்லை. இந்த இரவைக் கொண்டாட வேண்டுமென்றோ இபாதத்துகளில் ஈடுபட வேண்டுமென்றோ குர்ஆன், நபிமொழிகளில் எந்தவித ஆதாரமும் இல்லை.


பின் ஏன் இந்த இரவைக் கொண்டாடுகிறார்கள்?
இந்த இரவைக் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இதைப்பற்றி நமது மக்களின் நம்பிக்கை என்ன? அவர்கள் இதை கொண்டாடுவதற்குக் கூறும் காரணங்கள் என்ன? என்பதைப் பார்ப்போம்.
1. பராஅத் இரவு
பராஅத் இரவு குர்ஆன் அருளப்பட்ட இரவு என்றும் ‘நிச்சயமாக நாம் பாக்கியம் மிக்க இரவில் இந்த குர்ஆனை அருளினோம். (44:03) என்று வரும் குர்ஆன் வசனம் இந்த பராஅத் இரவையே குறிக்கிறது என்று கூறுகின்றனர்.
இந்த வசனம் ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் நாளான பராஅத் இரவைக் குறிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
‘பாக்கியம் மிக்க இரவு’ எது என்பதை வேறு சில வசனங்கள் தெளிவு படுத்துகின்றன.
‘திருக்குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது’என்று திருக்குர்ஆன் 2:185-வது வசனம் கூறுகிறது.
இதிலிருந்து இந்த பாக்கியம் மிக்க இரவு ரமளான் மாதத்தில் தான் இருக்கிறது என்று மிகத் தெளிவாகவே தெரிந்து கொள்ளலாம். அது ரமளானின் எந்த இரவு என்பதை நாம் தேடிப்பார்க்கும் போது ‘லைலத்துல் கத்ர் இரவுpல்’ நாம் திருக்குர்ஆனை அருளினோம் (97:01)என்று அல்லாஹ் மற்றொரு வசனத்தில் கூறுகிறான்.
எனவே இவ்வசனத்தில் கூறப்படுகின்ற ‘பாக்கியம் மிக்க இரவு’ என்பதும்,’லைலத்துல் கத்ர் இரவு’என்பதும் ரமளான் மாதத்தில் வருகின்ற ஒரே இரவு தான் என்பது தெளிவாகிறது.
எனவே அந்த இரவு ஷஃபானின் 15-வது இரவு என வாதிடுவோருக்கு குர்ஆனிலோ ஹதீஸிலோ எந்த வித ஆதாரமும் இல்லை. அவ்வாறு திருக்குர்ஆன் ஷஃபானின் 15-வது இரவில் அருளப்பட்டது எனக் கூறுவது ‘ரமளானில் தான் குர்ஆன் அருளப்பட்டது’ என்ற இறைவனின் சொல்லுக்கு மாற்றமானதாகும்.
44:03 என்ற வசனத்தை ஆதாரமாகக் கொண்டுதான் பராஅத் என்று ஒரு இரவை முஸ்லிம்கள் அவர்களாகவே உருவாக்கிக் கொண்டாடி வருகின்றனர்.
இல்லாத ஒரு இரவைக் கற்பனை செய்து சிலர் அல்லாஹ்வின் வசனத்திற்கு பொருத்த மற்ற விளக்கம் கொடுத்து அந்தநாளுக்கென சிலசடங்குகளை உருவாக்கி அறியாத மக்களை தவறான வழிகளில் வழிநடத்துகின்றனர்.
அடுத்து, ஷஃபான் மாதத்தில் குர்ஆன் அருளப்பட்டதாக நம்புவதும் ‘ரமளானில் அருளப்பட்டது’ என நம்புவதற்கு எதிரானதாகும்.
ஷஃபானில் திருக்குர்ஆன் அருளப்பட்டது என்போர் மேலும் சில காரணங்களை முன் வைக்கின்றனர். அதாவது:-
குர்ஆன் இரண்டு இரவுகளில் அருளப்பட்டது. பாதுகாக்கப்பட்ட ஏட்டிலிருந்து முதல் வானத்திற்கு அருளபட்டது ஒரு இரவு. அங்கிருந்து சிறிது சிறிதாக நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது மற்றொரு இரவு எனக் கூறுகின்றனர். இதற்கு ஏற்கத்தக்க எந்த நபிமொழியும்; சான்றாக இல்லை. இந்த இரவுக்கும் பராஅத் இரவுக்கும் சம்பந்தமே இல்லை.
2. மனிதனின் விதி
இந்த இரவில் தான் மனிதனின் விதி நிர்ணயிக்கப் படுகிறது என்று நபி (ஸல்)அவர்கள் சொன்னார்கள் என உத்மான் பின் முஹம்மது பின் முகீராஅறிவிக்கிறார்கள் என்ற ஒரு நபிமொழியை பராஅத் இரவின் மாண்புக்கு ஆதாரமாகமுன் வைக்கின்றனர்.இந்த அறிவிப்பாளர் தாபியீன்களில் இறுதியானவர் என்றும்,தபஉத் தாபியீன்களைச்சார்ந்தவர் என்றும் இருவிதமான கருத்துகள் உள்ளன. இந்த ஹதீஸில் ஸஹாபியின்தொடர்விட்டுப் போனதால் இந்த நபி மொழி ஏற்கத்தக்கதல்ல.

3. ஆடுகளின் முடிஅளவு மன்னிப்பு
நபி (ஸல்) அவர்கள்,
‘ஷஃபானில் வரும் பராஅத் இரவின் பாதியில் இறைவன் கீழ் வானத்தில் இறங்கி பனீ கலபு கூட்டத்தினரின் (ஆயிரமாயிரம்) ஆடுகளுக்கு இருக்கும் உரோமங்களின் எண்ணிக்கையிலும் அதிகமானவர்களை மன்னிப்பான் என்றும்;, நரக நெருப்பிலிருந்து விடுதலை செய்வான் என்றும் கூறினார்கள்’


என்னும் நபிமொழியை ஆயிஷh(ரலி)அவர்கள் அறிவித்ததாகக் கூறுகின்றனர். (அறிவிப்பவர்: உர்வா அவர்கள்) இந்த நபி மொழியை அபூகதீர் என்பவர் யஹ்யாவிடமிருந்தும், யஹ்யா என்பவர் உர்வாவிடமிருந்தும், உர்வா என்பவர் இதை அறிவிப்பதாகக் கூறுகின்றனர். இவர்களில் எவரும் நேரில் சந்திக்கவில்லை என்பதால் இந்த ஹதீஸும் ஏற்பதற்கில்லை.
4. அடுத்து, பராஅத் நோன்பு
ஷஃபானின் பதினைந்தாவது இரவு வந்தால் நோன்பு வையுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சில ஹதீஸ்கள் உள்ளன.இதை அறிவிக்கும் அபூ ஸப்ரா பின் அப்துல்லாஹ் பின் அபீபக்ர் என்பவர் பொய்யர் என இமாம் அஹ்மத் அவர்கள் தெரிவிக்கின்றனர்.ஆனால், ஆதாரபூர்வமான ஹதீஸ்களில்; ஷஃபானின் பாதி வந்தால் நோன்பு வைக்கக்கூடாது என வருகிறது.

மாறாக இதற்கு மாற்றமாக ஒவ்வொரு மாதமும் வழமையாக நோன்பு வைப்பவர்களைத் தவிர வேறு யாரும் அன்றைய தினத்திலிருந்து நோன்பு நோற்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.எனவே பராஅத் இரவுக்கென தனியாக நோன்பு எதுவும் கிடையாது.
இவ்வாறு நீங்கள் ஏற்றுள்ள மத்ஹபு நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. ஷாஃபி மத்ஹப் நூலான இஆனதுத் தாலிபீன் என்ற நூலில் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள்
وكذلك يحرم الصوم بعد نصف شعبان لما صح من قوله صلى الله عليه وسلم إذا انتصف شعبان فلا تصوموا ( إعانة الطالبين ج: 2 ص: 273)
ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராம் ஆகும். ஏனென்றால் ” ஷஅபான் பாதியயை அடைந்து விட்டால் நோன்பு நோற்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. (நூல் : இஆனா பாகம் : 2 பக்கம் : 273)


5. விஷேச ஆராதனைகள்,யாஸீன்கள்,ராத்தீபுகள்.
1.முதலில் மூன்று யாஸீன்கள்:-
இந்த இரவில் அடுத்தடுத்து விசேச வணக்கங்கள் தொடர்ந்து
நடை பெற்றுக்கொண்டிருக்கும்.


முதலாவதாக மஃரிப் தொழுததும் மூன்றுயாஸீன்கள் ஓதிஹதியா செய்யவேண்டும் என முல்லாக்கள் கூறி அதைவியாபாரமாக்கி விட்டார்கள்.  எனவே போட்டி போட்டுக்கொண்டு,
1. பாவ மன்னிப்பிற்கும்
2. ரிஸ்கு-இரண பாக்கியத்திற்கும்
3. நீண்ட ஆயுளுக்கும்


என மூன்று யாஸீன்கள் ஓதுவார்கள்.
2. அடுத்து ஆங்காங்கே திக்ருகள், ராத்தீபுகள், குத்பிய்த்துகள்,
மவ்லிதுகள் என வரிசையாக நடைபெறும்.



மார்க்கத்தின் பெயரால் நடக்கும் இந்தப் போலிச் சடங்குகளுக்கு
எந்த ஆதாரமும் கிடையாது.



6. விஷேச உணவு படைப்புகள் 
இந்த இரவில் அல்லாஹ் வின் அருள் பெருகிடவும் உணவு பாக்கியங்கள் பெற்றிடவும் ஊருக்கேற்றாற் போல் பல் வேறு விதமான பலகாரங்களையும், உணவுகளையும் படைத்து அமர்க்களப்படுத்து வார்கள். (யாஸீன் ஓதியவர்களை மகிழ்விக்கத்தான்.)


7. கப்று ஸியாரத்
இவ்வளவு நாட்களும் நினைவு படுத்த முடியாது போனதற்காக இறந்த போன பெற்றோர்கள்,உறவினர்கள், அவ்லியாக்கள் சமாதிகளுக்குச் சென்று விசேச ஸியாரத்,பிரார்த்தனைகள் நடை பெறும்.


8. விஷேச வணக்கங்கள்:- 
முதல் தொழுககை : இஷாத் தொழுகைக்கு முன் இரண்டிரண்டு ரக்அதகளாக நான்கு ரக்அத்கள்தொழவேண்டும்.ஒவ்வொரு ரக்அத்திலும் சூரா பாத்திஹா வுக்குப்பின் குல்ஹுவல்லாஹ் சூராவை 25 முறைகள் ஓதவேண்டும்.

இரண்டாவது தொழுகை: இஷhத் தொழுகைக்குப் பின் இரண்டிரண்டு ரக்அதகளாக 30 ரக்அத்கள்தொழவேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் சூரா பாத்திஹாவுக்குப்பின் குல்ஹுவல்லாஹ் சூராவை 3 முறைகள் ஓதவேண்டும்.
மூன்றாவது தொழுகை : இஷாத் தொழுகைக்கு பின் இரண்டிரண்டு ரக்அதகளாக 12 ரக்அத்கள்தொழவேண்டும்.ஒவ்வொரு ரக்அத்திலும் சூரா பாத்திஹாவுக்குப்பின் குல்ஹுவல்லாஹ் சூராவை 5 முறைகள் ஓதவேண்டும்.
நான்காவது தொழுகை : இஷhத் தொழுகைக்குப் பின் இரண்டிரண்டு ரக்அதகளாக 100 ரக்அத்கள்தொழவேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் சூரா பாத்திஹாவுக்குப்பின் குல்ஹுவல்லாஹ் சூராவை 3 முறைகள் ஓதவேண்டும்.
‘அலியே! ஷஃபானின் 15-வது இரவில் 100 ரக்அத்துகள் தொழுவதை மறந்து விடாதே! அவற்றில் குல்ஹுவல்லாஹ் 100 தடவைகள் ஓதுவதை மறந்து விடாதே!’ போன்ற பல இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் உள்ளன. என இப்னுல் கையூம் (ரஹ்) அவர்கள் தமது நக்லுல் மன்கூள் நூலில் குறிப்பிடுகிறார்கள்.
ஐந்தாவது தொழுகை : தஸ்பீஹ் தொழுகை. முன்னூறு தஸ்பீஹ்கள் ஓதித் தொழும் இந்தத் தொழுகைக்கும் ஆதாரபூர்வமான எந்த ஹதீஸீம் கிடையாது.
இவற்றையெல்லாம் தெடர்ந்து நடத்திவிட்டு இறுதியாக நோன்பையும் நோற்றுக் கொள்வார்கள்.
மார்க்கத்தின் பெயரால் உலா வரும் இந்தப் போலிச் சடங்குகளையும் பித்அத்களையும் இவர்கள் ஏற்றிருக்கும் மத்ஹபு கிதாபுகள் கூட வன்மையாகக் கண்டிக்கிறது.
மத்ஹபைப் பின்பற்றுபவர்கள்தான் பள்ளிவாசலுக்குத் தொழவரவேண்டும் என்று ஒவ்வொரு பள்ளியிலும் போடு மாட்டி வைத்துள்ளிர்களே நீங்கள் உங்கள் மத்ஹபிலேயே ஹராம் எனக் கூறப்பட்ட ஒரு காரியத்தை எப்படிச் செய்கிறீர்கள். இவ்வாறு மத்ஹப் நூற்களில் உள்ளது உண்மைதானா? என்று உங்களுடைய ஆலிம் பெருமக்களிடம் கேட்டுப்பாருங்கள். உண்மையை நிலையை உணர்வீர்கள்.
ومن البدع المذمومة التي يأثم فاعلها ويجب على ولاة الأمر منع فاعلها صلاة الرغائب اثنتا عشرة ركعة بين العشاءين ليلة أول جمعة من رجب وصلاة ليلة نصف شعبان مائة ركعة (إعانة الطالبين ج: 1 ص: 270)
ரஜப் மாத்தின் முதல் வெள்ளிக் கிழமை இரவில் மஃரிப் , இஷாவிற்கு மத்தியில் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுவதும். ஷஅபான் பதினைந்தாம் இரவில் நூறு இரக்அத்துகள் சிறப்பாக தொழுவதும் பழிக்கப்படவேண்டிய பித்அத்துகளாகும். அவ்வாறு தொழுபவன் பாவியாவான். இதை செய்பவனை தடுப்பது ஆட்சியாளர்கள் மீது கடமையாகும். (ஷாஃபி மத்ஹப் நூல் : இஆனா பாகம் : 1 பக்கம் : 270 )
فائدة أما الصلاة المعروفة ليلة الرغائب ونصف شعبان ويوم عاشوراء فبدعة قبيحة وأحاديثها موضوعة (فتح المعين ج: 1 ص: 270)
(ரஜப் மாதத்தின்) குறிப்பிட்ட ஒரு இரவிலும், ஷஅபான் பதினைந்தாம் இரவிலும் , ஆஷுரா உடைய நாளிலும் தொழப்படும் குறிப்பிட்ட தொழுகைகள் மோசமான பித்அத்களாகும். அவைகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டவையாகும் (ஷாஃபி மத்ஹப் நூல் : ஃபத் ஹுல் முயீன் பாகம் : 1 பக்கம் : 270 )
وإسراج السرج الكثيرة في السكك والأسواق ليلة البراءة بدعة وكذا في المساجد (البحر الرائق ج: 5 ص: 232)
பராஅத் இரவில் தெருக்களிலும், கடைவீதிகளிலும், அவ்வாறே பள்ளிவாசல்களிலும் அதிகமான விளக்குகளை எரிய வைப்பது பித்அத்தான காரியமாகும். (ஹனபி மத்ஹப் நூல் அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 5 பக்கம் : 232)
அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்களே உங்களுடைய ஆலிம்கள் எந்த மத்ஹபை பின்பற்ற வேண்டும் என் உங்களுக்குப் போதிக்கிறார்களோடு அந்த மத்ஹப் கிரந்தங்களில்தான் நாங்கள் எடுத்துக்காட்டிய மேற்கண்ட கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது. இதனை என்றைக்காவது உங்களுடைய ஆலிம் பெருமக்கள் உங்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் மத்ஹப் நூற்களிலேயே செய்யக் கூடாது . பித்அத், தடுக்கப்படவேண்டிய மோசமான காரியம் என்று கூறப்பட்ட விஷயங்களைத்தான் உங்களோடு சேரந்து உங்களுடைய ஆலிம் பெருமக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தே இவர்கள் மார்க்கத்தை மட்டுமல்ல மத்ஹபையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Friday, June 24, 2011

ரமழான் மாதம் தொடர்பான ஆதாரமற்ற செய்திகள்

அருள்மிகு ரமழான் மாதம் நம்மை முன்னோக்கி வரக்கூடிய இந்நேரத்தில் அந்த மாதம் தொடர்பாக பதியப்பட்டுள்ள ஆதாரமற்ற செய்திகளை நாம் அறிந்து கொள்வது சாலச்சிறந்ததாகும்.

ஏன் என்றால் எது சரியான தகவல், எது பிழையான தகவல் என்ற பிரித்தறியும் தன்மை நம்மிடம் இருந்தால் தான் நமது வாழ்க்கையில் இறைவனுக்கு செய்யக்கூடிய கடமைகளை நாம் சரியாக நிறை வேற்ற முடியும்.

பல சந்தர்பங்களில் சரி என்று நினைத்துக் கொண்டு தவறை நாம் செய்து கொண்டிருப்போம் தவறு என்று நினைத்துக் கொண்டு சரியைச் செய்யாமலும் இருப்போம். அதிலும் குறிப்பாக ரமழான் மாதத்தைப் பொருத்தவரையில் அந்த மாதத்தில் அதிகமான நன்மைகளை நாம் செய்ய வேண்டும் என்ற நல்லண்ணத்தின் காரணத்தினால் ஹதீஸ் என்று யார் எதைச் சொன்னாலும் நாம் அதனை செயல்படுத்த முன்வந்து விடுகிறோம்.
இதன் காரணத்தினால் தான் இந்தக் கட்டுரை மூலமாக ரமழான் பற்றி மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கக் கூடிய ஹதீஸ்களை நாம் தொகுத்துத் தந்துள்ளோம்.

ரமழானின் மூன்று பகுதிகள்.

“ரமலானின் முதல் பகுதி அருளாகவும், நடுப்பகுதி மன்னிப்பு வழங்கப்படக் கூடியதாகவும், இறுதிப் பகுதி நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கப் பெறக் கூடியதாகவும் இருக்கிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்:  இப்னு குஸைமா (பாகம்: 3 பக்கம்: 191), ஷுஅபுல் ஈமான் (பைஹகீ, பாகம்: 3, பக்கம்: 306)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அலீ பின் ஸைத் பின் ஜுத்ஆன் என்பவர் இடம் பெறுகிறார். இவரை அஹமத் பின் ஹன்பல் போன்றோர் விமர்சித்துள்ளனர்.   

(நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்: 5, பக்: 156)

மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் யூஸுப் பின் ஸியாத் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரைப் பற்றி புகாரீ அவர்கள், “ஹதீஸ் துறையில் நிராகரிக்கப்பட்டவர்” என்றும் தாரகுத்னி அவர்கள், “பொய்யான செய்தியை அறிவிப்பதில் பிரபலமானவர்” என்றும் இன்னும் பல்வேறு அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

(நூல்: லிஸானுல் மீஸான், பாகம்: 6, பக்:321)

மாதத்தின் தலைவர் ரமழானாகும்?

அபீ ஸயீத் அல் குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள்:  “மாதங்களின் தலைவர் ரமலான் மாதமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல்: தப்ரானி கபீர், பாகம்: 9 பக்:205 - ஷுஅபுல் ஈமான், பாகம்: 3 பக்: 314)

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் யஸீத் பின் அப்துல் மலீக் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவராவார். மேலும் இதைப் பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களே இதன் அறிவிப்பாளர் தொடரில் பலவீனம் இருக்கிறது என்று கூறியுள்ளார்கள்.

இதே செய்தி தப்ரானீ அவர்களின் அல்முஃஜமுல் கபீரில் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது அறிவிப்பாளர் தொடர் துண்டிக்கப்பட்டதாகும் என்று இமாம் ஹைஸமீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

மாலை நேரத்தில் பல் துலக்கக் கூடாதா?

அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ”நீங்கள் நோன்பு வைத்தால் காலையில் பல் துலக்கி விடுங்கள். மாலையில் துலக்காதீர்கள்! ஏனெனில் மாலை நேரத்தில் உதடுகள் காய்ந்த நிலையில் நோன்பாளி இருந்தால்  கியாம நாளில் அவருடைய இரண்டு கண்களுக்கு மத்தியில் ஒளி உண்டாகும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்:  தப்ரானி கபீர் (பாகம்: 4, பக்கம்: 78)

இதில் அபுஅம்ரு என்ற கைஸான் என்பவர் இடம் பெறுகிறார். இவரை ஏராளமான அறிஞர்கள் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளார்கள்.

(நூல்: மீஸான் அல் இஃதிதால், பாகம்:5, பக்: 205)

பிரயாணத்தில் நோன்பு நோற்றால் அரஃபா மலையளவு பாவமா?

அபூ துஃமா என்பவர் அறிவிக்கிறார்:  நான் இப்னு உமரிடம் இருக்கும் போது ஒரு மனிதர் வந்து அப்துர்ரஹ்மானே! நான் பயணத்திலும் நோன்பு வைப்பதற்குச் சக்தி பெற்றுள்ளேன் (நான் நோன்பு நோற்கலாமா?) என கேள்வி கேட்டார். அதற்கு இப்னு உமர் அவர்கள், யார் அல்லாஹ்வுடைய அனுமதியை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவன் மீது அரபா மலை அளவு பாவம் ஏற்பட்டு விடும் என்று அல்லாஹ்வின் தூதர் கூற செவியுற்றுள்ளேன்.

நூல்: அஹ்மத் (5135), தப்ரானீ கபீர்

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் “இப்னு லஹிஆ” என்பவர் மனன சக்தியில் குறைவுடையவர் என்றும் பலவீனமானவர் என்றும் பல அறிஞர்கள் குறை கூறியுள்ளனர். (தஹ்தீபுத் தஹ்தீப்)

பரிந்துரை செய்யும் நோன்பும், குா்ஆனும்.

அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அறிவிக்கிறார்கள்: “நோன்பும் குர்ஆனும் கியாம நாளில் அடியானுக்குப் பரிந்துரை செய்யும். நோன்பு இறைவனிடத்தில் முறையிடும்.  “என் இறைவனே! இந்த அடியானை நான்  பகலில் உணவை விட்டும் ஆசைகளை விட்டும் தடுத்து விட்டேன். இவருடைய விஷயத்தில் என்னுடைய பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக!” என்று கோரும். குர்ஆன் கூறும்: “(யா அல்லாஹ்!) இரவு நேரங்களில் அவனுடைய தூக்கத்தைத் தடுத்து விட்டேன். ஆகவே இவர் விஷயத்தில் என்னுடைய பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக” என்று கோரும். அவை இரண்டின் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அஹ்மத் (6337)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் “இப்னு லஹிஆ” என்பவர் மனன சக்தியில் குறைவுடையவர் என்றும் பலவீன மானவர் என்றும் பல அறிஞர்கள் குறை கூறியுள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்)

ரமலான் சீராகி விட்டால், வருடம் முழுவதும் சீராகிவிடும்...

“ரமலான் (மாதம் நற்காரியங்கள் செய்வதன் மூலம்) சீராகி விட்டால் அந்த வருடம் (முழுவதும்) சீராகி விடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: ஷுஅபுல் ஈமான் (பைஹகீ) பாகம்: 3, பக்கம் 340

இச்செய்தியில் இடம் பெறும் ஆறாவது அறிவிப்பாளர் அபூமுதீஃ என்ற அல்ஹகம் பின் அப்துல்லாஹ் அல்பல்கீ என்பவர் இடம் பெற்றுள்ளார். 

இவர் பலவீனமானவர். எனினும் அப்துல் அஸீஸ் பின் அபான் அல்பல்கீ என்பவர் இடம் பெற்றிருப்பதே சரியானதாகும் என்று கூறும் இமாம் பைஹகீ அவர்கள் இவரும் பலவீனமானவர்  என்று அதே நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

ரமலான் என்று கூறக்கூடாதா?

“ரமலான் என்று கூறாதீர்கள்! ஏனெனில் அது அல்லாஹ்வுடைய திருநாமங்களில் ஒன்றாகும். எனவே நீங்கள் ஷஹ்ரு ரமலான் (ரமலான் மாதம்) என்று கூறுங்கள்!” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: பைஹகீ (7293)

இச்செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் முஹம்மத் பின் அபீ மிஃஷர் என்பவர் பலவீனமானவர் என்பதை இதைப் பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களே இந்த ஹதீஸின் கீழே குறிப்பிட்டுள்ளார்கள்.

தக்க காரணமின்றி நோன்பை விட்டால்.....

“நோயோ தக்க காரணமோ இன்றி ரமலானில் ஒரு நாள் நோன்பை விட்டு விட்டால் காலமெல்லாம் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி (655)

இந்தச் செய்தியைப் பற்றி ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் புகாரியின் விரிவுரை நூலான பத்ஹுல் பாரியில்  குறிப்பிடும் போது, “இந்தச் செய்தியில் மூன்று குறைபாடுகள் உள்ளன. 1. அறிவிப்பாளரில் குளறுபடிகள் 2. இதில் இடம் பெறும் அபுல் முதவ்விஸ் என்பவரின் விவரம்  தெரியவில்லை. 3. இதன் இரண்டாவது அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் செவியுற்றாரா? என்பதில் ஐயம் உள்ளது” என்று கூறி இந்தச் செய்தி பலவீனமானது என்பதைத் தெளிவு படுத்தியுள்ளார்கள்.

ரமழான் முதல் நாள் காலையை அடைந்தால் பாவமன்னிப்பு.

“ரமலான் மாதத்தின் முதல் நாள் காலையை அடைந்த எந்த முஸ்லிம்களின் பாவத்தையும் அல்லாஹ் மன்னிக்காமல் விடுவதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி) அவர்கள்.

நூல்கள்: தாரிக் பக்தாத், பாகம்: 5, பக்கம்: 90, அல்இலலுல் முதநாஹிய்யா

இச்செய்தியில் இடம் பெற்றிருக்கும் இரண்டாவது அறிவிப்பாளர் ஸியாத் பின் மைமூன் என்பவரும், மூன்றாவது அறிவிப்பாளர் ஸல்லாம் அத்தவீல் என்பவரும் பெரும் பொய்யர்கள்.

இவர்களை இமாம் புகாரீ, நஸயீ, மற்றும் தாரகுத்னீ ஆகியோர் கடுமையாக விமர்சனம் செய்ததை இதைப் பதிவு செய்தவர்களில் ஒருவரான இமாம் இப்னுல் ஜவ்ஸீ தனது அல்இலலுல் முதநாஹிய்யா என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

ரஜப் மாதத்தில் ரமழானைப் பற்றிய துஆ.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:  நபி (ஸல்) அவர்கள் ரஜப் மாதம் வந்து விட்டால் “யா அல்லாஹ் ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாதத்திலும் எங்களுக்கு பரகத் செய்வாயாக!’ எங்களுக்கு ரமலான் மாதத்தையும் அடையச் செய்வாயாக!“ என்று பிரார்த்தனை செய்வார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்கள்: அஹ்மத் (2228)

பஸ்ஸார், தப்ரானி

இதன் அறிவிப்பாளர் தொடரில் ஸாயிதா பின் அபிர்ருகாத் என்பவர் இடம் பெறுகிறார். இவரை இமாம் புகாரீ அவர்கள் ஹதீஸ் துறையில் நிராகரிக்கப்பட்டவர் என்று விமர்சனம் செய்துள்ளார். 

(நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்:  3 பக்கம்:  95)

மதீனாவில் நோன்பு மற்ற இடங்களைவிட சிறந்ததா?

“மதீனாவில் நோன்பு வைப்பது மதீனா அல்லாத மற்ற ஊர்களில் ஆயிரம் நோன்பு வைப்பதை விட சிறப்பானதாகும். மேலும் மதீனாவில்  ஜும்ஆவை நிறைவேற்றுவது மற்ற ஊர்களில் நிறைவேற்றும் ஆயிரம் ஜும்ஆவை விட சிறப்பானதாகும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று பிலால் பின் ஹாரிஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(நூல்: தப்ரானீ – கபீர் பாகம்: 1, பக்கம்: 372)

இதன் அறிவிப்பாளர் தொடரில் அப்துல்லாஹ் பின் கஸீர் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரும் பலவீனமானவர். (லிஸானுல் மீஸான் பாகம்: 3, பக்கம்: 329)

பத்து நாள் இஃதிகாப் இரண்டு ஹஜ்ஜுக்கு சமனானதா?

“யார் ரமலான் மாதத்தில் பத்து நாட்கள் இஃதிகாப் இருக்கிறாரோ அவர் இரண்டு ஹஜ், மற்றும் இரண்டு உம்ரா செய்தவர் போன்றவராவார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் ஹஸன் (ரலி), நூல்:  ஷுஅபுல் ஈமான், பாகம்: 3, பக்கம்: 425

இதில் முஹம்மத் பின் ஸாதான் என்பவர் இடம் பெறுகிறார். இவருடைய ஹதீஸ்கள் நிராகரிக்கப்படவேண்டியவை என்று புகாரீ அவர்கள் உட்பட பலர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். மேலும் இச்செய்தியில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பாளர் அன்பஸா பின் அப்துர் ரஹ்மான் என்பவரையும் இமாம் புகாரீ போன்றோர், இவருடைய ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை” என்று கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீப் தஹ்தீப், பாகம் 8 :  பக்கம்: 143, பாகம்:  9, பக்கம்: 145)

மக்காவில் ரமழானை அடைவது.

“யார் ரமலானை மக்காவில்  அடைந்து, (அதிலே) நோன்பு வைத்து இயன்ற அளவு இரவுத் தொழுகை தொழுகிறாரோ அவருக்கு, மக்கா அல்லாத மற்ற ஊர்களில் நோன்பு வைத்த நன்மையை விட ஆயிரம் மாதங்கள் நோன்பு வைத்து தொழுத நன்மைகள் கிடைக்கின்றன” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்:  இப்னுமாஜா (3108)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அப்துர் ரஹீம் பின் ஸைத் அல் அம்மீ என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்பதை ஹதீஸ் துறையில் ஏராளமான அறிஞர்கள் பலவித வார்த்தைகளில் தெளிவு படுத்தியுள்ளார்கள். 

(தஹ்தீபுத் தஹ்தீப் பாகம்: 6, பக்கம்: 273)        

சென்ற வருட நோன்பை களா செய்யாவிட்டால்……

அபூஹுரைரா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்:  “யார் ரமலான் மாதத்தை அடைந்து அவர் சென்ற ரமலானின் நோன்பை களாச் செய்யவில்லையானால் அவரின் நோன்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல்:  தப்ரானீ  அவ்ஸத், பாகம்:  3, பக்கம்:  321)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் ”இப்னு லஹிஆ” என்பவர் மனன சக்தியில் குறைவுடையவர் என்றும் பலவீன மானவர் என்றும் பல அறிஞர்கள் குறை கூறியுள்ளனர். (தஹ்தீபுத் தஹ்தீப்)

நோன்பு உடலுக்குறிய ஸக்காத்தா?

“ஒவ்வொரு பொருளுக்கும் ஸகாத் (கடமை) இருக்கிறது. உடலுடைய ஸகாத் நோன்பாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி), நூல்: இப்னு மாஜா (1735)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் “மூஸா பின் உபைதுல்லாஹ்” என்பவர் இடம் பெறுகிறார். இமாம் அஹ்மத், நஸயீ, இப்னு அதீ, இப்னு மயீன் ஆகியோர் பலவீனமானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

(மீஸானுல் இஃதிதால், பாகம் 6, பக்கம்: 551)

பித்ரா இல்லாமல் நோன்பு கூடாது?

ரமலான் மாதம் (அதாவது அம்மாதத்தின் நோன்பு) வானத்திற்கும் பூமிக்கும் மத்தியில் தொங்கவிடப் பட்டிருக்கும். பித்ரா தர்மம் கொடுக்கும் வரை அது (அல்லாஹ்விடம்) உயர்த்தப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல்கள்: அல் இலலுல் முதநாஹிய்யா, கன்ஸுல் உம்மால்> அல்ஜாமிவுஸ்ஸகீர்)

இச்செய்தியில் இடம் பெறும் ஐந்தாவது அறிவிப்பாளர் முஹம்மத் பின் உபைத் என்பவர் யாரென அறியப்படாதவர் என்று இச்செய்தியைப் பதிவு செய்த இமாம் இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இதை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தனது ஸிஸானுல் மீஸான் என்ற நூலிலும் உறுதி செய்துள்ளார்கள்.

Sunday, February 6, 2011

சுப்ஹ் குனூத் ஓதலாமா? - ஓர் ஆய்வு

நாம் செய்யக்கூடிய வணக்க வழிபாடுகள் எதுவாக இருந்தாலும் அவை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த அடிப்படையில் இருக்க வேண்டும். அதற்கு மாற்றமாக இருந்தால் அந்த வணக்கம் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப் படாது. இன்றைக்கு நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் பல்வேறு வணக்க வழிபாடுகளில் நபி (ஸல்) அவர்களின் தெளிவான சுன்னத்துகள் புறக்கணிக்கப்பட்டு பல பித்அத்தான காரியங்கள் நிறைந்து காணப்படுகின்றன. 

அவற்றில் ஒன்று தான் சுபுஹ் தொழுகையில் ருகூவிற்குப் பிறகு அல்லாஹும் மஹ்தினி என்று ஆரம்பிக்கக் கூடிய துஆவை குனூத்தாக ஓதுவதாகும்.

இதை‘ஷாஃபி மத்ஹபினர் சுன்னத்தாகக் கருதி செய்து வருகின்றனர். ஆனால் இது தொடர்பாக வரக்கூடிய செய்திகள் அனைத்தும் பலவீனமானவையாகும். 

மேலும் சில ஸஹீஹான ஹதீஸ்களை முழுமையாக ஆராயாமல் அவற்றிலிருந்து தவறான முறையில் சட்டம் எடுத்துள்ளனர். இதற்கு அவர்கள் எடுத்துக் வைக்கக் கூடிய ஆதாரங்களையும் அதன் நிலைகளையும் காண்போம்.

ஆதாரம்: 1

சுபுஹ் தொழுகையில் குனூத் ஓத வேண்டும் என்று சொல்லக் கூடியவர்கள் அதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸை எடுத்து வைக்கின்றனர்.

"நபி (ஸல்) அவர்கள் சுப்ஹில் குனூத் ஓதி இருக்கிறார்களா?'' என்று அனஸ் (ரலி) இடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ஆம் என்றனர். "ருகூவுக்கு முன்பா? அல்லது பின்பா?'' என்று மீண்டும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, "ருகூவிற்குப் பின்பு'' என விடையளித்தார்கள்.  அறிவிப்பவர்: முஹம்மத் நூல்: நஸயீ  1061


மறுப்பு

மேற்கண்ட ஹதீஸில் நபியவர்கள் சுபுஹ் தொழுகையில் ருகூவிற்குப் பின்பு குனூத் ஓதியதாக வந்துள்ளது. இது இன்றைக்கு‘ஷாஃபி மத்ஹபினர் ஓதிவரக் கூடிய குனூத் அல்ல. மாறாக இது சோதனையான காலகட்டங்களில் எதிரிகளுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் ஓதிய குனூத் ஆகும்.

இதனை நபி (ஸல்) அவர்கள் சோதனைகள் ஏற்படும் போது சிறிது காலம் மட்டுமே ஓதியுள்ளார்கள். அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கக் கூடிய இந்த ஹதீஸின் அனைத்துப் பகுதிகளையும் நாம் விரிவாக ஆராய்ந்தால் சுபுஹ் தொழுகையில் ருகூவிற்குப் பின்பு ஓதப்பட்ட இந்த குனூத் சோதனைக் காலகட்டங்களில் ஓதியது தான் என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் ருகூவிற்குப் பின்னால் ஒரு மாத காலம் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள். அதில் ரிஅல், தக்வான் ஆகிய குலத்தாருக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். மேலும் "உஸய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து விட்டார்கள்' என்றும் கூறினார்கள். நூல்: முஸ்லிம் 1201


ஆஸிம் அவர்கள் அறிவிக்கிறார்கள்: குனூத் பற்றி அனஸ் பின் மாலிக் (ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், "குனூத் (நபி (ஸல்) காலத்தில்) நடைமுறையில் இருந்தது தான்'' என்று விடையளித்தார்கள். ருகூவுக்கு முன்பா? பின்பா? என்று நான் கேட்டேன். அதற்கு, "ருகூவுக்கு முன்பு தான்'' என்று கூறினார்கள். "ருகூவிற்குப் பிறகு என்று நீங்கள் கூறியதாக ஒருவர் எனக்குக் கூறினாரே'' என்று அனஸ் (ரலி) இடம் கேட்டேன். "அவர் பொய்சொல்லி இருக்கிறார். நபி (ஸல்) அவர்கள் ருகூவிற்குப் பிறகு ஒரு மாதம் தான் குனூத் ஓதினார்கள். நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை இணை வைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அந்த முஷ்ரிகீன்களை விடக் குறைந்த எண்ணிக்கையினராக இருந்தனர். அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமிடையே ஒரு உடன்படிக்கையும் இருந்தது. (அந்த முஷ்ரிகீன்கள் எழுபது நபர்களையும் கொன்று விட்டனர்) அப்போது நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிகீன்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள்'' என்று அனஸ் (ரலி) விடையளித்தார்கள். நூல்: புகாரி 1002


"நபி (ஸல்) அவர்கள் சுப்ஹில் குனூத் ஓதி இருக்கிறார்களா?'' என்று அனஸ் (ரலி) இடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ஆம் என்றனர். "ருகூவுக்கு முன்பு ஓதி இருக்கிறார்களா?'' என்று மீண்டும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, "ருகூவிற்குப் பின்பு சிறிது காலம் (நபி (ஸல்) அவர்கள்) குனூத் ஓதினார்கள்'' என பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: முஹம்மத் நூல்: புகாரி 1001

குர்ஆனை மனனம் செய்த எழுபது ஸஹபாக்களை, இணை வைப்பாளர்கள் கொன்ற காரணத்தினால் தான் நபியவர்கள் அவர்களைச் சபித்து சுபுஹ் தொழுகையில் குனூத் ஓதியுள்ளார்கள். அதுவும் ஒரு மாத காலம் தான் ஓதியுள்ளார்கள். ஷாஃபி மத்ஹபினர் சுபுஹ் தொழுகையில் ஓதக் கூடிய குனூத் சபித்தலுக்குரியதல்ல. மேலும் அதனை நிரந்தரமாகச் செய்து வருகின்றனர். எனவே மேற்கண்ட ஹதீஸில் அவர்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை.


ஒரு வாதத்திற்கு சுபுஹ் தொழுகையில் குனூத் ஓதலாம் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸை வைத்து ஷாஃபி மத்ஹபினர் ஆதாரம் எடுத்தாலும் அவர்கள் சுபுஹ் தொழுகையில் மட்டுமல்லாது அனைத்து தொழுகையிலும் ஓத வேண்டும்.

ஏனெனில் சோதனையான கால கட்டங்களில் ஓதக்கூடிய இந்த குனூத்தை நபியவர்கள் சுப்ஹுத் தொழுகையில் மட்டுமல்லாது அனைத்துத் தொழுகையிலும் ஓதியுள்ளார்கள். இதனைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: மஃரிப், ஃபஜ்ர் ஆகிய தொழுகைகளில் குனூத் ஓதுதல் (நபி (ஸல்) காலத்தில்) இருந்தது. நூல்: புகாரி 798, 1004


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! கிட்டத்தட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவித்ததைப் போன்றே நான் உங்களுக்குத் தொழுவிக்கிறேன் என்று கூறினார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் லுஹர், இஷா, சுப்ஹு ஆகிய தொழுகைகளில் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதுவார்கள். அதில் இறை நம்பிக்கையாளர்களுக்குச் சார்பாகவும் (கொடுஞ் செயல் புரிந்த) இறை மறுப்பாளர்களைச் சபித்தும் பிரார்த்திப்பார்கள்.  நூல்: முஸ்லிம் 1198

இரண்டாவது ஆதாரம்

சுபுஹ் தொழுகையில் குனூத் ஓத வேண்டும் என்று கூறக் கூடியவர்கள் அதற்கு இரண்டாவது ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸை எடுத்து வைக்கின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் சுப்ஹ் தொழுகையில் குனூத் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: பராஉ பின் ஆசிப் (ரலி) நூல்: தாரமி 1549, அஹ்மத் 17913


மறுப்பு

மேற்கண்ட ஹதீஸ‚ம் ஷாஃபி மத்ஹபினர் நடைமுறையில் சுப்ஹில்  ஓதி வருகின்ற குனூத்திற்கு ஆதாரமானதல்ல. பராஉ பின் ஆசிப் (ரலி) அறிவிக்கின்ற மேற்கண்ட ஹதீஸில் சுப்ஹ் தொழுகை என்று மட்டும் வந்திருந்தாலும் அவர்கள் வழியாக வருகின்ற அதிகமான அறிவிப்புகளில் நபியவர்கள் ஃபஜ்ருடன் சேர்த்து  மஃரிப் தொழுகையிலும் குனூத் ஓதியதாகவே வந்துள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையிலும் மஃரிப் தொழுகையிலும் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள்.அறிவிப்பவர்: பராஉ பின் ஆசிப் (ரலி) நூல்: முஸ்லிம் 1207, 1208

இன்னும் பல நூல்களிலும் இந்தச் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

"நபியவர்கள் ஃபஜ்ரிலும், மஃரிபிலும் குனூத் ஓதினார்கள்'' என்று பராஉ பின் ஆசிப் (ரலி) அறிவிப்பதிலிருந்தே இது சோதனைக் காலத்தில் ஓதுகின்ற பிரார்த்தனை தான் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

ஒரு வாதத்திற்கு மேற்கண்ட செய்தியிலிருந்து சுப்ஹில் குனூத் ஓதலாம் என்று வைத்துக் கொண்டாலும் மஃரிப் தொழுகையிலும் குனூத் ஓத வேண்டும். ஆனால் நடைமுறையில் ஷாஃபி மத்ஹபினர் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே மேற்கண்ட செய்தியிலும் ஷாஃபி மத்ஹபினர் நடைமுறையில் சுப்ஹில் ஓதி வரும் குனூத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

மூன்றாவது ஆதாரம்

நபி (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் குனூத் ஓதினார்கள். அதில் (பிஃரு மஊனாவில் தன்னுடைய தோழர்களைக் கொன்ற) முஷ்ரிகீன்களைச் சபித்து பிரார்த்தித்தார்கள். பின்னர் அதனை விட்டு விட்டார்கள். ஆனால் சுப்ஹுத் தொழுகையில் அவர்கள் மரணிக்கின்ற வரை குனூத் ஓதிக் கொண்டே தான் இருந்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) 

மறுப்பு 

மேற்கண்ட செய்தி அஹ்மத், தாரகுத்னீ, முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக், அஸ்ஸுனனுல் குப்ரா, அஸ்ஸுனனுஸ் ஸுஃரா, மஃரிஃபதுல் ஆஸார் வஸ்ஸுனன் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸின் முதல் பகுதி புகாரி, முஸ்லிம் போன்ற பல நூற்களில் வெவ்வேறு அறிவிப்பாளர்கள் வழியாக இடம் பெற்றுள்ளது. ஆனால் சுப்ஹுத் தொழுகையில் அவர்கள் மரணிக்கின்ற வரை குனூத் ஓதிக் கொண்டே தான் இருந்தார்கள் என்ற இரண்டாவது பகுதி நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்படவில்லை.

இதனுடைய அனைத்து அறிவிப்புகளிலும் அபூ ஜஃபர் அர்ராஸி என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். இவர் அறிவிக்கும் செய்திகள் ஏற்கத் தகுந்தவை அல்ல. இவரைப் பல ஹதீஸ் கலை அறிஞர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

இமாம் அஹ்மத் மற்றும் நஸயீ ஆகியோர் "இவர் உறுதியானவர் இல்லை' என்று கூறியுள்ளனர். மேலும் அபூ ஜஃபர் அர்ராஸி ஹதீஸ்களில் மூளை குழம்பியவர் என அஹ்மத் கூறியுள்ளார். இவர் அதிகம் தவறிழைப்பவர் என அபூசுர்ஆ கூறியுள்ளார். இவர் நம்பகமானவர் என்றாலும் மூளை குழம்பி விட்டார் என அலீ இப்னுல் மதீனி கூறியுள்ளார். இவருடைய செய்தியில் பலவீனம் உள்ளது. நம்பகமானவர் என்றாலும் மோசமான மனனத் தன்மை கொண்டவர் என அம்ருப்னு அலீ கூறியுள்ளார். இவர் நம்பகமானவர் என்றாலும் ஹதீஸ்களில் உறுதியானவர் இல்லை என ஸாஜி கூறியுள்ளார்.

"இவர் பிரபலமானவர்கள் வழியாக மறுக்கத் தக்க செய்திகளை அறிவிக்கக் கூடியவர். இவர் உறுதியானவர்களின் அறிவிப்புக்கு ஒத்ததாக அறிவிப்பவற்றைத் தவிர மற்றவற்றை ஆதாரமாக எடுப்பது கூடாது; மேலும் நம்பகமானவர்களுக்கு மாற்றமாக இவர் அறிவிப்பதை துணைச் சான்றாகக் கூட எடுப்பது கூடாது'' என இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார். இவர் மோசமான மனனத் தன்மை கொண்டவர் என ஃபலாஸ் கூறியுள்ளார். இவர் நம்பகமானவர் என்றாலும் மோசமான மனனத் தன்மை கொண்டவர் என இப்னு ஹிராஷ் கூறியுள்ளார்.

இதே செய்தி அம்ரு பின் உபைத் என்பார் வழியாக பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுதுள்ளேன். அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றுகின்ற வரை சுப்ஹுத் தொழுகையில் வழமையாக குனூத் ஓதுபவர்களாகவே இருந்தார்கள். நான் அபூபக்கர் சித்தீக் பின்னால் தொழுதிருக்கிறேன். அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றுகின்ற வரை சுப்ஹுத் தொழுகையில் ருகூவிற்குப் பின்னால் குனூத் ஓதுபவர்களாவே இருந்து வந்தார்கள். நான் உமர் பின் கத்தாப் பின்னால் தொழுதிருக்கின்றேன். அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றுகின்ற வரை சுப்ஹுத் தொழுகையில் ருகூவிற்குப் பின்னால் குனூத் ஓதுபவர்களாகவே இருந்து வந்தார்கள். அறிவிப்பவர்:அனஸ் பின் மாலிக்(ரலி) 

மேற்கண்ட செய்தி ஒரு சில வார்த்தைகள் கூடுதல் குறைவுடன் பைஹகீ, தாரகுத்னீ, ஷரஹ் மஆனில் ஆஸார் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவும் ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாத பலவீனமான அறிவிப்பாகும்.

இச்செய்தியை அறிவிக்கக் கூடிய அம்ரு பின் உபைத் என்பார் பொய்யர் ஆவார். இவரை ஹதீஸ் கலை அறிஞர்கள் மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

அம்ரு பின் உபைத் ஹதீஸ்களில் பொய்யுரைப்பவராக இருந்தார் என யூனுஸ் கூறியுள்ளார்.

நான் அம்ர் பின் உபைத் இடமிருந்து எதையும் எடுத்துக் கொள்ள மாட்டேன். இவர் அனஸ் அவர்களின் மீது பொய்யாக இட்டுக்கட்டிக் கூறுபவராக இருந்தார் என ஹுமைத் கூறியுள்ளார்.

பக்ர் பின் ஹும்ரான் என்பவர் கூறுகிறார்: நாங்கள் இப்னு அவ்ன் என்பாரிடம் இருந்தோம். அப்போது ஒரு மனிதர் அவர்களிடம் ஒரு சட்டத்தைப் பற்றிக் கேட்டார். அதற்கவர் எனக்குத் தெரியாது என்று கூறினார். அதற்கவர், "ஹஸன் அவர்களிடமிருந்து அம்ருப்னு உபைத் இவ்வாறு கூறியுள்ளாரே' என்று கேட்ட போது, "எங்களுக்கும் அம்ரு பின் உபைத்திற்கும் என்ன சம்பந்தம்? அவரோ ஹஸன் மீது பொய்யுரைப்பவராக இருந்தார்' என இப்னு அவ்ன் கூறினார்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக எந்த ஒன்றிலும் நான் அம்ரு பின் உபைத்தை உண்மையாளராக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என மதர் என்பவர் கூறியுள்ளார்.

யஹ்யா மற்றும் அப்துர் ரஹ்மான் ஆகியோர் அம்ர் பின் உபைத்திடமிருந்து எதையும் அறிவிக்க மாட்டார்கள் என அம்ருப்னு அலீ கூறியுள்ளார்.

அம்ரு பின் உபைதிடமிருந்து எதையும் அறிவிப்பதற்குத் தகுதியானவராக இல்லை என அஹ்மத் பின் ஹன்பல் கூறியுள்ளார்.

அம்ரு பின் உபைத் ஒரு பொருட்டாகக் கொள்ளத் தகுந்தவரில்லை என்று யஹ்யா பின் முயீன் கூறியுள்ளார்.

அம்ர் பின் உபைத் ஹதீஸ் துறையில் விடப்படக்கூடியவர். பித்அத்தான அனாச்சாரங்களுக்குச் சொந்தக்காரர் என அம்ருப்னு அலீ கூறியுள்ளார். (அல்ஜரஹ் வ தஃதீல்)

நான் அம்ரு பின் உபைதைச் சந்தித்தேன் அவர் ஒரு ஹதீஸின் மீது என்னிடம் சத்தியம் செய்தார். அவர் பொய்யர் என்பதை நான் அறிந்து கொண்டேன் என வர்ராக் கூறியுள்ளார். (தாரீகுல் கபீர்)

இன்னும் சில அறிவிப்புகளில் இவருடைய மாணவரான இஸ்மாயில் பின் முஸ்லிம் அல்மக்கீ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரைப் பற்றியும் மிகக் கடுமையான விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளன.

யஹ்யா பின் கத்தான் அவர்களிடம் இஸ்மாயீல் மக்கீயைப் பற்றி கேட்கப்பட்ட போது அவர் மூளை குழம்பியவராகவே இருந்து வந்தார். ஒரே ஹதீஸை மூன்று விதங்களில் எங்களுக்கு அறிவிப்பார் என கூறினார். இவருடைய ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவையாகும் என அஹ்மத் கூறியுள்ளார்.

இஸ்மாயில் அல்மக்கீ ஒரு பொருட்டாகக் கொள்ளத் தகுந்தவரில்லை என யஹ்யா பின் முயீன் கூறியுள்ளார். நான் இவருடைய ஹதீஸ்களை எழுத மாட்டேன்; இவரைப் பற்றி என்னுடைய தந்தையிடம் கேட்டேன். இவர் ஹதீஸ்களில் பலவீனமானர், குழப்பக் கூடியவர் என்று என் தந்தை கூறினார் என இப்னுல் மதனீ கூறியுள்ளார். (அல் ஜரஹ் வதஃதீல்)

இன்னும் பல அறிஞர்கள் இவரைப் பற்றி மிகக் கடுமையான விமர்சனங்களைக் கூறியுள்ளனர்.

மேலும் இதே செய்தியை அனஸ் அவர்களிடமிருந்து அபூ ஹுசைன் என்பவர் அறிவிப்பதாக அத்தஹ்கீக் ஃபீ அஹாதீஸில் ஹிலாஃப் என்ற நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். இச்செய்தியிலும் கைஸ் பின் ரபீஉ என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார்.

இவர் எதற்கும் தகுதியானவர் இல்லை என யஹ்யா கூறியுள்ளார். இவர் ஹதீஸ்களில் அதிகம் தவறிழைக்கக் கூடியவர்; மேலும் நிராகரிக்கத்தக்க செய்திகளை அறிவிக்கக் கூடியவர் என அஹ்மத் கூறியுள்ளார். மேலும் இவருடைய மாணவராக அம்ரு பின் அய்யூப் என்பவர் இடம் பெற்றுள்ளார்.

இவரை ஆதாரமாகக் கொள்வதற்கு தகுதியானவரில்லை என இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் விமர்சித்துள்ளார்கள். 

மேலும் தீனார் பின் அப்தில்லாஹ் என்பவரும் இதே செய்தியை அனஸ்  (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்து உள்ளதாக மேற்கண்ட நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

தீனார் பின் அப்துல்லாஹ் என்பார் இட்டுக்கட்டக் கூடியவராவார். இவர் இட்டுக் கட்டப்பட்ட பல விஷயங்களை அனஸிடமிருந்து அறிவித்துள்ளார். குறை கூறுவதற்காக மட்டும் தான் இவருடைய கூற்றுக்களை நூல்களில் குறிப்பிட வேண்டும் என இப்னு ஹிப்பான் அவர்கள் கூறியுள்ளார்.

எனவே, நபியவர்கள் மரணிக்கும் வரை சுபுஹில் குனூத் ஓதினார்கள் என்று அனஸ் (ரலி) அறிவிப்பதாக வரக் கூடிய செய்திகள் மிகப் பலவீனமாக இருக்கின்றன. அத்துடன் அனஸ் (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள பின்வரும் ஸஹீஹான ஹதீஸ் இதற்கு நேர் முரணான கருத்தைத் தருகிறது.

நபி (ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்திற்கு ஆதரவாகவோ, அல்லது ஒரு கூட்டத்தைச் சபித்தோ பிரார்த்திக்கும் போது தவிர (வேறு எப்போதும்) குனூத் ஓத மாட்டார்கள் அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: இப்னு ஹுசைமா

ஒரு கூட்டத்திற்கு ஆதரவாகவும் ஒரு கூட்டத்தைச் சபித்தும் ஓதுகின்ற குனூத், சோதனைக் கால கட்டத்தில் ஓதுகின்ற குனூத்தே ஆகும். இதைத் தவிர வேறு எப்போதும் நபியவர்கள் குனூத் ஓதியதில்லை என்று அனஸ் (ரலி) அறிவிக்கின்ற இந்த ஹதீஸ் ஸஹீஹானதாகும்.

எனவே நபியவர்கள் மரணிக்கும் வரை குனூத் ஓதினார்கள் என்று வரக் கூடிய செய்தி பலவீனமாக இருப்பதுடன் அனஸ் (ரலி) அவர்கள் வாயிலாக வரக் கூடிய சரியான ஹதீஸிற்கு மாற்றமாகவும் இருப்பதால் அது அறவே ஆதாரத்திற்குத் தகுந்ததில்லை என்பது மேலும் தெளிவாகிறது.

நான்காவது ஆதாரம்

சுபுஹில் குனூத் ஓத வேண்டும் என்று கூறக் கூடியவர்கள் அதற்கு ஆதாரமாகப் பின்வரும் செய்தியையும் எடுத்து வைக்கின்றனர்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் நாங்கள் சுப்ஹு தொழுகையின் குனூத்தில் பிரார்த்திப்பதற்காக அல்லாஹும் மஹ்தினி ஃபீமன் ஹதய்த்த, வஆஃபினி ஃபீமன் ஆஃபய்த்த வதவல்லனா ஃபீமன் தவல்லய்த்த வபாரிக்லனா ஃபீமா அஃதய்த்த வகினா ஷர்ர மா கலய்த்த, இன்னக தக்லீ வலா யுக்லா அலைக்க இன்னஹு லாயதில்லு மன் வாலய்த்த தபாரக்த ரப்பனா வதஆலய்த்த என்ற துஆவை எங்களுக்குக் கற்றுத் தருபவர்களாக இருந்தார்கள்.

இச்செய்தி ஸுனன் பைஹகி அல்குப்ரா, அபூ முகம்மது ஃபாகி,  முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.

மறுப்பு

இதுவும் ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாத பலவீனமான செய்தியாகும்.

இதனுடைய அனைத்து அறிவிப்புகளிலும் இப்னு ஜுரைஜ் என்ற அறிவிப்பாளரின் ஆசிரியராக  அப்துர்ரஹ்மான் பின் ஹுர்முஸ் என்பவர் இடம் பெறுகிறார். இவர் யாரென்றே அறியப்படாதவர். அஃரஜ் என்ற புனைப் பெயரில் அப்துர் ரஹ்மான் பின் ஹுர்முஸ் என்று ஒரு அறிவிப்பாளர் இருக்கின்றார்.
 
அவர் நம்பமானவராவார். ஆனால் இச்செய்தியில் இடம்பெறக் கூடிய அப்துர் ரஹ்மான் பின் ஹுர்முஸ் என்பவரின் நிலை பற்றி தெரிய வேண்டிய அவசியமுள்ளது என இப்னு ஹஜர் அவர்கள் தமது தல்கீஸ் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே யாரென்றே அறியப்படாதவர் வழியாக இச்செய்தி வருவதால் இது பலவீனம் என்பது உறுதியாகிறது.

மேலும் பைஹகியில் இடம் பெற்றுள்ள இச்செய்தியில் அப்துல் மஜீத் இப்னு அப்துல் அஸீஸ் என்ற மற்றொரு பலவீனமான அறிவிப்பாளரும் இடம் பெறுகிறார். இவர் மனனத் தன்மையில் மோசமானவர் என ஹதீஸ் கலை வல்லுநர்களால் விமர்சிக்கப் பட்டுள்ளார்.

மேலும் இச்செய்தியை இப்னு ஜுரைஜிடமிருந்து அபூ ஸஃப்வான் அல் உமவி என்பவர் அறிவித்துள்ளார். அவர் இப்னு ஜுரைஜின் ஆசிரியராக அப்துர் ரஹ்மான் பின் ஹுர்முஸ் என்பவருக்கு பதிலாக அப்துல்லா பின் ஹுர்முஸ் என்ற பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இவருடைய நிலை அறியப்பட்டுள்ளது என்றாலும் இச்செய்தி ஸஹாபி விடுபட்டுள்ள முர்ஸல் எனும் வகையைச் சேர்ந்ததாகும் என பைஹகி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இந்த வரிசையும் பலவீனம் என்பது தெளிவாகிறது.

மேலும் இதே செய்தி பலமான அறிவிப்பாளர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவையனத்திலுமே அல்லாஹும் மஹ்தினி என்ற இத்துஆவை நபியவர்கள் வித்ர் தொழுகையில் ஓதுவதற்காக ஹஸன் (ரலி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததாகவே வந்துள்ளது. எனவே பலமான இந்த அறிவிப்புக்கு மாற்றமாக மேற்கண்ட செய்தி அமைந்துள்ளதால் அது ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாத மிகப் பலவீனமான நிலையை அடைகிறது.

ஐந்தாவது ஆதாரம்

நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையில் இரண்டாவது ரக்அத்தில் ருகூவிலிருந்து தமது தலையை உயர்த்தும் போது அல்லாஹும் மஹ்தினீ..... என்ற இத்துஆவை ஓதுவார்கள் அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


இச்செய்தி ஹாகிம் அவர்களின் முஸ்தத்ரக் என்ற நூலில் இடம் பெற்றுள்ளதாக இப்னு ஹஜர் அவர்கள் தமது தல்கீஸ் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

மறுப்பு

இச்செய்தியும் ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாத மிகப் பலவீமான நிலையில் உள்ளதாகும். இதில் அப்துல்லாஹ் பின் ஸயீத் அல் முக்பிரீ என்பவர் இடம் பெறுகிறார். இவரை ஹதீஸ் கலை அறிஞர்கள் மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

இவருடைய ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை; மேலும் இவர் ஹதீஸ் துறையில் விடப்பட வேண்டியவர் என அஹ்மத் பின் ஹன்பல், அம்ருப்னு அலீ ஆகியோர் கூறியுள்ளனர்.

இவர் ஒரு பொருட்டாகக் கொள்ளத் தக்கவரில்லை என அஹ்மத் கூறியுள்ளார். ஒரு அவையில் இவருடைய பொய்மை எனக்கு வெளிப்பட்டது என யஹ்யா இப்னுல் கத்தான் கூறியுள்ளார். இவர் ஒரு பொருட்டானவரில்லை; இவருடைய ஹதீஸ்கள் எழுதப்பட மாட்டாது என யஹ்யா பின் முயீன் கூறியுள்ளார். இவர் கைவிடப்பட வேண்டியவர்; ஹதீஸ்களில் களவாடக் கூடியவர் என தாரகுத்னீ கூறியுள்ளார். இவர் வேண்டுமென்றே இதைச் செய்துள்ளார் என நமது உள்ளம் எண்ணுமளவிற்கு இவர் ஹதீஸ்களைப் புரட்டக் கூடியவர்; செய்திகளில் தவறிழைக்கக் கூடியவர் என இப்னு ஹிப்பான் கூறியுள்ளார். (நூல்: அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன்)

எனவே மேற்கண்ட செய்தியும் மிகப் பலவீனமானதாகும்.

சுபுஹ் குனூத் தொடர்பாக வரக் கூடிய செய்திகள் அனைத்தும் பலவீனமாக உள்ளன. அத்துடன் பலமான, ஸஹீஹான ஹதீஸ்களுடன் நேரடியாக மோதும் வகையிலும் அமைந்துள்ளன. 

"என் தந்தையே! நீங்கள் நபி (ஸல்) அவர்களையும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரையும் பின்பற்றித் தொழுதுள்ளீர்கள். அலீ (ரலி)யை கூஃபாவில் ஏறத்தாழ ஐந்தாண்டுகள் பின்பற்றித் தொழுதுள்ளீர்கள். அவர்களெல்லாம் ஃபஜ்ரில் குனூத் ஓதுவார்களா?'' என்று என் தந்தையிடம் கேட்டேன். அதற்கவர் "அருமை மகனே! அது பின்னர் உருவாக்கப்பட்டபித்அத்தாகும்'' என விடையளித்தார். அறிவிப்பவர்: அபூ மாலிக் அஷ்ஜயீ
  நூல்: திர்மிதி 368, இப்னு மாஜா 1231

எனவே தற்காலத்தவர் ஓதி வருகின்ற சுப்ஹ் குனூத் என்பது நபியவர்கள் காலத்திற்குப் பின் உருவாக்கப்பட்ட அனாச்சாரம் என்பது மேற்கண்ட செய்தியிலிருந்து தெளிவாகின்றது.

நபி (ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்திற்கு ஆதரவாகவோ, அல்லது ஒரு கூட்டத்தை சபித்தோ பிரார்த்திக்கும் போது தவிர (வேறு எப்போதும்) குனூத் ஓத மாட்டார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: இப்னு ஹுசைமா

ஒரு கூட்டத்திற்கு ஆதரவாகவும் ஒரு கூட்டத்தைச் சபித்தும் ஓதுகின்ற குனூத் சோதனைக் கால கட்டத்தில் ஓதுகின்ற குனூத்தே ஆகும்.

இதைத் தவிர வேறு எப்போதும் நபியவர்கள் குனூத் ஓதியதில்லை என்று அனஸ் (ரலி) அறிவிக்கின்ற இந்த ஹதீஸ் ஆதாரப் பூர்வமானதாகும்.

எனவே சுபுஹ் குனூத் என்பது விடப்பட வேண்டிய ஒரு பித்அத்தான காரியமாகும்.

பலவீனமாக இருந்தாலும், பொய்யர்கள் அறிவித்தாலும் அதை நான் பின்பற்றுவேன் என ஒருவர் கூறினால் அவருக்கு நபியவர்கள் கூறுகிறார்கள்:

பொய்யெனக் கருதப்படக் கூடிய ஒரு செய்தியை என்னிடமிருந்து ஒருவன் அறிவித்தால் அவன் பொய்யர்களில் ஒருவனாவான். நூல்: முஸ்லிம்

என் மீது யார் வேண்டுமென்றே இட்டுக் கட்டுகின்றாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும். நூல்: புகாரி
நன்றி ஏகத்துவம் மாத இதழ் (ஆன்லைன் பி.ஜே.)