Showing posts with label ரமலான் சிறப்பு பகுதி 2011. Show all posts
Showing posts with label ரமலான் சிறப்பு பகுதி 2011. Show all posts

Saturday, August 27, 2011

பெருநாள் தொழுகை




நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாள்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக்அத்கள் திடலில் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். இரு பெருநாள் தொழுகையையும் திடலில் தான் தொழ வேண்டும். “மற்ற பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது 1000 மடங்கு நன்மை அதிகம்” (புகாரீ 1190) என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள், பெருநாள் தொழுகையை மஸ்ஜிதுந் நபவீயில் தொழாமல் திடலில் தொழுததன் மூலம் திடலில் தொழுவதன் முக்கியதுவத்தைத் தெளிவு படுத்தியுள்ளார்கள். எனவே இரு பெருநாள் தொழுகைகளையும் திடலில் தான் தொழ வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1612

பெருநாள் தொழுகையில் பெண்கள்
பெருநாள் தொழுகையில் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். மேலும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும் திடலுக்கு வர வேண்டும். அவர்கள் தொழுகையைத் தவிர மற்ற நல்ல காரியங்களில் கலந்து கொள்ள வேண்டும்.
இரு பெருநாட்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கன்னிப் பெண்களையும் (தொழும் திடலுக்கு) அனுப்புமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகின்ற இடத்திற்குச் சென்று அவர்களுடைய துஆவில் கலந்து கொள்ளுமாறும், தொழுமிடத்தை விட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்குமாறும் நாங்கள் கட்டளையிடப்பட்டோம். பெண்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லை எனில் என்ன செய்வது?” என்றார். அதற்கு, “அவளுடைய தோழி தனது (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி), நூல்கள்: புகாரீ 351, முஸ்லிம் 1616

ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புதல்
பெருநாள் தொழுகைக்காகத் திடலுக்குச் செல்லும் போது ஒரு வழியில் சென்று வேறு வழியாகத் திரும்புவது நபி வழியாகும்.
பெருநாள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரீ 986

தொழுகைக்கு முன் சாப்பிடுதல்
நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு விட்டு தொழச் செல்வார்கள்.
சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி (ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரீ 953
நோன்புப் பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்கள் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாளில் (குர்பானி பிராணியை) அறுக்கும் வரை சாப்பிட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி), நூல்: இப்னுகுஸைமா 1426

முன் பின் சுன்னத்துகள் இல்லை
இரு பெருநாள் தொழுகைகளுக்கு முன் பின் சுன்னத்துகள் கிடையாது. நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைக்கு முன்னரும், பின்னரும் எந்தத் தொழுகையையும் தொழுததில்லை.
நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று (திடலுக்குச்) சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னும், பின்னும் எதையும் தொழவில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரீ 1431, முஸ்லிம் 1616

பாங்கு இகாமத் இல்லை
இரு பெருநாள் தொழுகைக்கும் பாங்கு, இகாமத் கிடையாது.
இரு பெருநாள் தொழுகையை பாங்கும் இகாமத்தும் இல்லாமல் ஒரு தடவை அல்ல; இரு தடவை அல்ல; பல தடவை நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுள்ளேன்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி), நூல்: முஸ்லிம் 1610

மிம்பர் இல்லை
வெள்ளிக்கிழமை ஜுமுஆவில் இமாம் மிம்பரில் நின்று உரை நிகழ்த்துவது போல் பெருநாள் தொழுகைக்கு மிம்பரில் நின்று உரையாற்றக் கூடாது. தரையில் நின்று தான் உரை நிகழ்த்த வேண்டும். இவ்வாறு தான் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வான் பெருநாள் அன்று மிம்பரில் ஏறி பயன் செய்தபோது.
“மர்வானே! நீர் சுன்னத்திற்கு மாற்றம் செய்து விட்டீர்! பெருநாள் தினத்தில் மிம்பரைக் கொண்டு வந்துள்ளீர். இதற்கு முன்னர் இவ்வாறு கொண்டு வரப்படவில்லை…” என்று இடம் பெற்றுள்ளது.
ஆதாரம் : அபூதாவூத் 963, இப்னுமாஜா 1265, அஹ்மத் 10651
நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று ஒரேயொரு உரையை நிகழ்த்தினார்கள் என்பதற்கே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. இரண்டு குத்பாக்கள் நிகழ்த்துவதற்கோ, குத்பாக்களுக்கு இடையில் அமர்வதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.
நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று (திடலுக்குச் செல்வதற்காக) வெளியேறினார்கள். மக்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்து ஸலாம் கூறினார்கள். தரையில் நின்று மக்களை நோக்கி (உரை நிகழ்த்தி)னார்கள். மக்கள் அமர்ந்திருந்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: இப்னுமாஜா 1278
தக்பீரும் பிரார்த்தனையும்
இரு பெருநாள்களிலும் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும் வண்ணம் அதிகமதிகம் தக்பீர்கள் கூற வேண்டும். மேலும் திடலில் இருக்கும் போது, தமது தேவைகளை வல்ல இறைவனிடம் முறையிட்டுக் கேட்க வேண்டும். திடலில் கேட்கும் துஆவிற்கு முக்கியத்துவமும் மகத்துவமும் உள்ளது.
பெருநாளில் நாங்கள் (தொழும் திடலுக்கு) புறப்பட வேண்டுமெனவும், கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள், ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும், புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி), நூல்கள்: புகாரீ 971, முஸ்லிம் 1615
அல்லாஹு அக்பர் என்று கூறுவது தான் தக்பீர் ஆகும். பெருநாளைக்கு என நபி (ஸல்) அவர்கள் தனியான எந்தத் தக்பீரையும் கற்றுத் தரவில்லை. அதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை. மேலும் பெருநாளில் கடமையான தொழுகைகளுக்கு முன்னால் அல்லது பின்னால் சிறப்பு தக்பீர் சொல்ல வேண்டும் என்பதற்கும் ஆதாரப்பூர்வமான செய்திகள் இல்லை. மேலும் பெருநாளில் தக்பீர்களைச் சப்தமிட்டு கூறக் கூடாது.
உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! (அல்குர்ஆன் 7:205)

Monday, August 22, 2011

நோன்பு பெருநாள் தர்மம் ( பித்ரா )

 
ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.
முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) , நூல்: புகாரி 1503
ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.
நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக் கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா எனப்படுகிறது.


ஃபித்ராவின் நோக்கம்
இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட் டுள்ளது.நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன் பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழை களுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817
நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்களின் சார்பில் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.
கொடுக்கும் நேரம்
மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1503, 1509
இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெருநாள் தினத்தில் சுப்ஹுக்குப் பின், பெருநாள் தொழுகைக்கு முன் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்று சில சகோதரர்கள் கருதுகிறார்கள்.
பெருநாள் தொழுகைக்கு முன் பெருநாள் தினத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்றும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ள இயலும்.பெருநாள் தொழுகைக்குப் பின்னால் கொடுக்கக் கூடாது. எத்தனை நாட்களுக்கு முன்னாலும் கொடுக்கலாம் எனவும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ளலாம்.

பெருநாள் தொழுகைக்கு முன் என்பதை இரண்டு விதமாகவும் புரிந்து கொள்ள இடமிருந்தாலும் வேறு பல ஹதீஸ்களை ஆராயும் போது, “பெருநாள் தொழுகைக்குப் பின்னர் கொடுக்கும் அளவுக்கு தாமதிக்கக் கூடாது. பெரு நாளைக்கு சில நாட்களுக்கு முன்னால் கொடுக்கலாம்” என்ற கருத்தே சரியானது என்பது உறுதியாகிறது.

ரமலான் ஸகாத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நியமித்திருந்தார்கள். அப்போது ஷைத்தான் வந்து அதிலிருந்து எடுக்கலானான். உடனே “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உன்னைக் கொண்டு செல்வேன்” என்று நான் கூறினேன். அதற்கு அவன் “எனக்குக் குடும்பம் உள்ளது. எனக்குக் கடும் தேவை உள்ளது” எனக் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்ற போது, “நேற்றிரவு உன் கைதி என்ன ஆனான்?” என்று கேட்டார்கள். ”அல்லாஹ்வின் தூதரே! அவன் வறுமையை முறையிட்டதால் இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்” என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அவன் உன்னிடம் பொய் சொல்லியுள்ளான். மீண்டும் உன்னிடம் வருவான்” என்று கூறினார்கள். நான் அவனுக்காக காத் திருந்தேன். அவன் மீண்டும் வந்து உணவை அள்ள ஆரம்பித்தான். அவனைப் பிடித்து “உன்னை நபிகள் நாயகத்திடம் கொண்டு போகப் போகி றேன்” என்று கூறினேன். “எனக்கு வறுமை உள்ளது. குடும்பம் உள்ளது. இனி வர மாட்டேன்” என்று அவன் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சென்ற போது, “உன் கைதி என்ன ஆனான்?” என்றார்கள். அவன் கடுமையான தேவையை முறையிட்டான். இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன் எனக் கூறினேன். “அவன் உன்னிடம் பொய் சொல்லியிருக்கிறான். மீண்டும் வருவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நான் அவனுக்காகக் காத்திருந்தேன். மூன்றாவது நாளும் வந்தான்…. என்ற ஹதீஸ் புகாரியில் வகாலத் என்ற பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.சுருக்கமாக புகாரி 3275, 5010 ஆகிய எண்களில் கூறப்பட்டுள்ளது.

“இந்த ஹதீஸில் ஃபித்ரா என்று கூறப்படவில்லை. ரமளான் ஜகாத் என்று தான் கூறப்பட்டுள்ளது. இது ரமளான் மாதத்தில் ஜகாத்தைத் திரட்டுவதையே குறிக்கிறது. ஃபித்ராவை குறிக்கவில்லை” என்று சிலர் வாதிடுகின்றனர். இந்த வாதம் தவறாகும்.ஜகாத் என்பது ஆண்டு தோறும் ரமளானில் மட்டும் திரட்டப்படும் நிதி அல்ல. அன்றாடம் திரட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் ‘ரமளான் ஜகாத்’ என்ற சொல் ஃபித்ராவை மட்டும் தான் குறிக்கும்.
இதை நாம் சுயமாகக் கூறவில்லை. பின்வரும் ஹதீஸிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.ரமளான் ஸகாத்தை அடிமை, சுதந்திரமானவன், ஆண், பெண் அனைவர் மீதும் ஒரு ஸாவு பேரிச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு கோதுமை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள் என்ற ஹதீஸ் நஸாயீ 2453, 2455 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு என்று ரமளான் ஜகாத்தை ஏற்படுத் தினார்கள்” என்பது ஃபித்ராவைத் தான் குறிக்கும். ஜகாத்தைக் குறிக்காது. ஜகாத் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். அனைவருக்கும் ஒரு ஸாவு என்று ஜகாத் வசூலிக்கப்படாது.எனவே அபூஹுரைரா (ரலி) சம்பந்தப் பட்ட ஹதீஸ் ஃபித்ராவையே குறிக்கிறது.

எனவே நோன்புப் பெருநாள் தர்மம் மக்களிடம் திரட்டப்பட்டது என்பதற்கும் இது ஆதாரமாக அமைந்திருக்கிறது. திரட்டும் பணியை பெருநாளைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கலாம் என்பதற்கும் இது ஆதரமாக அமைந்துள்ளது.ஃபித்ரா தர்மத்துக்காக திரட்டப்பட்ட பொருட்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் பொறுப்பில் இருந்துள்ளது. மூன்று நாட்களும் ஷைத்தான் (அல்லது கெட்ட மனிதன்) வந்து அதை அள்ளியிருக்கிறான் என்பதிலிருந்து பெருநாளைக்கு சில நாட்களுக்கு முன்பாகவே ஃபித்ரா வைத் திரட்டலாம் என்பது தெரிகிறது.
நபித் தோழர்கள் நோன்புப் பெரு நாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் ஃபித்ராவைக் கொடுத்து வந்தனர் என்று புகாரி 1551-வது ஹதீஸ் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே நடந்ததை இது குறிக்கும் என்றால் இது மற்றொரு ஆதாரமாக அமையும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின்னர் நபித் தோழர்கள் இவ்வாறு கொடுத்து வந்தார்கள் என்பது இதன் கருத்தாக இருந்தால் அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பை உறுதி செய்வதாக இது அமையும்.
எனவே, நோன்புப் பெருநாளைக்குச் சில நாட்களுக்கு முன்பே ஃபித்ராவைத் திரட்டலாம் என்பதில் சந்தேகம் இல்லை. பெருநாள் தொழுகை ஆரம்பமாகும் வரை அதன் கடைசி நேரம்

Sunday, August 21, 2011

லைலதுல் கத்ர்

ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)

முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி (35)

லைலத்துல் கத்ரு எந்த நாள்?
லைலதுல் கத்ரு இரவில் இவ்வளவு சிறப்பை இறைவன் வைத்திருந்தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் தெரியாது. நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்ட அந்த இரவை அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காக மறக்கடித்துள்ளான். நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ரு இரவைப் பற்றி அறிவிப்பதற்காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது முஸ்லிம்களில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். “லைலதுல் கத்ரு இரவு பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு, இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயற்சி செய்யுங்கள்” என்றார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்கள்: புகாரி (49), முஅத்தா (615)
நபி (ஸல்) அவர்களுக்கே தெரியாது என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுவதால் அது குறிப்பிட்ட இந்த இரவு தான் என்று இவ்வுலகத்தில் எந்த மனிதனும் கூற முடியாது. எனினும் லைலதுல் கத்ர் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப் படை இரவான 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஆதாரப்பூர்மான செய்திகள் உள்ளன.
ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரி 2017, முஸ்லிம் 1997
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலதுல் கத்ரு இரவைப் பற்றிச் சொல்லும் போது, “அது ரமலான் மாதத்தில் தான் இருக்கிறது. எனவே அதை ரமலானில் கடைசிப் பத்தில் தேடுங்கள். அது ஒற்றைப்படை இரவான இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி மூன்று அல்லது இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஏழு அல்லது ரமலானின் கடைசி இரவில் (29) இருக்கும்” என்று சொல்லி விட்டு, “யார் அதில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்: அஹ்மத் (20700)
மேற்கூறிய ஹதீஸ்கள் ஐயத்திற்கு இடமின்றி லைலதுல் கத்ர், ரமலான் மாதத்தில் கடைசிப் பத்து இரவுகளில் 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான் இருக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

லைலதுல் கத்ர் 27வது இரவா?
லைலதுல் கத்ர் இரவு ரமலானின் கடைசிப் பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் ஒன்றாகத் தான் இருக்கும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நாம் பார்த்தோம். ஆனால் ஹதீஸ்களைக் காணாத பொதுமக்கள் லைலதுல் கத்ர் இரவு, ரமலான் 27வது இரவு தான் என்று முடிவு செய்து பெரிய விழாவாகக் கொண்டாகிறார்கள். இதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா? என்பதை நாம் பார்ப்போம்.
லைலதுல் கத்ரு இரவானது, இருபத்தேழாவது இரவாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா (ரலி), நூல்: அபூதாவூத் (1178)
இது போன்ற சில செய்திகளை அடிப்படையாக வைத்து சிலர் லைலத்துல் கத்ர் இரவு 27வது இரவு தான் என்று கூறுகின்றனர்.
இந்த ஹதீஸ் மட்டும் வந்திருந்தால் நாம் 27வது இரவு தான் என்று முடிவு செய்யலாம். ஆனால் இதற்கு மாற்றமாக நாம் முன்னர் குறிப்பிட்ட ஹதீஸில் லைலத்துல் கத்ர் இரவு என்பது நபி (ஸல்) அவர்களுக்கே மறக்கடிக்கப் பட்டுள்ளது என்று தெளிவாகக் குறிப்பிட்டு விட்டு, கடைசிப் பத்தின் ஒற்றை நாட்களில் அதை தேடிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். மேலும் 27 என்று குறிப்பிட்டுள்ளது போல் 23 என்றும் வந்துள்ளது. அவற்றை பாருங்கள்.
ரமலான் மாதத்தில் தேடக் கூடிய இரவான லைலத்துல் கத்ரைப் பற்றி நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 23வது இரவு என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி), நூல்: அஹ்மத் (15466)
இதைப் போன்று 21, 23, 25 என்று மூன்று இரவுகளை மட்டும் குறிப்பிட்டும் வந்துள்ளது.
“ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் லைலதுல் கத்ரை தேடுங்கள். லைலதுல் கத்ரை இருபத்தி ஒன்றாவது இரவில், இருபத்தி மூன்றாவது இரவில், இருபத்தி ஐந்தாவது இரவில் தேடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 2021
இதைப் போன்று 23, 29 இரவு என்று இரண்டு இரவுகளை மட்டும் குறிப்பிட்டும் வந்துள்ளது.
“லைலதுல் கத்ரு இரவு கடைசிப் பத்து நாட்களில் உள்ளது. அதை இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ தேடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 2022
இப்படிப் பல்வேறு அறிவிப்புகள் வருவதன் சரியான கருத்து என்ன? என்பதற்கு இமாம் ஷாஃபீ அவர்கள் தெளிவான விடையை கூறியுள்ளார்கள்.
இப்படிப் பலவாறாக நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கு விளக்கம் அளித்த இமாம் ஷாஃபி அவர்கள், “நபியவர்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்ப பதில் கூறும் வழக்கம் உள்ளவர்கள். இந்த இரவில் நாங்கள் லைலத்துல் கத்ரைத் தேடலாமா?’ என்று கேட்கும் போது அந்த இரவில் தேடுங்கள். என்று பதிலளித்திருப்பார்கள்” என்று கூறுகிறார்கள். (திர்மிதீ 722)
அதாவது ஒரு நபித்தோழர் 21வது இரவில் லைலத்துல் கத்ரை தேடலாமா? என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம், 21 வது இரவில் தேடுங்கள்’ என்று கூறியிருப்பார்கள். இன்னொரு நபித்தோழர் 23வது இரவில் கத்ரை தேடலாமா? என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம், 23வது இரவில் தேடுங்கள்’ என்று கூறியிருப்பார்கள். இவ்வாறு ஐந்து ஒற்றைப்படை இரவுகளைப் பற்றியும் கேட்டிருப்பார்கள். அதற்கு ஏற்றவாறு நபி (ஸல்) அவர்கள் பதிலளித்திருப்பார்கள். எனவே ஐந்து ஒற்றைப்படை இரவுகள் பற்றியும் ஹதீஸ்களில் இடம் பெற்று இருக்கிறது. இந்தக் கருத்தே மாறுபட்ட ஹதீஸ்கள் வந்திருப்பதன் சரியான விளக்கமாகத் தெரிகிறது.

Saturday, August 13, 2011

நோன்பை முறிக்கும் செயல்கள்


உண்ணாமல் இருப்பது, பருகாமல் இருப்பது, இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பது ஆகிய கட்டுப்பாடுதான் நோன்பு எனப்படுகிறது.

நோன்பாளிக்கு இந்த மூன்றைத் தவிர வேறு எதையும் செய்யக் கூடாது என்று தடை இல்லை. இம்மூன்று காரியங்களில் எதைச் செய்தாலும் நோன்பு முறிந்துவிடும். இவை தவிர நோன்பாளி கடைபிடிக்க வேண்டிய ஆன்மீக ஒழுங்குகளும் உள்ளன. அவற்றையும் கடைபிடிக்க வேண்டும். 

பொய்யான பேச்சையும், பொய்யான (தீய) நடவடிக்கையையும் யார் கைவிடவில்லையோ அவர் பசித்திருப்பதும் தாகமாக இருப்பதும் அல்லாஹ்வுக்குத் தேவையில்லாத ஒன்று என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரீ (1903) 

எதை அல்லாஹ் தேவையில்லை என்று கூறினானோ அதற்கு அல்லாஹ் எந்தக் கூலியையும் தர மாட்டான். எந்த இலட்சியத்தை அடைவதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டதோ அந்த இலட்சியத்தை மறந்து  விட்டு பசியோடும் தாகத்தோடும் இருப்பதில் பயனேதும் இருக்க முடியாது.

பொதுவாகவே பொய்கள், புரட்டுகள் மற்றும் தவறான நடவடிக்கைகளில் இருந்து விலகியிருக்கவேண்டும். ஆனால் நோன்பின் போது கண்டிப்பாக அவற்றிலிருந்து அதிகமாக விலகிக் கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காமல் இவற்றால் நோன்பு முறியாது என்று ஃபத்வாக்கள் அளித்து வந்ததால் நோன்பு எந்த மாற்றத்தையும் முஸ்லிம்களிடம் ஏற்படுத்தவில்லை.
நோன்பு நோற்றுக் கொண்டு சினிமாக் கொட்டகைகளில் தவம் கிடப்பது, நோன்பு நோற்றுக் கொண்டு கலப்படம், மோசடி போன்ற செயல்களில் ஈடுபடுவது, பொய், புறம் பேசுவது ஆகியவற்றில் சர்வ சாதாரணமாக முஸ்லிம்கள் ஈடுபடுகின்றனர். பசியோடு இருப்பது மட்டும் தான் இறைவனுக்குத் தேவை என்று எண்ணுகின்றனர். இந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

நம்முடன் சண்டைக்கு வருபவர்களிடம் பதிலுக்குச் சண்டை போட பொதுவாக அனுமதி உள்ளது. நம்மிடம் எந்த அளவுக்கு ஒருவர் வரம்பு மீறுகிறாரோ அந்த அளவுக்கு வரம்பு மீறவும் அனுமதி இருக்கிறது. நோன்பாளி இந்த அனுமதியைக் கூட பயன் படுத்தக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளார்கள்.

நோன்பு நோற்றிருக்கும் போது உங்களிடம் ஒருவர் சண்டைக்கு வந்தால் - அறியாமையாக நடந்து கொண்டால், ஏசினால், நான் நோன்பாளி எனக் கூறிவிடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரீ (1894)

பொதுவாக அனுமதிக்கப்பட்ட சண்டையையே தவிர்த்து விட வேண்டும் என்றால் நோன்பில் எவ்வளவு பக்குவமாக இருக்க வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.  சாதாரண நாட்களில் தொலைக்காட்சி பெட்டியின் முன்னால் கிடந்து ஹராமான காட்சிகளைப் பார்ப்பவர்கள் நோன்பு நோற்ற நிலையிலாவது அதிலிருந்து விடுபட வேண்டும்.

நமது நோன்பைப் பாழாக்கி விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

Thursday, August 11, 2011

ஒருவருக்காக மற்றவர் நோன்பு நோற்றல்

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் "ஒருவரது சுமையை மற்றவர் சுமக்க மாட்டார்''  என்பதும் முக்கியமான கொள்கையாகும். 

ஒவ்வொருவரும் தத்தமது செய்கைகளுக்கு பொறுப்பாளிகள் என்றாலும் இதிலிருந்து சில வணக்கங்கள் மட்டும் விதி விலக்குப் பெறுகின்றன. நோன்பும் அவ்வாறு விதிவிலக்குப் பெற்ற வணக்கங்களில் ஒன்றாகும்.  

நோன்பு களாவாகவுள்ள நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்காக அவரது பொறுப்பாளர் நோன்பு நோற்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்:  ஆயிஷா (ரலி) நூல்: புகாரி (1952)

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். "அல்லாஹ்வின் தூதரே! என் தாய் மீது ஒரு மாத நோன்பு (கடமையாக ) உள்ள நிலையில் மரணித்து விட்டார். அவரது சார்பில் நான் அதை நிறைவேற்றலாமா?'' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "ஆம்! நிறைவேற்றலாம். அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்பட அதிகம் தகுதியானது'' என்று கூறினார்கள். 
அறிவிப்பவர்:  இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ (1953) 

புகாரியின் மற்றொரு ஹதீஸில் ஒரு பெண் வந்து இவ்வாறு கேட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நோன்பு கடமையாகி களாவாகவுள்ள நிலையில் யாரேனும் மரணித்து விட்டால் அவரது வாரிசுகள் அவருக்காக நோன்பு நோற்கலாம் என்று கூறுவதை விட நோற்பது அவசியம் என்று தான் கூற வேண்டும். ஏனெனில் கடனுடன் நோன்பை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒப்பிட்டுள்ளார்கள். 

மேலும் கடனை விட நிறைவேற்றுவதற்கு அதிகத் தகுதியுடையது எனவும் கூறுகிறார்கள். 

இறந்தவர்களுக்காக மார்க்கத்தில் இருக்கும் கத்தம் பாத்திஹா ஓதுவதை விடுத்து இறந்தவர் மீது நோன்பு களாவாக இருந்தால் அதை நிறைவேற்றலாம். 
இறந்தவரின் சொத்துக்களுக்காக மட்டும் வாரிசாக ஆசைப்படுவோர் மார்க்கம் அவர்கள் மீது சுமத்திய இந்தக் கடமையைச் செய்வதில்லை. நாமறிந்த வரை பெற்றோர்களுக்காக ஹஜ் செய்பவர்களைக் கூட காண்கிறோம். ஆனால் 
நோன்பு நோற்பவர்களைக் காண முடியவில்லை. 

பெற்றோர் மீது கடமையான நோன்புகள் களாவாக இருந்தால் தான் வாரிசுகள் நோற்க வேண்டும். உபரியான சுன்னத்தான நோன்புகளுக்கு ஆதாரம் இல்லை. ஏனெனில் அது குறித்து இறந்தவர்களை அல்லாஹ் விசாரிக்க மாட்டான். மேலும் இந்த ஹதீஸில் கடமையான நோன்பு பற்றியே கூறப்பட்டுள்ளது.

Wednesday, July 27, 2011

அறிந்த செய்திகளும் அறியாத உண்மைகளும்

ரமழான் சிறப்பு இதழாக வெளிவந்திருக்கும் SLTJ யின் ஜூலை அழைப்பு மாத இதழிலிருந்து காலத்தின் கட்டாயம் அறிந்து ”அறிந்த செய்திகளும் அறியாத உண்மைகளும்” எனும் தலைப்பில் ரமழான் தொடர்பாக மக்கள் மத்தியில் பேசப்படும் சில பலஹீனமான ஹதீஸ்களை தெளிவுபடுத்தும் இவ்வாக்கத்தை நாம் வெளியிடுகின்றோம்
Arintha Seythikalum Ariyatha Unmaikalum

Friday, July 22, 2011

இரவு தொழுகை 23 ரகாத்துகளா?

SLTJ யின் அழைப்பு ஜுலை மாத இதழானது ரமழான் சிறப்பு இதழாக வெளிவந்துள்ளது. இம்மாத இதழிளிருந்து 
“இரவு தொழுகை 23 ரகாத்துகளா?” எனும் ஆக்கம் காலத்தின் தேவை கருதி அதன் அசல் வடிவிலே வெளியிடுகின்றோம்.
பெரிதாக்கி பார்க்க படங்களின் மீது கிலிக் செய்யவும்

Sunday, July 17, 2011

நோன்பு திறக்கும் துஆ - ஓர் ஆய்வு

SLTJ யின் ஜூலை மாத அழைப்பு இதழ் ரமலான் சிறப்பு இதழாக வெளிவந்துள்ளது. இச்சிறப்பு இதழிலிருந்து நோன்பு திறக்கும் துஆ பற்றிய ஆய்வுக்கட்டுரை இணைய  வாசகர்களுக்காக வெளியிடுகின்றோம். 

படத்தில் மீது கிளிக் செய்தால் பெரிதாக்கி வாசிக்கலாம் 




ரமழானின் சிறப்புகள்- வீடியோ


ரமழானின் சிறப்புகள் 1

ரமழானின் சிறப்புகள் 2

ரமழானின் சிறப்புகள் 3

ரமழானின் சிறப்புகள் 4

ரமழானின் சிறப்புகள் 5

ரமழானின் சிறப்புகள் 6

Saturday, July 16, 2011

முதல் பிறை எப்போது? - வீடியோ

பிறை விளக்கம் 1


பிறை விளக்கம் 2


பிறை விளக்கம் 3


பிறை விளக்கம் 4


பிறை விளக்கம் 5


பிறை விளக்கம் 6