அல்-குர்ஆனால் கவரப்பட்ட டாக்டர் காரி மில்லர்
அது 1977 ஆம் ஆண்டு. டாக்டர் காரி மிலர் கனடாவைச் சேர்ந்த சுறுசுறுப்பான கிறிஸ்தவப் போதகர். டொரன்டோ பல்கலைக் கழகத்தின் கணிதத்துறை, (லொஜிக்) அளவையியல் துறைப் பேராசிரியர். இவர் புனித அல்குர்ஆனில் காணப்படும் வரலாறு மற்றும் அறிவியல் சார்ந்த பிழைகளைக் கண்டு பிடிப்பதன் மூலம் கிறிஸ்தவத்துக்கு மாபெரும் தொண்டாற்ற முற்பட்டார். தான் மேற்கொள்ளப் போகும் தொண்டானது தனக்கும், தன்னைப் போன்ற கிறிஸ்தவப் போதகர்களுக்கும் முஸ்லிம்களை கிறிஸ்தவத்தின் பால் அழைப்பதற்குப் பெரிதும் துணைபுரியும் என்றும் கருதினார்.
எனினும், அல்குர்ஆனில் காணப்படும் பிழைகளை ஆய்வு செய்து, அவற்றைப் பகிரங்கப்படுத்தி இழிவுபடுத்தும் நோக்கில் அதனை ஆய்வுசெய்ய ஆரம்பித்த அவரை, அல்குர்ஆனின் நடுநிலையான போக்கு முற்றிலும் திசைதிருப்பி விட்டது! ஞானம்மிக்க வேதமாகிய அல்குர்ஆனை விளம்பரப்படுத்துவதற்கு முஸ்லிம்களில் பெரும்பாலானோரால் எழுதி முடியாதளவுக்கு அவரது ஆய்வும் தெளிவுரையும் சிறந்து விளங்கியது. நிச்சயமாக அவர் அல்குர்ஆனை மிக அழகிய முறையில் ஆராய்ந்து விட்டார் என்றே கூறவேண்டும்.
ஆம், அல்-குர்ஆனின் அற்புதத் தன்மையால் கவரப்பட்ட மில்லர் (The Amazing Quran) வியப்பூட்டும் குர்ஆன் என்ற பெயரில் ஒரு நூலையே எழுதிவிட்டார். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவரை முதன்முதலில் திடுக்கிடச் செய்த விடயம் குர்ஆனின் சவால்விடும் போக்கேயாகும். இவ்வாறு சவால்விடும் வசனங்கள் அல்குர்ஆனின் பல இடங்களில் காணப்படுகின்றன. உதாரணமாக, அல்குர்ஆனைப் போன்ற ஒரு சூறாவையோ, பத்து வசனங்களையோ அன்றி ஒரு வசனத்தையேனும் கொண்டு வரும்படி குர்ஆன் சவால்விட்டது.
எனவே, இச்சவாலை வெற்றிகொள்வதற்குத் தன்னால் முடியும் என்ற சவாலுடன் ஆரம்பித்த அவர், ஈற்றில் அதில் காணப்பட்ட வியக்கவைக்கும் அறிவியல் உண்மைகளால் கவரப்பட்டு தனது சவாலுக்குத் தானாகவே முற்றுப்புள்ளி இட்டுக்கொண்டார். வியப்பூட்டும் அல்குர்ஆன் என்ற அவரது நூலிலிருந்து அவரது ஆய்வின் பிரதிபலன்கள் சிலவற்றை இங்கே குறிப்பிடுகின்றேன்.
1. டாக்டர் மிலர் (பின்வருமாறு) கூறுகின்றார்: ஒரு நூலை எழுதிவிட்டு, “இந்நூலில் எந்தத் தவறும் இல்லை” என்று கூறும் தைரியம் உலகில் எந்தவொரு எழுத்தாளனுக்கும் இல்லை. எனினும், அல்குர்ஆன் இதற்கு முற்றிலும் நேர்மாறாக, உன்னை நோக்கி, இதில் தவறுகள், பிழைகள் எதுவுமே இல்லை என்று அறுதியிட்டுக் கூறுகின்றது மட்டுமன்றி அதில் எந்தத் தவறுமில்லை. அவ்வாறே இனிமேலும் அதில் எந்தத் தவறும் இருக்காது என்றும் சவால் விடுகின்றது.
2. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது தனிப்பட்ட உலக வாழ்வுடன் தொடர்பான விடயங்கள் அதில் காணப்படுவதில்லை. உதாரணமாக அவரது மனைவி கதீஜா (ரழி) அவர்களின் மரணம், அவரது ஆண்-பெண் பிள்ளைகளது மரணம் போன்ற எதனையும் அல்குர்ஆன் குறிப்பிடவில்லை. மாறாக, அதிசயம் என்னவெனில், தஃவா எனும் புனித அழைப்புப் பணியில் ஈடுபட்டபோது நபியவர்களுக்கு நிகழ்ந்த சில துயர்மிகு சம்பவங்களையே அது கோடிட்டுக் காட்டியது. இத்துயர்மிகு நிகழ்வுகள் அனைத்தும் வெற்றியையே பறைசாற்றிக் கொண்டிருந்தன. மேலும், நபியவர்களுக்கு ஏற்பட்ட வெற்றிகளைக் கோடிட்டுக் காட்டிய வசனங்கள், வெற்றியைக் கண்டு ஏமாற்றமடைந்து விடாது இருக்குமாறும், தியாகத்தையும் உழைப்பையும் மென்மேலும் அதிகரிக்கும் படியும் அழைக்கின்ற அமைப்பிலேயே காணப்பட்டன. எந்தவொரு மனிதனும் தனது வரலாற்றை எழுதும்போது வெற்றிகளை மிகைப்படுத்திக் கூறிவிட்டு, தோல்விகளுக்கு நியாயம் கற்பிக்கவே முனைவர். எனினும் அல்குர்ஆனோ முற்றிலும் நேர்முரணாகக் காணப்பட்டது. அல்லாஹ்வுக்கும், ஏனையோருக்கும் இடையிலுள்ள தொடர்புகளுக்கான பொதுவிதிகளை முன்வைக்கின்ற அளவுக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்துக்காக மட்டும் அது வரலாறு படைக்கவில்லை
3.. قُلْ إِنَّمَا أَعِظُكُم بِوَاحِدَةٍ أَن تَقُومُوا لِلَّهِ مَثْنَى وَفُرَادَى ثُمَّ تَتَفَكَّرُوا مَا بِصَاحِبِكُم مِّن جِنَّةٍ إِنْ هُوَ إِلَّا نَذِيرٌ لَّكُم بَيْنَ يَدَيْ عَذَابٍ شَدِيدٍ
“நான் உங்களுக்கு உபதேசிப்பது ஒரேஒரு விஷயத்தைப் பற்றித்தான்; நீங்கள் இரண்டிரண்டு பேர்களாகவோ, தனித்தனியாகவோ அல்லாஹ்வுக்காக எழுந்தமர்ந்து பின்னர் சிந்தித்துப்பாருங்கள்’ என்று (நபியே!) நீர் கூறும். உங்கள் நண்பருக்கு பைத்தியம் எதுவுமில்லை உங்களுக்குக் கடினமான வேதனை வருவதற்கு முன்னர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரல்லாமல், அவர் வேறில்லை” (அஸ்ஸபஉ: 46).
மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனத்தை உற்றுநோக்கிய மில்லர் ஒரு கனம் மலைத்துப் போய்விட்டாராம். ‘சமூகவியல் ஆய்வுச் செயற்திட்டம்’ என்ற தொனிப்பொருளில், ஒரு ஆய்வாளர் நிகழ்த்திய (பரிசோதனையை) ஆய்வை மிலர் சுட்டிக்காட்டுகின்றார். இவ்வாய்வை நிகழ்த்துவதற்காக பல்வேறுபட்ட ஆய்வாளர்களை ஒன்றுசேர்த்து அவர்கள் அனைவரும் முன்வைத்த பிரதிபலன்களை ஒப்பிட்டு நோக்கினார். உரையாடுவோரின் எண்ணிக்கை இருவராக இருக்கும்போதே ஆய்வுக்கான செயற் திட்டம் வெற்றியடையும் என்ற விடயம் தெளிவாகியது. இவ்வெண்ணிக்கையானது இரண்டை விட அதிகரித்தால், செயற்றிட்டத்தின் வலு குறைந்து விடும் என்ற விடயமும் தெளிவாகியது. இவ்வாறான மிக நுனுக்கமான விடயங்களை அல்குர்ஆன் மிகத் துல்லியமாக மேற்குறித்த வசனத்திலே சுட்டிக் காட்டியிருப்பது கண்டு மிலர் மிகவும் வியப்படைந்தார்.
4. அல்குர்ஆனில் மர்யம் என்ற பெயரில் ஒரு பூரண அத்தியாயமே காணப்படுகின்றது. தாம் புனித வேதநூலாகக் கருதும் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றுக்கும் நிகரில்லாத அளவுக்கு, மர்யம் (அலை) அவர்களின் புகழையும், சிறப்பையும் இவ்வத்தியாயம் பறைசாற்றியது. இது இவ்வாறு இருக்க (நபியின் மனைவியாகிய) ஆயிஷா (ரலி) அவர்களின் பெயரிலோ அன்றி (நபியின் மகளாகிய) பாத்திமா (ரலி) அவர்களின் பெயரிலோ எந்தவொரு அத்தியாயமும் காணப்படுவதில்லை. மேலும், ஈஸா (அலை) அவர்களின் பெயர் அல்குர்ஆனில் 25 முறை குறிப்பிடப்பட்டிருக்கும் அதேவேளை, முஹம்மத் நபி (ஸல்) அவர்களது பெயரோ 5 முறை மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது.
5. நபியவர்கள் கொண்டுவந்த வேதத்தை ஷைத்தான்கள்தான் அவருக்கு ஓதிக் காட்டி பூர்த்தி செய்தன என்று, வஹியையும், தூதுத்துவத்தையும் நிராகரிப்போர் கருதுகின்றனர். எனினும், இதோ பின்வருமாறு அல்குர்ஆன் இவர்களுடன் சவால் விடுகின்றது:
وَمَا تَنَزَّلَتْ بِهِ الشَّيَاطِينُ . وَمَا يَنبَغِي لَهُمْ وَمَا يَسْتَطِيعُونَ
‘இன்னும் ஷைத்தான்கள் இ(வ்வேதத்)தைக் கொண்டு இறங்கவில்லை. மேலும், அது அவர்களுக்குத் தகுதியுமல்ல. (அதற்கு) அவர்கள் சக்தி பெறவும் மாட்டார்கள்’ (அஷ்-ஷுஅறா: 210-211).
ஆகவே, ஷைத்தான்கள் ஒருநூலை எழுதிவிட்டு, அதனை எழுத என்னால் முடியாது என்று அவையாகவே கூறுமா?
மாறாக, புத்தகத்தை ஓதும்போது ‘என்னிடமிருந்து பாதுகாப்புத் தேடிக்கொள்’ என்றும் அது கூறுமா?
6. இறைத்தூதரும், அபூபக்ர் (ரலி) அவர்களும் குகையில் முற்றுகையிடப்பட்டுக் கொண்டிருந்த வேளை, அவர்களது பாதங்களுக்குக் கீழால் இணைவைப்பாளர்களில் எவரேனும் பார்த்துவிட்டால் அவர்கள் இருவரையுமே கண்டுவிடுவர். இந்நிலையில் அபூபக்ர் (ரலி) அவர்கள் மிகவும் அச்சம் கொண்டு காணப்பட்டார். எனினும், அபூபக்ர் (ரலி) அவர்களின் அச்சத்தைக் கண்ட நபியவர்கள், ‘பின்புறமாக ஏதேனும் கதவுகள் உண்டா? என்று பார்ப்போம்!” என்றோ, ‘யாராவது நாம் பேசுவதை செவியுற்றுவிடாத வண்ணம் வாய்பொத்தி மௌனமாக இருந்து கொள்ளவும்’ என்றோ கூறவில்லை.
பொதுவாக ஒரு சாதாரண மனிதனின் இயல்பான பதிலாக மேற்கூறப்பட்ட வசனங்கள்தான் இடம்பெறும். எனினும் இந்நிலைக்கு மாற்றமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அபூபக்கரை நோக்கி, மிகவும் நிதானமாகவும், அமைதியாகவும் ‘கவலைப் பட வேண்டாம்! நிச்சயமாக அல்லாஹ் எங்களோடு உள்ளான்!’ என்றும், ‘அல்லாஹ் எம்முடன் உள்ளான். அவன் எங்களை வீணாக்கி விட மாட்டான்’ என்றுமே கூறினார்கள். ஆகவே, இது ஒரு பொய்யனின் அல்லது துரோகியின் புத்தியின் வெளிப்பாடா? அன்றி, அல்லாஹ்வின் உதவி தனக்கு என்றென்றும் உண்டென்று உறுதியாக நம்புகின்ற ஒரு நபியின், இறைத்தூதரின் அறிவின் வெளிப்பாடா?
7. அபூலஹப் மரணிப்பதற்கு பத்து வருடங்களுக்கு முன்னரே, ‘அல் மஸத்’ எனும் எனும் அத்தியாயம் இறங்கியது. எனவே, இந்தக் குர்ஆன் பொய்யானது என்பதை நிரூபிக்க 365 × 10 = 3650 நாட்களும், சந்தர்ப்பங்களும் தாராளமாகக் காணப்பட்டன. எனினும், இவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. எவ்வளவு அபூர்வமான சவால் பொய்யாகவேனும், வெளித்தோற்றத்துக்கு மாத்திரம் நடிப்புக்காக வேனும் அபூ லஹப் இஸ்லாத்தைத் தழுவ வில்லையே!! (இவ்வாறு இவன் பொய்யாகவேனும் இஸ்லாத்தைத் தழுவியிருந்தால் அல்குர்ஆன் பொய்யாக்கப்பட்டிருக்கும்.) இன்றுவரை இதே வசனங்கள் ஓதப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
இது அல்லாஹ்விடமிருந்துள்ள வஹீ என்று அறிந்திருக்காவிடின், தன்னிடமுள்ள வேதநூல் சத்திய உண்மையே என்ற நம்பிக்கையுடன் பத்து வருடங்களாக எப்படி நபியவர்களால் வாழ முடிந்திருக்கும்! (எனவே, அல்குர்ஆன் இறைவனிடமிருந்துள்ள சத்திய வேதமேயன்றி, வேறில்லை என்ற மன உறுதியுடனே நபியவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவ்வாறே இப்பத்து வருட நீண்ட கால எல்லையில் அபூலஹபும் இஸ்லாத்தை ஏற்கவில்லை.)
8. مَا كُنتَ تَعْلَمُهَا أَنتَ وَلاَ قَوْمُكَ مِن قَبْلِ هَذَا ‘(நபியே!) இவற்றை (இதற்கு முன்னர்) நீங்களோ, உங்கள் சமுதாயத்தினரோ அறிந்திருக்க வில்லை’(ஹூத்: 49)
என்ற திருமறை வசனத்தின் விளக்கத்தை குர்ஆனியக் கதைகள் சிலவற்றின் பினனணியூடாக விளக்குகின்ற போது, டாக்டர் மில்லர் பின்வருமாறு கூறுகின்றார்: சமய ரீதியான புனித நூல்கள் எதுவுமே இவ்வாறான உரைநடையுடன் பேசுவதைக் காண முடியாது! எனினும், அல்குர்ஆன் அதனை ஓதுவோருக்கு தகவல்களை வழங்கிவிட்டு, ‘இவை புதிய தகவல்களாகும்.’ என்று கூறுகின்றது.
இது நிகரேயில்லாத ஒரு சவாலாகவல்லவோ இருக்கின்றது! மக்காவாசிகள் - வீண் வாதாட்டத்துக்காகவேனும் நபியவர்களை நோக்கி, ‘(முஹம்மதே!) நீங்கள் பொய்யுரைத்து விட்டீர்! நீங்கள் கூறும் விடயங்கள் ஏற்கனவே எமக்குத் தெரிந்தவைகளே’ என்று கூறியிருந்தால் என்ன நடந்திருக்கும்? இவ்வாறே, ஆய்வாளர்களில் எவரேனும் குதர்க்க வாதம் புரிகின்ற நோக்கிலேனும், ‘(முஹம்மதே!) இந்தத் தகவல்கள் இதற்கு முன்னர் அறிமுகமான, அறியப்பட்டவைகளாகவே காணப்பட்டன.’ என்று கூறியிருந்தால் எப்படியிருந்திருக்கும்? (எனினும், இவ்வாறு அல்குர்ஆன் புதிய தகவல்கள் என்று கூறிய எதையும் எவருமே பழையவை, அறியப்பட்டவை என்று கூறவில்லை. இவ்வாறு கூறியிருந்தால் அல்குர்ஆன் பொய்ப்பிக்கப்பட்டிருக்கும்) எனினும், இவ்வாறு எதுவுமே நடைபெறவில்லையே!!
9. குர்ஆனிய வஹியின் நம்பகத் தன்மையை மாசுபடுத்துவதற்கென, எத்தனையோ ஆய்வுகள், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவை எதுவும் பலனளிக்கவில்லை என்ற உண்மையை, புதிய கத்தோலிக்க கலைக் களஞ்சியம் ‘அல்குர்ஆன்’ என்ற தலைப்புக்குக் கீழே பதிவு செய்துள்ளது.
இதனை டாக்டர் மில்லர் பின்வருமாறு சுட்டிக் காட்டுகின்றார். ‘அல்குர்ஆன் ஒரு நோயாளியின் வெறும் கற்பனைகள், அது ஷைத்தானின் ஊசலாட்டங்கள் என்றும், அல்குர்ஆனை நபியவர்களுக்குக் கற்பித்தவர் ஒரு மனிதரேயாவார் என்றும், இது ஒரு பழைய நூலை அடிப்படையாகக் கொண்டு அமையப் பெற்றது என்றும் அல்குர்ஆனுக்கெதிரான பல்வேறுபட்ட கருத்துக்களை அவை கூறியிருந்தன. எனினும், ஈற்றில் அந்த ஆய்வுகள் அனைத்தும் பின்வரும் முடிவையே முன்வைத்தன: வரலாறு நெடுகிலும் அல்குர்ஆனுக்கு எதிரான பல வாதங்கள் தோன்றிய போதும், ஈற்றில் அவை அனைத்துமே அல்குர்ஆன் ஒரு அறிவுள்ள மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல என்ற முடிவையே ஏற்றுக் கொண்டன.
மேலும், டாக்டர் மில்லர் பின்வருமாறு கூறுகின்றார்: வஹியின் நம்பகத் தன்மையை இழக்கச் செய்யும் இவ்வகை வாதங்களில் ஒன்றை நடாத்துவதற்கு ஒரு தேவாலயம் தீர்மானித்திருந்தது. எனினும், இறுதியாக அதே தேவாலயம் குர்ஆனுக்கெதிரான இத்தகு அனைத்துவித வாதங்களையும் புறக்கணித்து விட்டது. இருப்பினும், குர்ஆன் பற்றிய முஸ்லிம்களின் வாதங்கள் உண்மை என்பதை ஏற்றுக் கொள்ளும் தைரியமும் குறித்த தேவலாயத்திடம் காணப்படவில்லை.
டாக்டர் மில்லர் அவர்களே! அல்லாஹ்வின் வேதநூலாகிய அல்குர்ஆன் பற்றி மிகவும் நீதமாகவும், நடுநிலை பேணியும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இச்சிறப்புமிகு ஆய்வுக்காக அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக! என்று பிரார்த்திப்பதா? அல்லது இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்ட பொறாமையுணர்வுள்ளவர்களை, இம்மனிதர் எழுதிய நூலை ஆராய்ந்து பார்க்க அழைப்பு விடுப்பதா?
அல்குர்ஆனின் அற்புதத்தன்மை என்ற தலைப்புக்களில் அக்கறையோடு ஆய்வு செய்கின்றவர்களிடம் கீழ்வரும் இரண்டு காரணங்களுக்காக இவரது நூலையும் உங்கள் பாடத்திட்டத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவதா?
1. ‘இது அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து வந்திருந்தால், அதிலே பல கருத்து முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்’ என்ற வசனத்தின் அற்புதத்தை இவரது நூல் உறுதிப்படுத்துகின்றது.
2. ‘பிழை தேடும் முயற்சி’ என்ற வகையில் அல்குர்ஆன் விடுகின்ற சவாலை இவரது நூல் நிலைப்படுத்துகின்றது. (இவ்விரு விடயங்களையும் உங்கள் ‘வியப்பூட்டும் குர்ஆன்’ எனும் நூல் நிரூபித்துவிட்டது.)
குறிப்பு: ஏறக்குறைய 30 வருடங்களுக்கு முன்னர் ‘இஸ்லாமும் கிறிஸ்தவமும்’ என்ற தலைப்பில் ஒரு பிரபல்யமான விவாதம் நடைபெற்றது. இஸ்லாமிய அழைப்பாளர் அஹ்மத் தீதாத் அவர்களுடன் நடைபெற்ற இவ்விவாதத்திலே, கிறிஸ்தவம் சார்பாக டாக்டர் மில்லர் கலந்து கொண்டு வாதிட்டார். இவரது பேச்சாற்றல் மிகப் பலமானதாகவும், இவர் முன்வைக்கும் ஆதாரங்கள் உயிரோட்டமுள்ளதாகவும் காணப்பட்டன. சத்தியத்தை ஆராய்ந்தமை அவரது மார்க்கத்தின் மீது அவருக்கிருந்த பற்றையும் பிடிவாதத்தையும் மிகைத்துவிட்டது.
ஆம்! 1977 ஆம் ஆண்டளவில் மில்லர் அல்குர்ஆன் பற்றிய ஆய்வை மேற்கொள்ள ஆரம்பித்தார். எனினும், 1978 ஆம் ஆண்டை அடைந்தபோது, மில்லர் இஸ்லாத்தைத் தழுவிவிட்டார். இஸ்லாத்தில் இணைந்த மில்லர் தனது பெயரை அப்துல் அஹத் உமர் என்று மாற்றிக் கொண்டார். பின்னர் ஸவூதி அரேபியாவின் பெற்றோலியம் மற்றும் கனிய வள பல்கலைக் கழகத்திலே பல வருடங்கள் கடமையாற்றினார். பின்னர், தன்னை முற்று முழுதாகவும். இஸ்லாமியப் பிரச்சாரப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார். இஸ்லாத்தின்பால் மக்களை அழைப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இவர், தொலைக்காட்சி மற்றும் ஒலிபரப்புச் சாதனங்களில் பல நிகழ்ச்சிகளை நடத்தினார். இஸ்லாமியக் கொள்கை விளக்கத்துடனும் ஷரீஆ சட்டத்துடனும் தொடர்பான பொதுவான பல உரைகளையும் சமுதாயத்துக்காக முன்வைத்தார்.
(அல்லாஹ் மேலான சுவனத்தை எமக்கும், காரி மில்லர் அவர்களுக்கும் வழங்குவானாக!)
தழுவல்: www.55a.com
தமிழில்: மௌலவியா எம்.வை. மஸிய்யா BA (Hons)
0 comments:
Post a Comment