இஸ்லாமிய மார்க்கத்தின் முக்கியமான அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்று மறுமை நாளை நம்புவதாகும். இந்த நம்பிக்கைதான் மனிதனை உலகத்தில் நிம்மதியுடன், இறை வனுக்கு அஞ்சி வாழ வழிவகுக்கும். இந்த நம்பிக்கையை இஸ்லாம் மிக ஆழமாகவும், ஆணித் தரமாகவும் போதிக்கிறது.
கண்ணியமிக்க அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்...
அல்லாஹ்வைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எந்தச் சந்தேகமும் இல்லாத கியாமத் நாளில் உங்களை அவன் ஒன்று திரட்டுவான். அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யாரிருக்கமுடியும்?!' (அல்குர்ஆன் 4:87)
என்று மறுமைநாள் வந்தே தீரக்கூடிய ஒன்று என்பதை வல்லநாயன் அல்லாஹ் தெளிவாகக் கூறுகிறான்.
நபி(ஸல்) அவர்கள் தமது ஏகத்துவப் பிரச்சாரத்தையும், மரணத்திற்குப்பின் இன்னொரு வாழ்க்கை உள்ளது என்பதையும் போதனை செய்தபோது, அவர்களை ஏற்காத மக்கள் ஏகத்துவத்தை எதிர்ப்பதை விட, மறுமை வாழ்வையே கடுமையாக எதிர்த்தார்கள். மரணத்திற்குப் பின்னால் ஒரு வாழ்க்கை இருக்கிறதா? என்பதே பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக அவர்களுக்கு இருந்தது. அந்த வாழ்க்கையில் அவர்களுக்கு நம்பிக்கையில்லாததே ஏகத்துவத்தை அவர்கள் நிராகரிக்கக் காரணமாக இருந்தது என்றும் கூறலாம். அவர்கள் மறுமை நம்பிக்கையை மறுத்ததை வல்ல ரஹ்மான் பின்வருமாறு திருக்குர்ஆனில் பதிவு செய்கிறான்.
'மேலும் மனிதன், தான் படைக்கப்பட்டதை மறந்துவிட்டு நமக்கு உதாரணம் கூறுகிறான். எலும்புகள் மக்கிவிட்ட நிலையில் அதை அவனால் உயிர்ப்பிக்க முடியுமா? என்று அவன் கூறுகிறான்' (அல்குர்ஆன் 36:78)
'எலும்புகளாகவும் மக்கிப்போனவையாகவும் நாங்கள் ஆகிவிட்ட பின் புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுவோமா என்ன? என்றும் அவர்கள் கேட்கின்றனர்' (அல்குர்ஆன் 17:49)
இவ்வளவு வன்மையாக மறுமை வாழ்வை ஒரு கூட்டம் மறுத்து வந்தது. அந்த மறுப்பு எந்தவித நியாமும், அர்த்தமும் அற்றது என்று வல்ல நாயன் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
'கியாமத்நாள் மீது சத்தியம் செய்கிறேன். குறை கூறிக் கொண்டிருக்கும் உள்ளத்தின் மீது சத்தியம் செய்கிறேன். மனிதனின் எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று அவன் எண்ணுகிறானா? அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள்' (அல்குர்ஆன் 75:1-4)
வல்ல அல்லாஹ்வின் இந்த பேராற்றலை உணர்ந்த இன்னொரு கூட்டமோ மறுமை வாழ்வில் உறுதியாக மறுமை வாழ்வில் முழு நம்பிக்கை வைத்திருந்தது. அதன் வெளிப்பாடாக தரக்குறைவான வார்த்தைகளால் தாங்கள் ஏசப்பட்டபோது சகித்துக் கொண்டார்கள். சித்ரவதை செய்யப்பட்டார்கள். அதையும் சிரித்த முகத்துடன் ஏற்றுக் கொண்டார்கள். நாடு கடத்தப்பட்டார்கள். அனைத்தையும் துறந்துவிட்டுச் செல்வது அவர்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. ஆசை வார்த்தைகள் அவர்களை மயக்கவில்லை. அச்சுறுத்தல்கள் அவர்களை சிறிதளவும் அசைக்க முடியவில்லை.
குறைந்த எண்ணிக்கையினராகவும், பலவீனர்களாகவும் இருந்தும் பெரும் கூட்டத்தை எதிர்த்து நிற்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டதும் அவர்கள் கணக்கு பார்த்துக் கொண்டிருக் காமல் களத்தில் குதித்தார்கள். இதற்கெல்லாம் என்ன காரணம்? இந்த உலக வாழ்க்கையோடு எல்லாம் முடிந்து விடுவதில்லை. இதன் பிறகு அழியாத பெருவாழ்வு உண்டு என்பதில் அவர்களுக்கு இருந்த உறுதியான நம்பிக்கைதான் காரணம்! மறுஉலக வாழ்வில் நம்பிக்கை வைப்பது ஒரு சமுதா யத்தின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடும் அளவுக்கு மகத்தானது. அவர்களது வாழ்வின் போக்கையே அந்த நம்பிக்கை மாற்றி அமைக்கும் அளவுக்கு அது மகத்தானது!
கல்லுக்கும்-மண்ணுக்கும் கடவுள் தன்மை வழங்கி வழிபட்டவர்கள், ஏக இறைவனைத் தவிர எவருக்கும், எதற்கும் அஞ்சாதவர்களாக ஆனது(பார்க்க அல்குர்ஆன் 33:39) இந்த நம்பிக்கையினால்தான்!
தன்னலமே பெரிது என்று வாழ்ந்த கூட்டம் தனக்கு வறுமை இருந்த போதும், தன்னை விட மற்றவர்கள் நலனில் அக்கறை செலுத்துபவர்களாக மாறியது (பார்க்க அல்குர்ஆன் 59:9) இந்த நம்பிக்கையினால்தான்.
ஒற்றுமையின்றித் தங்களுக்குள் அன்றாடம் போரிட்டுக் கொண்டிருந்த சமுதாயம், ஒற்றுமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தது (பார்க்க அல்குர்ஆன் 3:103) இந்த நம்பிக்கையினால்தான்.
மதுவில் வீழ்ந்து கிடந்த சமுதாயம் (பார்க்க அல்குர்ஆன் 5:90)அதிலிருந்து முழுமையாக விடுபட்டது இந்த நம்பிக்கையினால்தான்.
தங்களின் அனைத்துத் தீமைகளையும் விட்டு விலகுவதாக பெண்களும்கூட உறுதிமொழி எடுத்துக் கொண்டது (பார்க்க அல்குர்ஆன் 60:12) இந்த நம்பிக்கையினால்தான்.
எந்த மனிதரிடமும், எந்த உரிமையையும் நாடாமல் சுயமரியாதையைப் பாதுகாக்கக்கூடிய சமுதாயமாக அவர்கள் மாறியதும் (பார்க்க அல்குர்ஆன் 2:273) இந்த நம்பிக்கையினால்தான்.
தங்களுக்கு நல்லது இது, கெட்டது இது என்று தெரியாத ஒரு கூட்டம் அனைத்து நன்மைகளையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லி, அனைத்துத் தீமைகளை விட்டும் அவர்களை விலக்கக் கூடியவர்களாக மாறியதும்(பார்க்க அல்குர்ஆன் 3:104) இந்த நம்பிக்கையினால்தான்.
மனித வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் மறுமை நம்பிக்கை ஒருபுறம் மகத்தான மாறுதலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அந்த நம்பிக்கை அற்றவர்களோ கட்டுப் பாடற்ற வாழ்வில் லயித்துக்கெண்டு மறுமை நாளைப்பற்றி சர்ச்சை செய்து கொண்டிருந்தனர்.
அவர்கள் தங்களுக்கிடையே சர்ச்சை செய்து கொண்டிருக்கும் நாள் எப்போது வரும் என்பதை இறைவன் கூறாவிட்டாலும், அந்த நாள் நெருங்க நெருங்க உலகில் ஏற்படும் விபரீதங்களை நபி(ஸல்) அவர்களைக் கொண்டு முன்கூட்டியே அறிவித்துச் கொடுத்துள்ளான். அவற்றில் பெரிய அடையாளங்களும், சிறிய அடையாளங்களும் அடங்கியுள்ளன. பெரிய அடையாளங்கள் இதுவரை நிகழவில்லை. சிறிய அடையாளங்களில் ஓரளவு நாம் வாழும் காலத்திலேயே நடந்துவருகின்றன. அவற்றை அறிவதன் மூலம் அந்த நாளை நம் காலத்தவர்கள் எந்த அளவுக்கு நெருங்கியுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள அந்த முன்னறிவிப்புகள் நமக்கு உதவும் என்பதால் அவற்றில் நிகழ்ந்துவிட்ட, நிகழ்ந்து கொண்டிருக்கின்ற சிறு முன்னறிவிப்புகளை மட்டும் இங்கு தெரிந்து கொள்வோம்.
காலம் சுருங்கும்!
காலம் சுருங்கும் வரை அந்தநாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகிவிடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும். (இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு விநாடி போன்று ஆகும் என்பது நபியவர்கள் காட்டிய அடையாளம்' (நூல்: திர்மிதீ)
காலம் வெகுவேகமாக ஓடுவதும் இன்று நாம் காணக்கூடியதாக உள்ளது. மனிதனின் விஞ்ஞான அறிவு வளர்ந்து, அவன் கண்டுபிடிக்கும் நவீன சாதனங்களால் காலம் மிகவும் சுருங்கிவிட்டதைக் காண்கிறோம். ஒரு வாரம் பயணம் செய்யும் தூரம் ஒரு நாளில் சர்வ சாதாரணமாகக் கடக்கப் படுகின்றது.
ஒரு வாரத்தில் செய்யப்படத்தக்க வேலைகள் ஒரு நாளில் செய்து முடிக்கப்பட சாதனங்கள் இன்று உள்ளன. எங்கோ நடக்கும் நிகழ்ச்சிகள் அதே நேரத்தில் முழு உலகையும் எட்டி விடுகின்றன. இத்தகைய முன்னேற்றங்களும்கூட அந்தநாள் சமீபித்து வருகின்றது என்பதற்கான அடையாளமே.
'யுக முடிவு நாள் நெருங்கும்போது விபச்சாரமும், மதுவும் பெருகும்' என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்;.(ஆதார நூல்: புஹாரி 80-81, முஸ்லிம்)
'பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும்' என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். நூல்: புஹாரி 1036
'ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனிமேல் தோன்றுவார்கள்' என்பதும் நபிமொழியாகும். நூல்: முஸ்லிம் 3971
'தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளமாகும்' என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: ஹாகிம் 4-493
'மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்' என்பது நபிமொழி. நூல்: நஸயி, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்
'பள்ளிவாசல் பாதைகளாக ஆக்கப்படுவதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும்' என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: ஹாகிம் 4-493
'கடைகள் பெருகி, அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: அஹ்மத்
'பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரி;ப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும்' என்று நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி. நூல்: புஹாரி
'தங்கள் நாவுகளை (மூலதனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர்கள் தோன்றும் வரை யுக முடிவுநாள் ஏற்படாது' என்பது நபிமொழி. நூல்: அஹ்மத் (பேச்சை தொழிலாக்கி பொருள் திரட்டக்கூடிய பலரை இன்று நாம் காண்கின்றோம்)
கவனிப்பாரற்ற நிலையில் பெற்றோர்கள்!
'ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்' அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புஹாரி 4777
ஒரு தாய் எத்தனை ஆண் மக்களைப் பெற்றாலும் அவர்கள் தாயைக் கவனிக்காத நிலை ஏற்படும். மகளை அண்டி வாழும் நிலைமையை அவள் சந்திப்பாள். அங்கே அடிமையாக நடத்தப்படுவாள் என்பது நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த அடையாளங்களில் ஒன்றாகும். இன்றைக்குப் பரவலாக இந்த நிலையைப் பெற்றோர்கள் சந்தித்து வருகின்றனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் வியக்கத்தக்க முன்னேற்றத்தை அடைவார்கள்!
'வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறுங்காலுடனும் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த வர்கள் மிகவும் உயர்ந்த கட்டிடங்களைக் கட்டிக் கொள்வார்கள்' (ஆதார நூல்: முஸ்லிம்)
செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலை ஏற்படும் வரையிலும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக மாறும் வரையிலும் அந்த நாள் ஏற்படாது' (ஆதார நூல்: முஸ்லிம்)
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இந்த முன்னறிவிப்புகள் இன்று நிறைவேறிக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு உலகில் பல நாடுகளுக்கு கிடைத்திருக்கும் வாழ்வும், புரட்சிகரமான மாறுதல்களும் இதை விளங்கிடப் போதுமானவையாகும்.
பொறுப்பற்றவர்களிடம் பொறுப்பு!
'நாணயம் பாழாக்கப்படும்போது அந்த நாளை எதிர்நோக்கு! என்று நபியவர்கள் கூறியபோது, எவ்வாறு பாழ்படுத்தப்படும்? என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'தகுதியற்றவர்களிடம் ஒரு காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர்நோக்கு' என்று விடையளித்தார்கள். (ஆதார நூல்: புகாரி)
இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும் என்ற அச்ச மின்றி உலகத்து ரிக்கார்டுகளை சரிசெய்து ஏமாற்றி அபகரித்துக் கொண்டவர்களை இன்றளவும் நாம் காண்பது அந்த நாளுக்கு எவ்வளவு நெருக்கமாகிவிட்டோம் என்பதைத் தெளிவாக்குகின்றது.
சாட்டையின் ஓரமும், செருப்பின் வாரும் மனிதனிடம் பேசும்!
'சாட்டையின் ஓரமும், செருப்பின் வாரும் மனிதனிடம் பேசும் வரை அந்த நாள் வராது' என்பதும் நபியவர்களின் முன்னறிவிப்பு. (ஆதார நூல்: திர்மிதீ)
மனிதன் மட்டுமே பேச இயலும் என்ற நிலைமாறி ஒலி நாடாக்களும் கூட பேசுகின்ற அளவுக்கு மனிதன் அறிவில் முன்னேறிவிட்டான். நேரடியாகப் பேசும் என்று அர்த்தம் கொண்டால் அந்த நிலை இன்னும் ஏற்படவில்லை. செருப்பு வாராகப் பயன்படும் பொருட்கள்கூட ஒலி நாடாக்களாக மனிதனிடம் பேசும் என்று பொருள் கொண்டால், அந்த நிலையை மனிதன் அடைந்துவிட்டான்.
அன்றும் இன்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை! என்றும் நிகழக்கூடியவை!
'யுக முடிவு நாள் வரும்வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம் இம்மார்க்கத்திற்காக போராடிக்கொண்டே இருக்கும்'(முஸ்லிம்)
மேலே கூறப்பட்டுள்ள சிறு அடையாளங்கள் மட்டுமின்றி, மேலும் 10 பெரும் அடையாளங்களை மறுமை நாள் நெருங்குவதற்கான அத்தாட்சிகளாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எடுத்து காட்டியுள்ளார்கள். அவற்றில் சில அடையாளங்கள் ஏற்படும் போது, பாவ மன்னிப்பையும் வல்ல அல்லாஹ் ஏற்க மாட்டான் என நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
இந்த நிரந்தரமற்ற உலகத்தில் மரணம் எப்போது வரும் என்பதை முன்கூட்டியே நாம் அறியாத காரணத்தினால், அந்த மகத்தான நாள் வருவதற்கு முன் நம் வாழ்க்கையை வல்ல அல்லாஹ்வும், அவனது தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் காட்டிய முறைப்படி அமைத்துக் கொண்டு, ஈருலக வெற்றியை பெற முயலுவோம். அதற்கு வல்ல ரஹ்மான் துணை புரிவானாக!
0 comments:
Post a Comment