Tuesday, October 12, 2010

வஹாபிகள் என்றால் யார் ? என்ற கட்டுரையின் அபத்தங்கள்

www.mailofislam.com என்ற இணையதளத்தில் "வஹாபிகள் என்றால் யார் ? " என்ற கட்டுரையில்(?) காணப்படும் அபத்தங்களை மக்களுக்கு தெரிவிப்பதற்காக இந்த ஆக்கம் எழுதப்படுகிறது . இந்த ஆக்கத்தில் முதல் பந்தியின் www.mailofislam.com என்ற இணையதளத்தில் வெளியிட்ட ஆகத்தின் பகுதியும் அதனை தொடர்ந்து எமது கருத்தும் பதியப்படுகிறது

mailofislam.com கட்டுரையில்
1. இதற்கு காரணம் அந்த தீயவர்களின் உள்ளத்தில் நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மீது இருந்த பொறாமை. இவர்களின் நிலையை தெரிந்து கொண்ட நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் இவர்களுக்கு உபதேச தோரணையிலும், கண்டித்தும் பல முறை சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்கள். ஆனால் அது இந்த தீயவர்களுக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆனது.

எமது கருத்து

மேற் குறிப்பிட்ட வாசகங்கள் மூலம், ரசூல் (ஸல்) அவர்களுடைய காலம் முதல் ஒரு கூட்டம், ரசூல் (ஸல்) அவர்களுடன் பொறாமை உணர்வோடு செயல்பட்டார்கள் எனக் கட்டுரையாளர், குறிப்பிடுகின்றார்.

mailofislam.com கட்டுரையில்
2. இவர்களை பற்றி தான் அல்லாஹ் சுப்ஹானஹுதஆலா தனது திருமறையில் நயவஞ்சகர்கள் (முனாபிகீன்கள்) என்று நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு எச்சரிக்கை செய்து இருப்பதை திருமறையில் பல இடங்களில் காணலாம். இவர்களின் போக்கு பற்றி நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு வேதனை ஏற்படுவதுண்டு.


எமது கருத்து
அடுத்ததாக, இப்படி பொறாமையுடன் செயல் பட்ட கூட்டத்தாரை அல்லாஹ் தனது திருமறையில் நயவஞ்சகர்கள் (முனாபிகீன்கள்) எனக் குறிப்பிடுவதாக, இக்கட்டுரையாளர் கூறுகின்றார்.

mailofislam.com கட்டுரையில்
3.நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு பின் 225 வருடங்கள் வரை இஸ்லாமிய உலகம் நிம்மதியோடு இருந்தது. இதற்கிடையில் நஜ்தியர்களால் ஏற்படும் சிறு சிறு குழப்பங்களை எல்லாம் அப்பொழுது வாழ்ந்த சுன்னத் வல் ஜமாஅத் உலமா பெருமக்களாலும் ஆட்சியாளர்களாலும் அப்போதைக்கப்போது அடக்கி ஒடுக்கப்பட்டன.


எமது கருத்து
அடுத்ததாக, குழப்பம் ஏற்படுத்துபவர்கள், முனாபிகீன்கள்தான் (அதாவது வஹபிகள்) என்றும், அதை சீர் செய்து அடக்குபவர்கள் சுன்னத் வல் ஜமாஅத்தினர்தான் என்றும் கட்டுரையாளர் எடுத்து வைக்கின்றார்.

mailofislam.com கட்டுரையில்
4.அப்பொழுது தான் நஜ்தில் இப்னு தைமியா என்பவன் வெளியாகி தீனில் தலையிட்டு நூதன கொள்கைகளை உண்டு பண்ணி, நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் ஷரிஅத்திற்கு விரோதமான மஸாயீல்களை திரட்டி, 'ஸிராத்தல் முஸ்தகீம்' என்ற நூலை வெளியிட்டு புதிய கிளர்ச்சியை உருவாக்கினான்.


எமது கருத்து
இப்னுதைமிய்யா என்பவர் ஒரு குழப்பக்காரர் எனக் காட்டுவதற்கு இக்கட்டுரையாளர் முயற்சி செய்கின்றார்.


mailofislam.com கட்டுரையில்
5.இந்த நூலில் அதிகமாக நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்), அஹ்லுல் பைத்துகள், சஹாபாக்கள், இமாம்கள், அவ்லியாக்கள் முதலியோர்களை இழிவுச் சொற்களால் நிந்தித்து எழுதி இருக்கிறான்.

எமது கருத்து
இந்த இப்னு தைமிய்யா என்பவர், மேலே குறிப்பிட்டுள்ள நல்ல ஒரு கூட்டத்தாரை இழிவுச் சொற்களால் நிந்தித்து எழுதியுள்ளார் எனக் குறிப்பிடுகின்றார். ஆனால் எப்படி நிந்தித்தார் என இவரிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தேன். அதற்கு இந்த சகோதரர் ஒரு பதிலும் கூறவில்லை.

mailofislam.com கட்டுரையில்
6.இதை அவனுடைய சகோதரர்களும், உறவினர்களும் கண்டித்து, மறுத்தும் இருக்கிறார்கள். அது மற்றும் அன்றி அப்போது வாழ்ந்த தலை சிறந்த சுன்னத் வல் ஜமாஅத் உலமா பெருமக்களான ஷெய்குல் இமாம் ஷைக் முஹம்மது ஃபர்ஸ் , குதுவதுல் முஹத்திதீன் ஷைக் இப்னு ஹஜர் மக்கி, செய்யத் அஹ்மத் கபீர் பாரியி இன்னும் மக்காவின் முப்தியா இருந்த அல்லாமா செய்யத் அஹ்மத் தஹ்லான் மக்கி ஆகிய மார்க்க மேதைகள் இந்த இப்னு தைமியாவை லஃனத்துச் செய்து காஃபிர் என்று மார்க்க தீர்ப்பு (ஃபத்வா) வெளியிட்டு இருக்கிறார்கள்.

எமது கருத்து
இப்னுதைமிய்யாவினது இந்த போக்கின் காரணமாக அந்தக் காலத்தில் வாழ்ந்த இவர்களுடைய கொள்கையைச் சார்ந்த உலமாக்கள், அவருக்கு காபிர் என பத்வா கொடுத்ததாக இவர் கூறுகின்றார்.

mailofislam.com கட்டுரையில்
7.ஆனாலும் இவனுடைய சூழ்ச்சியை அறியாமல் சில அறிவீனர்கள் இவனை பின்பற்றினார்கள். இவனுடைய அட்டூழியம் பொறுக்க முடியாமல் எகிப்து அரசாங்கம் பல முறை இவனை சிறை காவலில் வைத்தது. அப்போதும் இவன் அடங்கவில்லை. இறுதியாக சிரியா அரசாங்கம் இவனை கைது செய்து திமிஷ்க் நகர் சிறை கூடத்தில் சாகும் வரை சிறையில் வைத்தது. அங்கேயே இவன் இறந்தான்.

எமது கருத்து
இப்னு தைமியா என்பவர், அவர் நடந்து கொண்ட பிழையான போக்கின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டார் எனவும் கட்டுரையாளர் கூறுகின்றார்.

mailofislam.com கட்டுரையில்
8.ஏறத்தாள 600 வருடங்களுக்கு பின் நஜ்தை சார்ந்த தர்இய்யா என்ற ஊரில் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் பிறந்தான். இவன் தலையெடுத்து இப்னு தைமியாவுடைய கொள்கைகளைப் பின்பற்றி அதற்கு ஊக்கமும், ஆக்கமும் கொடுத்து புதியதோர் மத்ஹபை உண்டாக்க முற்பட்டு இப்னு தைமியா எழுதிய ஸிராத்தல் முஸ்தகீம் என்ற நூலை விரிவு படுத்தி அதற்கு மிருது கொடுத்து ' கிதாபுத் தவ்ஹீத்' என்ற பெயரால் வெளியிட்டான்.

எமது கருத்து
இப்னு தைமியாவின் கொள்கையில் வளர்ந்த முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் என்பவர் இப்னு தைமியா எழுதிய ஸிராத்தல் முஸ்தகீம் என்ற நூலை' கிதாபுத் தவ்ஹீத்' என்ற பெயரால் விரிவுபடுத்தி வெளிட்டதாக இவர் கூறுகின்றார்.

mailofislam.com கட்டுரையில்
9.ஞாபகார்த்தமான மஸ்ஜிதுகளும், கப்ருகளும் தாக்கப்பட்டன.

எமது கருத்து
இப்போதுதான் இவருடைய விடயத்திற்கு வந்துள்ளார். அதாவது முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் என்பவர் கப்ருகளை தரை மட்டமாக்குவதற்கு வழி காட்டினார் என்று நேரடியாகச் சொல்லாமல், இந்த முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் என்பவர் ரசூல் (ஸல்) அவர்களின் காலம் தொட்டு இருந்து வரும் முனாபிகீன்களின் பரம்பரையிலிருந்து வருபவர் என்பதைப் புரியவைப்பதற்காக இவர் மேலுள்ள செய்திகளையும் சேர்த்திக்கொண்டார்.

mailofislam.com கட்டுரையில்
10.அப்போது அங்கு இருந்த செய்யதுனா அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு), செய்யதுனா இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு), செய்யதுனா உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு), செய்யதா ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) ஆகியவர்களுடைய மக்பராக்களும் வீழ்த்தப்பட்டது.

எமது கருத்து
இஸ்லாத்தில் நல்லவர்களாக வாழ்ந்து நல்லவர்களாக மரணித்த சில சஹாபாக்களின் கபுருகளும் தரை மட்டமாக்கப்பட்டன எனக் குறிப்பிடுகின்றார்
.
mailofislam.com கட்டுரையில்
11.இவர்கள் இந்தளவுக்கு காட்டுமிராண்டித்தனமாக அப்பாவி மக்களை கொல்லுவதற்க்கு காரணம் அங்கு வாழ்ந்த மக்கள் சுன்னத் வல் ஜமாஅத்தாக இருந்ததே. முஹம்மது இப்னு வஹ்ஹாப் நஜ்தியுடைய மத்ஹப்பின் பிரகாரம் சுன்னத் வல் ஜமாஅத் மக்கள் முஷ்ரிக்குகள், பித்அத்துக்காரர்கள் என்று அவன் நினைத்ததே.

எமது கருத்து
ஒருவர் ஒரு மத்ஹபை பின்பற்றுவதற்கும், குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதற்கும் வேறுபாடு உண்டு. இந்த வேறுபாட்டை புரிந்துகொண்டால் இந்த விடயம் தெளிவாகிவிடும்.

ஒருவர் ஒரு அறிஞறுக்குப்பின்னால் இருந்துகொண்டு, இந்த அறிஞரால் சொல்லப்படும் எல்லாவற்றையும், அதாவது குர்ஆன் ஹதீசிற்கு முரணாக இருப்பவற்றையும், அதிலும் குறிப்பாக குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பிழையென தெளிவாகச் சுட்டிக்காட்டிய பின்பும் அவர் அந்த அறிஞரையே பின்பற்றுகின்றார் என்றால், அவர் ஒரு மத்ஹபை பின்பற்றுகின்றார் என்று கூறுவது பொருத்தமானதுதான்.

ஆனால், அறிஞர்கள் கூறும் கருத்தை குர்ஆன் ஹதீசுடன் அலசிப் பார்த்து, அது குர்ஆன் ஹதீசுடன் உடன் படுகிறது என்ற நிலைமையில், அதைப் பின்பற்றுவாராயின் அது மத்ஹபை பின்பற்றுவது என்ற பொருளில் ஆகாது. அது குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுகின்றார் என்ற பொருளில்தான் அடங்கும்.

mailofislam.com கட்டுரையில்
12.அந்த சமயம் உள்நாடு, வெளிநாடுகளிலுள்ள உலமாக்கள், முஃப்திகள் இப்னு வஹ்ஹாப் நஜ்தியின் கொள்கை முற்றும் முழுதாக தவறு என்றும் அதை கடுமையாக ஆட்சேபித்து தக்க ஆதார சான்றுகளுடன் அவரை லஃனத்து செய்து குப்ஃபார் (இஸ்லாத்தை விட்டு அப்பாற்பட்டவர்) எனக் தீர்ப்புக்கூறி பல ஃபத்வா கிதாபுகள் வெளியிட்டனர்.

எமது கருத்து
கபுருகளை தகர்க்கவேண்டும் என்று சொன்னதற்காக முஹம்மது இப்னு வஹாப் என்பவருக்கு காபிர் பத்வாக் கொடுக்கப்பட்டதாக இவர் குறிப்பிடுகின்றார். ரசூல் (ஸல்) அவர்களின் ஹதீஸ் பிரகாரம் கபுருகளை தரைமட்டமாக்குவது, அவர்கள் காட்டித் தந்த ஒரு செயலாகும். ரசூல் (ஸல்) அவர்களின் ஹதீசிற்கு முரணாக இந்த கட்டுரையாளருடைய கொள்கையைச் சார்ந்த சில அறிஞர்கள், குர்ஆன் ஹதீசிற்கு முரணான முறையில், இப்னு வஹாப் என்பவருக்கு காபிர் பத்வாக் கொடுத்துள்ளார்கள். இக்கட்டுரையாளர் இந்த பத்வாவை சரி கண்டு ஏற்றுக்கொண்டுள்ளார். நான் ஏற்கெனவே மத்ஹபை பின்பற்றுவது பற்றி மேலே குறிப்பிட்டிருந்தேன் நினைவிருக்கின்றதா?

இதோ அந்த வாசகங்கள்,
“ஒருவர் ஒரு அறிஞறுக்குப்பின்னால் நின்றுகொண்டு, இந்த அறிஞரால் சொல்லப்படும் எல்லாவற்றையும், அதாவது குர்ஆன் ஹதீசிற்கு முரணாக இருப்பவற்றையும், அதிலும் குறிப்பாக குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பிழையென தெளிவாகச் சுட்டிக்காட்டிய பின்பும் அவர் அந்த அறிஞரையே பின்பற்றுகின்றார் என்றால், அவர் ஒரு மத்ஹபை பின்பற்றுகின்றார் என்று கூறுவது பொருத்தமானதுதான்.”

எனவே இந்தக் கட்டுரையாளர், தன்னை சுன்னத் வல் ஜமாஅத்திலுள்ளவர் எனக் காட்டிக்கொள்ள முயன்றாலும், இவர் ஒரு மத்ஹபை பின்பற்றுகின்றார் என்பது அவருடைய செயளிலிருந்து தெளிவாகின்றது.

mailofislam.com கட்டுரையில்
13.முஹம்மது நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் முன் அறிவிப்பின்பட, நஜ்தில் ஷைத்தானின் கொம்பாக தோன்றி ஃபித்னாக்களையும், குழப்பங்களையும் உருவாக்கியவன்தான் இந்த முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி.
இவனை பின்பற்றி , இவனது மத்ஹபை ஏற்று, இவனது சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு தலைசாய்த்து நடப்பவர்களையே "வஹாபிகள்" என்று சொல்லப்படும்.

எமது கருத்து
கடைசியாக, ரசூல் (ஸல்) அவர்களால் முன்னறிவிப்புச் செய்யப்பட்டவர், இந்த முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் என்பவர்தான் எனவும், இவர் ஒரு ஷைத்தான் எனவும் கட்டுரையாளர் குறிப்பிடுகின்றார்.

சகோதரர்களே! தற்காலத்தில் தவ்ஹீத்வாதிகள் என்று தங்களை அழைத்துக்கொள்பவர்கள், ரசூல் (ஸல்) அவர்களின் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருந்த முனாபிகீன்களின் வழித்தோன்றல்கள்தான் என்பதை நிருவுவதற்கு இந்த கட்டுரையாளர் முளு முயற்சியுமே எடுத்துள்ளார்.

இவர் எடுத்து வைக்கும் குறிப்புகள் பற்றி சிறிது ஆராய்வோம்.
ரசூல் (ஸல்) அவர்களுடைய காலத்தைப் பொறுத்த வரை இஸ்லாத்தில் நுழைந்தவர்களுள் இரு பிரிவினர்தான் இருந்தார்கள்.
அதில் ஒரு பிரிவினர் ரசூல் (ஸல்) உட்பட, அவர்களின் தோழர்கள்.
மற்றைய பிரிவினர் நய வஞ்சகர்கள். அதாவது முனாபிகீன்கள்.
கட்டுரையாளர், சுன்னத் வல் ஜமாஅத் அதாவது ரசூல் (ஸல்) உட் பட, அவர்களின் தோழர்களை பிரதிநிதிப்படுத்தும் ஜமாஅத் தாங்கள்தான் எனவும்,

தவ்ஹீது கொள்கையுடைய ஜமாஅத் சகோதரர்களை, நயவஞ்சகர்களைப் பிரதிநிதிப்படுத்தும் ஜமாஅத் எனவும் கருத்து பதிவு செய்துள்ளார்.

இவர்கள் உண்மையாகவே சுன்னத் வல் ஜமாஅத்தினர்கள்தானா? என்பதை தெளிவு படுத்துவதை இரண்டாவதாகப் பார்ப்போம்.

முதலாவதாக இவர்கள், தவ்ஹீத் சிந்தனையுள்ள இயக்க சகோதரர்களுக்கு “முனாபிகீன்கள்” என்ற பட்டம் கொடுப்பது சரியா? என்பதை சிறிது அலசுவோம்.

முனாபிகீன்களை எப்படி தெரிந்துகொள்வது?
முனாபிகீன்கள் என்பவர்கள் யார்? என்பதைத் தெரிந்துகொள்வதற்காக, முனாபிகீன்கள் ரசூல் (ஸல்) அவர்களுடன் எப்படி நடந்துகொண்டார்கள்? என்பதை குர்ஆன், ஹதீஸ் வெளிச்சத்தில், சற்று பார்ப்போம்.

அதாவது இந்த முனாபிகீன்கள், அல்லாஹ்வுடைய தூதருடன் எப்படி நடந்துகொண்டார்கள்? என்பதை அல்லாஹ்வும், அவனது தூதரும், விளக்கியுள்ளதை சற்று ஆராய்வோம்.

மேலும் அவர்களிடம்: “அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கமும், (அவனுடைய) தூதரின் பக்கமும் (தீர்ப்புப் பெற) வாருங்கள்” என்று கூறப்பட்டால், அந்த முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடமிருந்து முற்றிலும் நீங்கிக் கொள்வதையே நீர் பார்ப்பீர். (4:61)

ஏதாவது மார்க்கப் பிரச்சினையொன்று தொடர்பாக, அதாவது ஒரு விடயத்தில், அவர்கள் கூறுவது சரியா? மற்றவர்கள் கூறுவது சரியா? என்ற பிரச்சினைகள் வரும்போது அது தொடர்பான தீர்ப்பைப் பெறுவதற்காக அந்த முனாஃபிக்குகளுக்கு, அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கமும், (அவனுடைய) தூதரின் பக்கமும் (தீர்ப்புப் பெற) வாருங்கள்” என்று கூறப்பட்டால், ரசூல் (ஸல்) அவர்களின் அழைப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என மேற் குறிப்பிட்ட குர்ஆன் வசனம் 4:61 குறிப்பிடுகின்றது.

இப்போது எங்களுக்கும், அவர்களுக்கும் உள்ள பிரச்சினை, கட்டிய கபூர் ஒன்றை தகர்க்கலாமா? தகர்க்கக்கூடாதா? என்பதுதான்.

இப்போது நாங்களும், இவர்களை, இந்த விடயத்தில் அதாவது கபுருகள் உடைக்கப்படுவது இஸ்லாம் அனுமதிக்கும் ஒரு வழி முறையா? இல்லையா? என்பதைப் பற்றித் தீர்ப்புப் பெறுவதற்கு, அல்லாஹ்வின் வேதத்தின் பக்கமும், (அவனுடைய) தூதரின் பக்கமும், வாருங்கள் என அழைக்கின்றோம்.

நீங்கள் இந்தத் தீர்ப்பை பெறுவதற்கு அல்லாஹ்வின் வேதத்தின் பக்கமும், (அவனுடைய) தூதரின் பக்கமும் முன் வரத்தான் வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வீர்களாயின் நீங்களும் விசுவாசிகளின் பட்டியலில், சேர்ந்துகொள்வீர்கள்.

சரி இப்போது கபுருகள் தரைமாட்டமாக்கப் படுவதைப் பற்றி ரசூல் (ஸல்) என்ன கூறுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!'' என்று கூறினார்கள். (முஸ்லிம்) - 1764


எனவே மேற்கூறிய ஹதீஸ் கபுருகளை தரை மட்டத்திற்கு மேல் உயர்த்துவது கூடாது என்பதையும், அப்படி உயர்த்திக் கட்டப்பட்ட கபுருகளை தரையின் மட்டத்திற்கு அதாவது பூமியின் மட்டத்திற்கு சமமாக மட்டப்படுத்த வேண்டும் என்ற கட்டளையையும் பிறப்பிக்கின்றது
.

மேற்கூறிய ஹதீஸை அதாவது பூமியின் மட்டத்திற்கு மேலாக உயர்த்தப்பட்டுள்ள கபுருகளை தரையின் மட்டத்திற்கு சமமாக ஆக்க வேண்டும் என்ற ரசூல் (ஸல்) அவர்களின் தீர்ப்பை, நீங்கள் எந்த விதமான அதிருப்தியும் இல்லாமல், முழுமையாக ஏற்றுக்கொள்கின்றீர்களா? என தாங்களை சுன்னத் வல் ஜமாஅத்தினர் என அழைத்துக்கொள்ளும் சகோதரர்களிடம், முன் வைக்கின்றோம்.


நீங்கள் ரசூல் (ஸல்) அவர்களின் இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டால், நீங்கள் உண்மையாகவே சுன்னத் வல் ஜமாஅத்தினர்தான்.
நீங்கள் இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மறுத்தால், இப்படிப்பட்டவர்களைப் பற்றி அல்லாஹ் என்ன கூறுகின்றான் என்பதைக் கவனித்துப் பாருங்கள்!



4:65. உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள். (அல் குர்ஆன்)


ரசூல் (ஸல்) அவர்களுடைய தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாதவர்கள், உண்மையான விசுவாசிகள் அல்ல என்பதை, குர்ஆன் 4:65 ம் வசனம் தெளிவாகக் கூறுகின்றது.

எனவே, கட்டுறையாளர், தான் காலாகாலமாக நேசித்து வந்த கபுருகளை ஒரு சிலர் உடைக்க வேண்டும் என்று, தனது மனதிற்கு விருப்பமில்லாத ஒரு செயலை சொல்கின்றார்கள் என்ற ஒரேயொரு காரணத்தை முன் வைத்து, இப்னு தைமிய்யா, முஹம்மது இப்னு அப்துல் வஹாப் போன்றவர்கள், வழிகேடர்கள், காபிர்கள், ஷைத்தான்கள் என அவதூரு கூறுகின்றார்.

அதே நேரம் தவ்ஹீத் கொள்கையுள்ள சகோதரர்களை, முனாபிகீன்கள் எனவும் அவதூறு கூறியுள்ளார்.

ஒரு விடயத்தில், தீர்ப்புப் பெற குர்ஆனின் பக்கமும், ஹதீஸின் பக்கமும் வராதவர்களைத்தான், குர்ஆன் முனாபிகீன்கள் என தெளிவாகக் கூறுகின்றது.

அதே நேரம் ரசூல் (ஸல்) அவர்கள் கொடுத்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாதவர்களை, அவர்கள் உண்மையான விசுவாசிகள் அல்ல எனவும் குர்ஆன், தெளிவாகக் கூருகின்றது.

எனவே நீங்கள் அபாண்டமாக எடுத்து வைக்கும் பட்டங்கள் யாருக்குப் பொருந்துமென நீங்களாகவே முடிவு செய்து கொள்ளுங்கள்.




**ஆக்கத்தின் உரிமையாளர் அப்துல்லாஹ் இப்ராஹீம்

0 comments:

Post a Comment