சில மூடர்களின் குருட்டு வாதம் இது
''இறைவணக்கம் யாருக்கு வேண்டும். இறைவனைப் பற்றி அறியாதவர்களுக்கு வழிகாட்டவே இறை வணக்கங்கள். அவனைப் பற்றி அறிந்து விட்ட பிறகு அறிந்த ஒன்றை தேட வேண்டுமா..? அவனை வணங்க வேண்டுமா..
இறுதி வகுப்பை எட்டி விட்டவர்களுக்கு ஆரம்பக் கல்வி தேவையா..? வணக்கங்கள் என்பது இறைவனை அறிந்துக் கொள்வதற்கான ஒரு வழி தான். அவனை அறிந்து அவன் மீது உறுதி ஏற்பட்டு விட்ட பிறகு வணக்கங்கள் தேவையற்றதாகி விடும். இதைத்தான் இறைவனும் கூறுகிறான். 'உமக்கு உறுதி வரும் வரை உமது இறைவனை வணங்குவீராக..' (அல் குர்ஆன் 15:99)
உறுதி வருவதற்காகவும், உறுதி வரையிலும் தான் வணக்கம் என்பதை இந்த வசனத்தில் இறைவன் தெளிவாக சொல்லியுள்ளான். எனவே காலாகாலத்திற்கும் வணங்கிக்கொண்டிருப்பவர்கள் உறுதியற்றவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. விரைவில் உறுதியைப் பெற்று வணக்கங்களிலிருந்து விடுபட வேண்டும'';.
ஆன்மீகத்தில் முழுமையடைந்து விட்டோம், உறுதியைப் பெற்று விட்டோம் என்று எவரிடமோ எதற்கோ 'பைஅத்' செய்து முரிது வாங்கியவர்கள் தாங்கள் வணக்கங்களிலிருந்து விடுபட்டு விட்டவர்கள் என்பதை அறிவிப்பதற்காக எடுத்து வைக்கும் வலுவான? வாதம் இது.
இனி இந்த வாதத்தின் மூட , குருட்டுத்தனத்தை பார்ப்போம்
குர்ஆனிலிருந்து ஒரு வசனத்தை எடுத்துக் காட்டி விட்டதால் தங்கள் தரப்பு வாதம் மிக உறுதியானது என்ற நம்பிக்கையும் இவர்களுக்கு உண்டு.
வழிகாட்ட வந்த குர்ஆன் வசனங்களை தங்களின் வழிகேட்டிற்கு தோதுவாக விளங்கும் அறிவீளிகள் இவர்கள் என்றால் மிகையாகுமா?
'உறுதி வரும் வரை' என்பதை குர்ஆன் இவர்கள் விளங்கும் அர்த்தத்தில் சொல்லவில்லை. அதை விளக்குவதற்கு முன் இவர்கள் விளங்கும் 'உறுதி வரும் வரை' என்பதின் லட்சனத்தைப் பார்ப்போம்.
ஒன்றைக் குறித்து உணர்வது - நம்புவது என்பது பிறரால் அளவிட்டுக் கூறமுடியாத ஒன்றாகும். உதாரணமாக ஒருவன் 'நான் இறைவனை நம்புகிறேன்' என்று சொல்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனது நம்பிக்கை எத்தகையது அதன் ஆழ அகலம் என்னவென்பதையெல்லாம் பிற எந்த மனிதராலும் விளங்க முடியாததாகும்.
உணர்வதும் அப்படித்தான். 'தென்றல் என்னைத் தழுவிய போது அந்த சுகத்தை உணர்ந்தேன்' என்று ஒருவன் கூறினால் அவன் எந்த விதத்தில் உணர்ந்தான் என்பதை பிறரால் சொல்லவும் முடியாது. விளங்கவும் முடியாது.
எனவே இறைவனை நம்புதல் உணர்தல் என்பதில் ஒரு ஷைக் வழிகாட்டுவார் என்றால் முதலில் அவரது நம்பிக்கையும் உணர்வும் எப்படிப்பட்டது என்பதை பிறரால் எப்படி புரிந்துக் கொள்ள முடியும்?
உறுதி வரும் வரை என்பதை இவர்கள் சொல்லும் அர்த்தத்தில் புரிய வேண்டுமானால் 'உறுதி' என்பதன் பொதுவான அளவுகோல் என்ன என்று தீர்மானிக்க வேண்டும் அதற்கு வழியே இல்லாத போது இவர்கள் எதை வைத்து உறுதியை தீர்மானிக்கிறார்கள் என்பது ஒரே குழப்பம் தான்.
தெளிவான ஒரு வசனத்தை குழப்பமான தங்கள் கொள்கைக்கு பொருத்திக் காட்டி தங்களோடு சேர்த்து வசனத்தையும் குழப்பும் முயற்சியே இவர்களின் முயற்சியாகும்.
சந்தேகத்திற்கிடமில்லாமல் ஒன்றை அடைவதையே உறுதியானது என்று சொல்ல முடியும். உறுதியாவது என்பது வேறு. உறுதி வந்தடைதல் என்பது வேறு. நாம் பேசிக் கொண்டிருக்கும் வசனத்தில் 'உறுதியாகும் வரை' என்று இறைவன் குறிப்பிடாமல் 'உறுதி வரும் வரை' என்கிறான்.
'ஃபஃ'புத் ரப்பக ஹத்தா யஃதியகல் யகீன்' (15:99) யகீன் உம்மை வந்தடையும் வரை உம் இறைவனை வணங்கும் என்பது இதன் பொருள்.
வந்தடைய வேண்டிய ஒன்றையே இறைவன் இங்கு யகீன் என்கிறான். யகீன் என்பதற்கு 'உறுதியானது' என்று பொருள் கொண்டாலும் உறுதி உம்மை அடையவேண்டும் என்கிறான் இறைவன். சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் ஒன்றை நாம் அடைவோம் என்றால் அது மரணம் தான்.
மரணம் ஒவ்வொரு மனிதனையும் வந்தடைந்தே தீரும். அது உறுதி. இப்போது தெளிவான பொருளை அந்த வசனம் கொடுப்பதை அறிவுடைய எவரும் விளங்கலாம்.
மரணம் (உறுதி) உம்மை அடையும் வரை உம் இறைவனை வணங்கும் என்று தெளிவாகவே அந்த வசனம் சொல்கிறது.
அந்த வசனத்தில் வரும் யகீன் என்ற பதம் மரணம் என்ற அர்த்தத்தையே கொடுக்கின்றது என்பதை இப்போது தெளிவாக புரிந்துக் கொள்ள முடிகின்றது.
யகீன் உம்மை வந்தடைய வேண்டும் என்பதில் 'வந்தடைய வேண்டும்' என்பதை சிந்தித்தால் அங்கு யகீன் என்பது மரணம் என்ற அர்த்தத்தைத் தவிர வேறு அர்த்தத்தில் பயன்படுத்தப்படவில்லை என்பதை அனைவராலும் விளங்க முடியும்.
இந்த வசனத்தை குழப்பும் ஷேக்மார்களையும் அவர்களின் முரீதுகளையும் இன்னும் கூடுதலாக இனம் காட்ட அந்த வசனத்தை இன்னும் ஆழமாக அணுகுவோம்.
(நபியே) உமக்கு யகீன் வரும் வரை
நீர் உம் இறைவனை வணங்கும்.
இந்த வசனம் நேரடியாக நபிக்கு இடப்பட்டக் கட்டளையை அறிவிக்கின்றது. 'நீர்' என்று ஒருமையில் இந்த வசனம் பேசுவதை கவனிக்கவும். இது நபியின் வழியாக அனைவருக்கும் இடப்பட்ட பொதுவான கட்டளை என்றாலும் நபிக்கும் இது பொருந்தும். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் அவர்கள் தான் முதலில் இதை செயல்படுத்த வேண்டும்.
உறுதி வரும் வரை தான் வணக்கம் பிறகு தேவையில்லை என்பது இந்த வசனத்தின் பொருள் என்றால் நபி(ஸல்) இறுதி மூச்சுவரை வணங்கினார்களே அவர்களுக்கு உறுதியே வரவில்லை என்று பொருள் படும். இப்படி சொல்லுவதற்கு எந்த முஸ்லிமுக்காவது மனம் வருமா..?
சொர்க்கத்தை கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட நபித்தோழர்கள் உட்பட ஆயிரக்கணக்கான நபித்தோழர்கள் இறுதி மூச்சுவரை இறைவனை வணங்கினார்களே அவர்களுக்கெல்லாம் உறுதி வரவில்லை என்று முடிவு செய்யலாமா...
இந்த ஷெய்க்குகளும் அவரது சீடர்களும் தாம் எப்படிப்பட்ட அபாயகரமான கொள்கையில் விளக்கத்தில் இருக்கிறோம் என்பதை இப்போதாவது விளங்குவார்களா...
யகீன் என்பதற்கு மரணம் என்று பொருள் கொள்ளுங்கள். (நபியே) மரணம் உம்மை வந்தடையும் வரை உம் இறைவனை வணங்கும். நபி(ஸல்) மரணம் வரும் வரை வணங்கினார்கள். இது எத்துனை தெளிவாக இருக்கின்றது என்பதை அறிவுடையோர் சிந்திக்கட்டும்.
எனவே யகின் என்பதற்கு பொருள் கொள்ள முடியாத நம்பிக்கையில் உறுதி என்று அர்த்தம் செய்து நாம் அந்த நிலையை அடைந்து விட்டோம் என்று தனக்குத் தானே முடிவு செய்துக் கொண்டு (வணக்கங்களிலிருந்து விடுபட வைக்க ஷைத்தான் இத்தகைய விளக்கத்தை அவர்களின் மனதில் போடலாம்) வணக்கத்தை துறந்து பாழ்பட்டுப் போகவேண்டாம் என்று அறிவுறுத்தகிறோம்.
0 comments:
Post a Comment