Monday, January 24, 2011

ஸலாம் முஸ்லிம்களுக்கு மட்டுமா ?


ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது பல்வேறுசொற்கள் மூலம் முகமன்
கூறுகின்றனர். சந்திக்கப்படுபவர் முக்கியமான நபர் என்றால் அவரது
காலில் விழுதும், கூனிக் குறுகுவதும் சிலருக்கு வழக்கமாக உள்ளது.
ஆனால் இஸ்லாம் கற்றுத் தரும் முகமன் மனிதனின் சுயமரியாதைக்கு
பங்கம் ஏற்படாதவகையிலும், சம நிலையில் அன்பு செலுத்துவதற்கும்
ஏற்றவகையில் அமைந்துள்ளது என்பதையும், ஸலாம் கூறும் ஒழுங்கு
களையும் கீழ்க்காணும் தலைப்புக்களில் தெளிவாக விளக்கும் நூல்.

நூலின் பெயர்: சந்திக்கும் வேளையில்

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்

*இஸ்லாத்தின் முகமன் ஸலாம்

*ஸலாம் கூறுவதால் கிடைக்கும் பயன்கள்

*பல வகைச் சொற்கள்

*ஸலாம்

*ஸலாமுன் அலை(க்)க

*அஸ்ஸலாமு அலை(க்)க

*ஒருவருக்கு ஒருமை, பலருக்கு பன்மை

*ஸலாமுக்குப் பதிலுரைத்தல்

*சிறந்த முறையில் மறுமொழி கூற வேண்டும்

*ஸலாம் சொல்லி அனுப்புதல்

*ஸலாம் முஸ்லிம்களுக்கு மட்டுமா?

*ஸலாமின் ஒழுங்குகள்

*மலஜலம் கழிக்கும் போது ஸலாம் கூறக் கூடாது

*ஆண்கள் பெண்களுக்கும் பெண்கள் ஆண்களுக்கும் -ஸலாம் கூறலாம்

*முஸாஃபஹா கைகுலுக்குதல்

*கட்டியணைத்தல்

*கைகளை முத்தமிடுதல்

*காலில் விழுதல்

*வழிகேடர்களின் ஆதாரங்கள்

*எழுந்து நின்று மரியாதை

இஸ்லாத்தின் முகமன் ஸலாம்

மனிதர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது பல்வேறு வகையில்
முகமன் கூறிக் கொள்கின்றனர். இந்த முகமன்களில் இஸ்லாம்கூறும்
முகமன் பல வகையில் சிறந்து விளங்குவதைப் பிறமதத்து நடுநிலை
யாளர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்
ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது வணக்கம் என்றும் நமஸ்தே
என்றும் மற்றும் இந்தப் பொருளில் அமைந்தவார்த்தைகளைப் பயன்
படுத்தியும் முகமன் கூறுகின்றனர். நாம் சிந்திக்கும்போது இதில் பல
குறைபாடுகள் உள்ளதைக் காணலாம்.
வணக்கம் என்றால் வணங்குதல், அல்லதுமரியாதை செய்தல் எனப்
பொருள். ஒருவர் வணங்குகிறார் என்றால் மற்றவர்வணங்கப்படுகின்
றார். இருவரும் வணக்கம் என்று சொல்லும்போது அதுபொருளற்ற
தாகி விடுகிறது. இருவரும் சம நிலையில் இருக்கும்போதாவது ஏதா
வது கூறிச் சமாளிக்க முடியும்.

ஒருவர் மிகவும் மரியாதைக்குரியவராகவும் மற்றவர் தாழ்த்தப்பட்ட
நிலையிலும் இருந்தால் உயர்ந்தவர் கூறும் வணக்கம் பொய்யாகி
விடுகிறது. உயர்ந்தநிலையில் உள்ளவர், தாழ்ந்தவரைவணங்கவும்
மாட்டார். தன்னை விட மேம்பட்டவராக நினைக்கவும் மாட்டார்.
அது போல் ஆங்கிலக்கலாச்சார ஊடுறுவல் காரணமாக நல்லகாலை.
நல்லபகல், நல்லமாலை, நல்லஇரவு என்றெல்லாம் கூறும்வழக்கம்
பரவிவிட்டது

இது எல்லா நேரத்திலும் சொல்ல முடியாத முகமனாகவுள்ளது.
மனிதர்கள் நல்ல நிலையில்இருப்பது பாதிஎன்றால் கவலை துன்பம்
போன்ற கெட்ட நிலை பாதியாகஉள்ளது. மரணவீட்டிலோ நோயாளி
யிடமோ, பெரும் நட்டமடைந்தவரிடமோ பரீட்சையில் ஃபெயிலானவ
னிடமோ நல்ல காலை, நல்ல மாலை என்று கூற முடியாது. அது
பொருத்தமாக இருக்காது.

ஆனால் இஸ்லாம்கூறும் முகமன் பொய்கலப்பில்லாததாகவும் எல்லா
நேரத்துக்கும் ஏற்றதாகவும் அமைந்துள்ளது.
அஸ்ஸலாமு அலை(க்)கும் என்றால் 'உங்கள்மீது சாந்திஉண்டாகட்டும்'
என்று பொருள். திருமணவீட்டுக்கும் சாந்திதேவை. மரணவீட்டுக்கும்
சாந்தி தேவை. இலாபம் அடைந்தவனுக்கும் சாந்தி தேவை. நட்டம்
அடைந்தவனுக்கும் சாந்தி தேவை. மனிதவாழ்வின் அனைத்துச்சந்தர்ப்
பங்களிலும்அனைவரிடமும் பயன்படுத்தத் தக்கஒரே முகமன் ஸலாம்
கூறுதல் மட்டும

ஸலாம் கூறுவதால் கிடைக்கும் பயன்கள்

ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஸலாம் கூறுவது சொர்க்கத்தில்
கொண்டு சேர்க்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்
'நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரைசொர்க்கத்தில் நுழையமுடியாது.
ஒருவரை ஒருவர் நேசிக்காமல்நம்பிக்கை கொண்டவர்களாகமுடியாது.
ஒரு செயலைச்செய்தால் நீங்கள்ஒருவரை ஒருவர் நேசிப்பீர்கள். அச்
செயலை நான் உங்களுக்குக்கூறட்டுமா?' என்று நபிகள் நாயகம்(ஸல்)
அவர்கள் கேட்டுவிட்டு 'உங்களிடையேஸலாமைப்பரப்புங்கள்' என்றனர்.

அரபி 2 

'இஸ்லாத்தில் மிகச்சிறந்த நல்லறம் எது?' என்று ஒருவர் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்)
அவர்கள் 'உணவளிப்பதும், உனக்குத் தெரிந்தவருக்கும் தெரியாத
வருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்' என விடையளித்தார்கள்
நூல் : புகாரி 12, 28, 6236



சுய நலம், கோபதாபம் போன்ற தீய குணங்களின் காரணமாக
மனிதர்களிடையே சண்டை சச்சரவுகள் நிகழ்வது சகஜம். இத்தகைய
சண்டைகள் காலா காலத்துக்கும் நீடிக்கக் கூடாது. கோப உணர்வு
அடங்கிய உடன் சமாதானமாகி விட வேண்டும் என்று இஸ்லாம்
வழிகாட்டுகிறது

இதனால் தான் 'எந்த முஸ்லிமும் இன்னொருமுஸ்லிமுடன் மூன்று
நாட்களுக்கு மேல் பகைமையாக இருக்கக் கூடாது' என்று நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டினார்கள். பகைமையாக இருக்கக்
கூடாது என்றால் முன்புபோலவே இருவரும் உடனடியாக நட்புறவாக
ஆக வேண்டும் என்பது இதன்பொருளல்ல. பெரும்பாலானஉள்ளங்களுக்கு
உடனடியாக இது சாத்தியப்படாது. பகைமையைப்படிப்படியாகத் தான்
குறைக்கமுடியும். அதற்கு முதல்படியாக அமைவது ஸலாம் தான்.
பகைமைகொண்டவராக இருந்தாலும் மூன்று நாட்கள்கடந்து விட்டால்
ஒருவரை ஒருவர்சந்திக்கும் போதுமுகம் பார்த்து ஸலாம் கூறினால்
சமாதானத்தின் முதல் படியில் நாம் ஏறி விடுகிறோம். இது தொடரும்
போது நாளடைவில் முழுமையான நல்லிணக்கம் ஏற்பட்டு விடும்.
இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரத்தினச் சுருக்கமாகப்
பின் வருமாறு கூறுகிறார்கள்.

'ஒரு மனிதன் தனது சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல்
பகைக்கக் கூடாது. இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும்
போது இவர் இந்தப் பக்கமும் அவர் அந்தப் பக்கமும் திரும்பிக்
கொள்ளக் கூடாது. யார் ஸலாமைக் கொண்டு ஆரம்பிக்கிறாரோ
அவரே அவர்களில் சிறந்தவர்' என்று நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்
நூல் : புகாரி 6077, 6237

பல வகைச் சொற்கள் 

அஸ்ஸலாமு அலை(க்)கும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.
அஸ்ஸலாமு அலை(க்)கும் என்பது முகமன் கூறுவதற்கான
சொல்லாக இருப்பது போல் இன்னும் பல வார்த்தைகளும் உள்ளன.
அவற்றில் எதை வேண்டுமானாலும் நாம் முகமன் கூறுவதற்குப்
பயன்படுத்திக் கொள்ளலாம்
ஸலாமுன் அலை(க்)கும்
அஸ்ஸலாமு அலை(க்)கும் என்பதற்குபதிலாக ஸலாமுன்அலை(க்)கும்
என்றும் முகமன் கூறலாம்.

(முஹம்மதே!) நமது வசனங்களை நம்புவோர் உம்மிடம் வந்தால்
உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அருள் புரிவதைத் தன் மீது
உங்கள் இறைவன் கடமையாக்கிக் கொண்டான். உங்களில்எவரேனும்
அறியாமையின் காரணமாகதீமையைச் செய்து விட்டு, அதன்பின்னர்
மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டால்அவன் மன்னிப்பவன்;நிகரற்ற
அன்புடையோன்' எனக் கூறுவீராக!
திருக்குர்ஆன் 6:54



அவ்விரண்டுக்கும் இடையே தடுப்பு(சுவர்)இருக்கும்.அந்தத்தடுப்புச்சுவர்
மேல் சில மனிதர்கள் இருப்பார்கள். ஒவ்வொருவரையும் அவர்களின்
அடையாளத்தைக் கொண்டு அவர்கள்அறிந்து கொள்வார்கள்.சொர்க்க
வாசிகளை அழைத்து 'உங்கள் மீதுஸலாம் உண்டாகட்டும்' என்பார்கள்.
அவர்கள் ஆசைப்பட்டாலும் அங்கே(இது வரை)நுழையாமல் உள்ளனர்.
திருக்குர்ஆன் 7:46

நீங்கள் பொறுமையாக இருந்ததால் உங்களுக்கு ஸலாம்உண்டாகட்டும்.
இவ்வுலகின் தீர்ப்பு (உங்களுக்கு)நல்லதாக உள்ளது (என்றுவானவர்கள்
கூறுவார்கள்)
திருக்குர்ஆன் 13:24

நல்லோராக இருக்கும்நிலையில் அவர்களின்உயிர்களை வானவர்கள்
கைப்பற்றி, 'உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! நீங்கள்செய்தவற்றின்
காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள்!' என்று கூறுவார்கள்.
திருக்குர்ஆன் 16:32

வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம்
செய்கின்றனர். 'எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள்
உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை
விரும்ப மாட்டோம்' எனவும் கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் 28:55

தமது இறைவனை அஞ்சியோர் சொர்க்கத்திற்கு கூட்டம்கூட்டமாக
ஓட்டிச் செல்லப்படுவார்கள். முடிவில் அதன் வாசல்கள்திறக்கப்பட்டு
அவர்கள் அங்கே வந்ததும் 'உங்கள்மீது ஸலாம் உண்டாகட்டும்.
நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்! நிரந்தரமாகஇருக்கும் நிலையில்
இதில் நுழையுங்கள்!' என அதன் காவலர்கள் அவர்களிடம்
கூறுவார்கள்.
திருக்குர்ஆன் 39:73

ஸலாம்

ஒருவரைஒருவர் சந்திக்கும்போது ஸலாம் என்றுமட்டும்கூறினால்
அதுவும் அங்கீகரிக்கப்பட்டது தான்.

'அல்லாஹ்வே! நீ தூயவன்' என்பதே அங்கே அவர்களின்
பிரார்த்தனை. ஸலாம் தான் அங்கே அவர்களின் வாழ்த்து.
'அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'
என்பதே அவர்களது பிரார்த்தனையின் முடிவாகும்.
திருக்குர்ஆன் 10:10

நமது தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தி கொண்டு வந்தனர்
ஸலாம் என்று அவர்கள் கூறினர். அவரும் ஸலாம் என்றார்.
பொரிக்கப்பட்ட கன்றுக்குட்டியைத் தாமதமின்றிகொண்டு வந்தார்
திருக்குர்ஆன் 11:69

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கச்
சோலைகளுக்கு அனுப்பப்படுவார்கள். அவற்றின் கீழ்ப்பகுதியில்
ஆறுகள் ஓடும். அதில் தமது இறைவனின் விருப்பப்படிநிரந்தரமாக
இருப்பார்கள். ஸலாம் என்பதே அதில் அவர்களின் வாழ்த்தாக
இருக்கும். திருக்குர்ஆன் 14:23

அவர்கள், அவரிடம்சென்று ஸலாம் கூறினர்.அதற்கு அவர் 'நாம்
உங்களைப் (பார்த்துப்) பயப்படுகிறோம்' என்றார்.
திருக்குர்ஆன் 15:52

அவனை அவர்கள் சந்திக்கும் நாளில் அவர்களின் காணிக்கை
ஸலாம் என்பதாகும். அவர்களுக்காக மரியாதைக்குரிய கூலியையும்
அவன் தயாரித்துள்ளான்.
திருக்குர்ஆன், 33:44

அவர்களை அலட்சியப்படுத்துவீராக! ஸலாம் எனக் கூறுவீராக!
பின்னர் அவர்கள் அறிந்து கொள்வார்கள்
திருக்குர்ஆன், 43:89

அரபி 15 

அவரிடம் அவர்கள் வந்து ஸலாம் கூறியபோது அவரும் ஸலாம்
கூறினார். அவர்கள் அறிமுகமில்லாத சமுதாயம்!
திருக்குர்ஆன்,, 51:25

ஸலாமுன் அலை(க்)க
ஆணுக்கு முகமன் கூறுவதாக இருந்தால் ஸலாமுன் அலை(க்)க
என்றும் பெண்ணுக்கு முகமன் கூறுவதாக இருந்தால் ஸலாமுன்
அலை(க்)கி என்றும் கூறலாம்.

'உங்கள்மீது ஸலாம் உண்டாகட்டும்! உங்களுக்காக என்இறைவனிடம்
பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் என்னிடம் அன்புமிக்கவனாக
இருக்கிறான்' என்று (இப்றாஹீம்) கூறினார்.
திருக்குர்ஆன் 19:47

இப்றாஹீம் நபியவர்கள் தமது தந்தைக்கு ஸலாம் கூறிய போது
ஸலாமுன் அலைக்க எனக் கூறியதாக மேற்கண்ட வசனம் கூறுகிறது.
அஸ்ஸலாமு அலை(க்)க
அஸ்ஸலாமு அலை(க்)கும் என்று பன்மையாகக் கூறாமல்
அஸ்ஸலாமு அலை(க்)க என்று ஒருமையாகக்கூறுவதும் நபிவழி தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜஃபர் பின் அபீதாலிபின் மகனுக்கு
ஸலாம் கூறும் போது இரண்டு சிறகுகள் உடையவரின் மகனே!
அஸ்ஸலாமு அலைக்க என்று கூறுவார்கள்
நூல் : புகாரி 3709, 4264

அலை(க்)க என்பது ஆண் பால் சொல்லாகும். பெண்ணுக்குஸலாம்
கூறும் போது அலை(க்)கி என்று கூறிக் கொள்ளலாம்.
ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அப்துர்
ரஹ்மான் பின் அஸ்வத் (ரலி) ஆகியோர் ஸலாம் கூறிய போது
அஸ்ஸலாமு அலை(க்)கி என்று இதனடிப்படையில்தான் கூறியுள்ளனர்.
பார்க்க : புகாரி 6075

ஒருவருக்கு ஒருமை, பலருக்கு பன்மை
அலை(க்)கும் (உங்கள் மீது) என்பது பன்மையாக இருந்தாலும்
ஒருவருக்கு ஸலாம் கூறும்போது நாம் இதைப்பயன்படுத்தி வருகிறோம்.
இப்படிப் பயன்படுத்தாமல் ஒருமை, இருமை(அரபியில் இருமை
என்று ஒரு வகை உண்டு) பன்மைக்கேற்றவாறு சொல்லைமாற்றிக்
கொள்ளலாம்.

ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் படைத்த போது நீசென்று
அங்கே அமர்ந்துள்ள வானவர்களுக்கு ஸலாம் கூறு! அவர்கள் என்ன
மறுமொழி கூறுகிறார்கள் என்பதைச் செவிமடு. ஏனெனில் அதுஉமக்கும்
உமது வழித் தோன்றலுக்கும் உரிய முகமன் ஆகும் என்று அல்லாஹ்
கூறினான். ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களுக்கு) அஸ்ஸலாமு
அலை(க்)கும் என்று (பன்மையாக) கூறினார். வானவர்கள் பதிலளிக்கும்
போது அஸ்ஸலாமுஅலைக்க வரஹ்மதுல்லாஹி என்றுகூறினார்கள் என
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 6227, 3326

ஸலாமுக்குப் பதிலுரைத்தல்

ஒருவர் ஸலாம் கூறினால் அதற்கு மற்றவர் மறுமொழி கூறுவது
கட்டாயக் கடமையாகும்.
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்
ஐந்து

1) ஸலாமுக்குப் பதிலுரைத்தல்

2) நோயாளியை நலம் விசாரித்தல்

3) ஜனாஸாவை (இறந்தவரின் உடலை) பின் தொடர்ந்து செல்லுதல்

4) விருந்தை ஏற்றுக் கொள்ளுதல்

5) தும்மல் போட்டவருக்காகப் பிரார்த்தனை

செய்தல் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 1240

சிறந்த முறையில் மறுமொழி கூற வேண்டும் 
முகமன் கூறுபவர் பயன்படுத்தும் சொற்களைவிடச் சிறந்தமுறையில்
அல்லது அதற்குச் சமமான முறையில் மறுமொழி கூறவேண்டும்.

உங்களுக்கு வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விட அழகியமுறையிலோ,
அல்லது அதையோதிருப்பிக் கூறுங்கள்!அல்லாஹ் அனைத்துப்பொருட்களையும்
கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:86



ஆதம் (அலை) அவர்கள் வானவர்களுக்கு ஸலாம் கூறிய போது அஸ்ஸலாமு
அலை(க்)கும் என்று மட்டும் கூறினார்கள். வானவர்கள் மறுமொழி கூறிய
போது வரஹ்மதுல்லாஹி என்று மேலதிகமாகக் கூறினார்கள் என்றுமுன்னரே

நாம் குறிப்பிட்ட ஹதீஸ் இதற்கு ஆதாரமாகும்.
இப்றாஹீம் நபியவர்களுக்கு வானவர்கள் ஸலாம் கூறிய போதுஇப்றாஹீம்
நபியும் ஸலாம் என்று மறுமொழி கூறியதை முன்னரேகுறிப்பிட்டுள்ளோம்.

அதுவும் இதற்கான ஆழ்ரமாகும்.

ஸலாம் சொல்லி அனுப்புதல்

ஒருவரை நேரடியாக நாம் சந்திக்கும் போது ஸலாம் கூறுவது போல் நம்
முன்னே இல்லாதவருக்காக இன்னொருவரிடம் ஸலாம் கூறி அனுப்பலாம்.
யாரிடம் ஸலாம் சொல்லி அனுப்பப்படுகிறதோ அவர் சம்பந்தப்பட்டவருக்கு
இதைத் தெரிவிக்க வேண்டும். யாருக்கு ஸலாம் கூறிஅனுப்பபட்டதோ அவரும்

மறுமொழி கூற வேண்டும். அதற்காக ஆதாரங்கள் வருமாறு.

என் மகன் மரணத்தை நெருங்கி விட்டான் உடனே வரவும் என்ற செய்தியை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகள், நபிகள்நாயகம் (ஸல்)அவர்களுக்குச்
சொல்லி அனுப்பினார். மேலும் ஸலாமும் சொல்லி அனுப்பினார்.
நூல் : புகாரி 1284, 5655, 6655


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக்காணாமல் அவர்களின்குடும்பத்தினர்
அஞ்சிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிழலில் பகல் தூக்கம்
தூங்கியதைக் கண்ட அபூகதாதா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே
உங்கள் குடும்பத்தார் உங்களுக்கு ஸலாமையும் அல்லாஹ்வின்ரஹ்மத்தையும்
(அருளையும்)சொல்லி அனுப்பியுள்ளனர் எனக்கூறினார் (ஹதீஸ் சுருக்கம்)
நூல் : புகாரி 1821, 1822

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனைவியை மணமுடித்துவீட்டுக்குள்
சென்றனர்.எனது தயார் உம்முசுலைம் இனிப்பான உணவைத் தயார்செய்தார்.
அதை நபிகள் நாயகம் (ஸல்)அவர்களிடம் நான்கொண்டு சென்றேன். என்தாயார்
உங்களுக்கு ஸலாம் கூறினார் என்று தெரிவித்தேன்.....என்று அனஸ் (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்.
நூல் : நஸயீ 2572

'ஆயிஷாவே இதோ ஜிப்ரீல் உனக்கு ஸலாம் கூறுகிறார்' என்று நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் வஅலைஹிஸ்
ஸலாம் வரஹ்ம(த்)துல்லாஹி வபரகா(த்)துஹ என்றுமறுமொழி கூறினார்கள்.
(வஅலைஹி என்றால் அவர் மீது என்று பொருள்)
நூல் : புகாரி 3217, 3768, 6201, 6249, 6253

ஸலாம் முஸ்லிம்களுக்கு மட்டுமா?

முஸ்லிம்களுக்கு மட்டுமே ஸலாம் கூறவேண்டும் என்று பெரும்பாலான
முஸ்லிம்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக முஸ்லிமல்லாத
மக்களைச் சந்திக்கும் போது ஸலாம் கூறத் தயங்கி வணக்கம்,
வந்தனம், நமஸ்காரம் போன்ற சுயமரியாதைக்குப் பங்கம் விளை
விக்கும் சொற்களைக் கூறும் நிர்பந்தந்தத்தை தமக்குத் தாமே
ஏற்படுத்திக் கொள்கின்றனர்
முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறக் கூடாது என்று கட்டளை
யிருந்தால் அதைக் கண்டிப்பாக நடைப்புறப்படுத்த வேண்டும் என்பதில்
இரு வேறு கருத்து இல்லை. ஆனால் அல்லாஹ்வும், அவனது தூதர்

நபிகள் நாயகம்(ஸல்)அவர்களும் நமக்கு இவ்வாறு கட்டளையிடவில்லை.
மாறாக முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறுவதைத் தெளிவாக
அனுமதித்துள்ளனர் என்பதை இவர்கள் அறியாமல் உள்ளனர்.
இதற்கான ஆதாரங்களைப் பார்ப்போம்.

திருக்குர்ஆனில் பல்வேறு வசனங்களில் இப்றாஹீம் நபியவர்களின்
வழிமுறையை முஸ்லிம்களும் பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ்
வலியுறுத்திகின்றான்.
பார்க்க : திருக்குர்ஆன் 2:130, 2:135, 3:95, 4:125, 6:161,
16:123, 22:78



இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத தமது தந்தைக்காக இப்றாஹீம்
நபியவர்கள் ஒரு தடவை பாவமன்னிப்புத் தேடினார்கள். அது
தவறு என்று தெரிந்ததும் அதிலிருந்து விலகிக் கொண்டார்கள்.
அவர்கள் தமது தந்தைக்கு பாவமன்னிப்பு கோரிய அந்த வியத்தைத்
தவிர அவர்களின் மற்ற அனைத்து நடவடிக்கைகளிலும் முஸ்லிம்களுக்கு
முன்மாதிரி உளளது என்று அல்லாஹ் பின்வரும் வசனத்தில்
தெளிவாகக் கூறுகிறான்.

'உங்களை விட்டும்,அல்லாஹ்வையன்றி எதனைவணங்குகிறீர்களோ
அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம்.
அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கைகொள்ளும்வரை எங்களுக்கும்,
உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு
விட்டது' என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன்

இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.

'உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து
உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை'
என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம்
முன் மாதிரி இல்லை) எங்கள்இறைவா! உன்னையேசார்ந்திருக்கிறோம்.
உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது.
திருக்குர்ஆன் 60:4

'உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! உங்களுக்காக என் இறைவனிடம்
பாவமன்னிப்புத் தேடுவேன்.அவன் என்னிடம் அன்புமிக்கவனாக இருக்கிறான்'
என்று (இப்ராஹீம்) கூறினார்.
திருக்குர்ஆன் 19:47

அல்லாஹ்வுக்கு இணை கற்பித்த தந்தைக்காக இப்றாஹீம் நபி
பாவமன்னிப்பு கோரியதை யாரும் முன் மாதிரியாக எடுத்துக்கொண்டு
இணை கற்பிப்போருக்கு பாவமன்னிப்பு கோரக் கூடாது. அதே சமயம்
இறைவனுக்கு இணை கற்பித்த தந்தைக்கு இப்றாஹீம் நபியவர்கள்
ஸலாம் கூறியதை முன் மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்பதை
மேற்கண்ட இரண்டு வசனங்களையும் ஒருங்கிணைத்துப் பார்ப்பவர்கள்
அறிந்து கொள்ள முடியும். எனவே முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம்
கூறுவது இப்றாஹீம் நபியின் வழிமுறையில்உள்ளது என்பதில்மறுப்பேதும்
இல்லை.

முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் உண்டாகுமாறு எப்படிப் பிரார்த்திக்க
முடியும் என்று சிலர் கேள்வியெழுப்புவர். இக்கேள்வி தவறாகும்.
அஸ்ஸலாமு அலை(க்)கும் என்பதன் பொருள் 'உங்கள் மீது சாந்தி
உண்டாகட்டும்'. இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியை முஸ்லிமல்லாதவர்
ஏற்றுக் கொள்வதன் மூலம் அவருக்கு சாந்தி கிடைக்கட்டும் என்றபொருளும்
இதற்குள் உண்டு. முஸ்லிமல்லாதவர் இவ்வுலக வாழ்க்கையின்நன்மைகளைப்

பெற்று சாந்தியடையட்டும் என்ற பொருளும் இதற்குள் உண்டு. இவ்வுலக
நன்மைகள் முஸ்லிமல்லாதவருக்கு கிடைக்க நாம் துஆ செய்யலாம்
இதற்குத் தடை ஏதும் இல்லை. எனவே முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம்
கூறுவதை மறுக்க எந்த நியாயமும் இல்லை
.
'உனக்குத் தெரிந்தவருக்கும், தெரியாதவருக்கும் ஸலாமைப் பரப்பு
என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழியை முன்னரே
நாம் குறிப்பிட்டுள்ளோம்.
முஸ்லிமுக்கு மட்டும் தான் ஸலாம் கூற வேண்டும் என்றால்முஸ்லிம்
என்று தெரிந்தவருக்கு ஸலாம் கூறு என்று நபிகள் நாயகம் (ஸல்)

அவர்கள் கூறியிருப்பார்கள். அவ்வாறு கூறாமல் தெரிந்தவருக்கும்
தெரியாதவருக்கும் ஸலாம் கூறு என்று கூறியுள்ளனர்.
ஒருவரைப் பற்றிய விபரம் நமக்குத் தெரியாது என்றால் அவர்
முஸ்லிமா அல்லவா என்பதும் கூட நமக்குத் தெரியாது. அது

பற்றிக் கவலைப்படாமல் தெரிந்தவர் தெரியாதவர் என்ற பாகுபாடு

இன்றி அனைவருக்கும் ஸலாம் கூறு என நபிகன் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறியதன் மூலமும் முஸ்லிமல்லாதவருக்கும் ஸலாம்
கூறலாம் என்பதை அறியலாம்.
மேலும் பின்வரும் வசனங்கத்தில் மூடர்கள் உரையாடினால் ஸலாம்

என்று கூறிவிடுமாறு அல்லாஹ் வழி காட்டுகிறான். இங்கே மூடர்கள்
என்று குறிப்பிடுவதில் இஸ்லாத்தை ஏற்காதவர்களும் தீயவர்களும்
அடங்குவார்கள்.

அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள்.
அறிவீனர்கள் அவர்களுடன்உரையாடும் போது 'ஸலாம்' எனக்கூறுவார்கள்.
திருக்குர்ஆன் 25:63


வீணானவற்றை அவர்கள் செவியுறும்போது அதைஅலட்சியம் செய்கின்றனர்.

'எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள்
மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களைவிரும்பமாட்டோம்' எனவும்
கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் 28:55

'என் இறைவா! அவர்கள் நம்பிக்கை கொள்ளாத கூட்டமாகவுள்ளனர்'
என்று அவர் (முஹம்மத்) கூறுவதை (அறிவோம்.) அவர்களை
அலட்சியப்படுத்துவீராக! ஸலாம் எனக் கூறுவீராக! பின்னர் அவர்கள்
அறிந்து கொள்வார்கள்
திருக்குர்ஆன் 43:88,89 

மேற்கண்ட வசனங்களை மேலோட்டமாகப் பார்த்தாலே முஸ்லிமல்லா
தவர்களுக்கும் ஸலாம் கூறலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறலாம் என்பதற்கு திருக்குர்ஆன
வசனங்களும் நபிவழியும் சான்றுகளாகத் திகழ்ந்தபோதும் இதைக்கண்டு
கொள்ளாத சிலர் ஹதீஸ்களைத் தவறாக விளங்கிக் கொண்டு முஸ்லி
மல்லாதவருக்கு ஸலாம் கூறக் கூடாது என்று வாதிடுகின்றனர்

வேதமுடையோர் உங்கள் மீது ஸலாம் கூறினால் வஅலை(க்)கும்
(உங்கள் மீதும்) எனக் கூறுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். நூல் : புகாரி 6258 

வேதமுடையோர் ஸலாம்கூறினால் நாம் ஸலாம்கூறாமல் வஅலை(க்)கும்
(உங்கள் மீதும்) என்று கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கட்டளையிட்டதிலிருந்தே அவர்களுக்கு ஸலாம் கூறக் கூடாது என்று
வாதிடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக்காரணமும் கூறாமல் பொதுவாக
ஒரு கட்டளையிட்டால் அதை நாம் அப்படியே முழுமையாக எடுத்துக்
கொள்ள வேண்டும் என்பதும் ஒரு காரணத்தைக் கூறி அதற்காக ஒன்றை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருந்தால் அதைப்பொதுவான
தடை என்று கருதக் கூடாது என்பதும் அனைவரும் ஏற்றுக கொண்ட
விதியாகும்.
வேதமுடையோரின் ஸலாமுக்கு பதில் கூறுவதைப் பொருத்தவரை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வஅலை(க்)கும் என்று கூறச்
சொன்னதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்தி விட்டனர்.


யஹதிகள் உங்களுக்கு ஸலாம் கூறினால் அவர்கள் (அஸ்ஸலாமு
அலைக்க எனக் கூறாமல்)அஸ்ஸாமு அலைக்க என்றுதான் கூறுகின்றனர்.
(உம்மீது மரணம் உண்டாகட்டும் என்பது இதன் பொருள்) எனவே வஅலைக்க
(உன் மீதும் அவ்வாறு உண்டாகட்டும்) என்று கூறுங்கள் என நபிகள்நாயகம்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 6257, 2935, 6256, 6024, 6030, 6395, 9401, 6927


யஹதிகள் அஸ்ஸலாமு எனக் கூறாமல் அஸ்ஸாமு என்று கூறும்
காரணத்தினாலேயே அவர்களுக்கு ஸலாம் என்ற வார்த்தையைக் கூற
வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அவர்கள் முறையாக மறுமொழி கூறினால் நாமும் அவர்களுக்கு
முறையாக மறுமொழி கூறலாம் என்பதைத்தான் இதிலிருந்து அறிந்து
கொள்ள முடியும். மேலும் இது தான் ஏற்கனவே நாம் எடுத்துக்காட்டிய
ஆதாரங்களுடன் முரண்படாத வகையில் ஹதீஸ்களை அணுகும்
சரியான முறையாகும்.

ஸலாமின் ஒழுங்குகள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது யார் வேண்டுமானாலும் ஸலாம்
சொல்வதற்கு முந்தலாம் என்றாலும் யார் முந்திக் கொள்வதுசரியான
முறை என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கு ஸலாம் கூற வேண்டும்.
நடந்து செல்பவர் அமர்ந்து இருப்பவருக்கு ஸலாம் வற வேண்டும்.
குறைவான எண்ணிக்கையில் இருப்போர் அதிக எண்ணிக்கையில்
உள்ளவர்கள் மீது ஸலாம் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 6232, 6234

மற்றொரு அறிவிப்பில் வயதில்சிறியவர் பெரியவருக்கு ஸலாம் கூற
வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகப் பதிவு
செய்யப்பட்டுள்ளது.
நூல் புகாரி 6231 

வயதில் சிறியவர்கள் பெரியவர்களுக்கு ஸலாம் கூறுவதே சிறந்தது
என்றாலும் சிறுவர்களுக்கு பெரியவர்கள் ஸலாம் கூறுவதும் நல்ல
முன்மாதிரியாகும்.

அனஸ் (ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்துசென்றபோது அவர்களுக்கு
ஸலாம் கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு
செய்ததாகவும் குறிப்பிட்டார்கள்.
நூல் : புகாரி 6247 

மலஜலம் கழிக்கும் போது ஸலாம் கூறக் கூடாது
உண்ணும் போதும், பருகும் போதும், இன்னபிற காரியங்களில்
ஈடுபட்டிருக்கும் போதும் ஒருவருக்கு நாம் ஸலாம் கூறலாம்.
அவரும் பதில் ஸலாம் கூறலாம் ஆயினும் மலஜலம் கழிப்பவருக்கு
ஸலாம் கூறக் கூடாது. அந்த நிலையில் பதிலும் கூறக் கூடாது.

நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் சிறுநீர் கழிக்கும்போது அவர்களைக்
கடந்து சென்ற ஒரு மனிதர் அவர்களுக்கு ஸலாம் கூறினார். நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்கு மறுமொழி கூறவில்லை.
நூல் : முஸ்லிம் 555

ஆண்கள் பெண்களுக்கும் பெண்கள் ஆண்களுக்கும் ஸலாம் கூறலாம்.

ஆண்கள் பெண்களுக்கு ஸலாம் கூறுவதற்கும் பெண்கள் ஆண்களுக்கு
ஸலாம் கூறுவதற்கும் மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை.

பெண்களின் குரலை ஆண்கள் கேட்கக் கூடாது என்று சிலர் கூறுவது
ஆதாரமற்ற கூற்றாகும்.

வெள்ளிக்கிழமை தோறும் ஒரு பெண்மணி விருந்தளிப்பார்அவரிடம்
விருந்து உண்ணச் செல்லும் நாங்கள் அவருக்கு ஸலாம் கூறுவோம்
என்று ஸஹ்ல் பின் ஸஅது (ரலி) அறிவிக்கிறார்.
நூல் : புகாரி 938, 6248

முஸாஃபஹா கைகுலுக்குதல்

ஒருவரை ஒருவர்சந்திக்கும் போது கை குலுக்குவதும் நபிவழியாகும்.
அரபி 36

'ஏமன் வாசிகள் வந்துள்ளனர். முஸாஃபஹாமூலம் முதன் முதலில்
நமக்கு முகமன் கூறியவர்கள் அவர்களே' என்று நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
நூல் : அபூதாவூத் 4537 

ஏமன் மக்களின் முஸாஃபஹா செய்யும் வழக்கத்தை நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் இதன் மூலம் அங்கீகாரம் செய்கின்றனர். கஃபு பின்
மாலிக் (ரலி) அவர்கள் உள்ளிட்ட மூன்று தோழர்கள் தபூக் போரில்
பங்கெடுக்கத் தவறியதால் அவர்களை நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள்
சில நாட்கள் சமூகப் புறக்கணிப்பு செய்திருந்தனர். பின்னர் அம்மூவரும்
மன்னிக்கப்பட்டதாக அல்லாஹ் ஒருவசனத்தை அருளியபின் கஃபு பின்
மாலிக் (ரலி) அவர்கள் பள்ளிக்குச் சென்றனர். அது பற்றி அவர்கள்
குறிப்பிடும் போது நான் பள்ளிவாசலில்நுழைந்தேன். அங்கே நபிகள்
நாயகம்(ஸல்)அவர்கள் இருந்தனர். தல்ஹா(ரலி)அவர்கள் உடனே
என்னை நோக்கி வந்து என்னிடம் முஸாஃபஹா செய்து நல்வாழ்த்து
தெரிவித்தார் என்று குறிப்பிடுகிறார்கள். நூல் : புகாரி 4418,


நான் சில பெண்களுடன் சேர்ந்து நபிகள் நாயகம் (ஸல்)அவர்களிடம்
பைஅத் (உறுதிமொழி) எடுக்கச் சென்றேன். அப்போது அவர்கள்
'உங்களுக்கு இயன்றவரை சக்திக்கு ஏற்றவரை நிறைவேற்றுங்கள்'
என்று குறிப்பிட்டார்கள். 'பெண்களிடம் நான் முஸாஃபஹா செய்ய
மாட்டேன்' எனவும் கூறினார்கள்.
நூல் : இப்னுமாஜா 2865


'பெண்களிடம் நான் முஸாஃபஹா செய்ய மாட்டேன்' என்று நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து ஆண்களிடம் முஸாஃபஹா
செய்பவர்களாக இருந்தனர் என்பதை விளங்க முடியும்.
ஆண்கள், ஆண்களுக்கும் பெண்கள் பெண்களுக்கும் முஸாஃபஹா
செய்வது நபிவழியில் உள்ளதாகும்
முஸாஃபஹா செய்யும் சரியான முறையையும் நாம் அறிந்துகொள்ள
வேண்டும். தமிழக முஸ்லிம்கள் பலர் முஸாஃபஹாச் செய்யும்போது
தமது இரு கைகளால் மற்றவரின் இரு கைகளைப் பிடிக்கின்றனர்.
வேறு சிலர் இவ்வாறு முஸாஃபஹாச் செய்யும் போது மற்றவரின்
இடது கை கட்டை விரலை அழுத்திப் பார்க்கின்றனர்.
கில்று என்பவர் இன்னும் உயிரோடு உள்ளார், அவருக்கு இடது கை
கட்டை விரலில் எலும்பு இருக்காது. அவர் எந்த எந்த மனிதரின்
தோற்றத்திலும் வருவார். அவரை முஸாஃபஹா செய்து விட்டால்
நாம் அவ்லியா ஆகலாம் என்று மார்க்க அறிவு இல்லாத மூடர்கள்
கட்டிய கட்டுக் கதை தவிர இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
வலது கையால் மற்றவரின் வலது கையைப் பிடிப்பதே முஸாஃபஹா
செய்யும் சரியான முறையாகும்

ஒரு உள்ளங்கையை மறு உள்ளங்கையில் சேர்த்தல் என்பது தான்
முஸாஃபஹா என்ற சொல்லின் நேரடி அர்த்தமாகும்.
இருவருமே ஒரு கையால் முஸாஃபஹா செய்யும் போது தான் இந்த
நிலை ஏற்படும். இரண்டு கைகளால் செய்யும்போது இடது உள்ளங்கை
மற்றவரின் வலது புறங்கையில்தான் படும்.இருபக்கமும் உள்ளங்கைகள்
சந்திக்காது. எனவே முஸாஃபஹா என்ற சொல்லின் நேரடிப் பொருளே
ஒரு கையால் தான் செய்ய வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
அகராதியை மேற்கோள் காட்டி இப்னு ஹஜர், இப்னுல் கய்யிம் போன்ற
பல அறிஞர்கள் ஒரு கையால் முஸாஃபஹாச் செய்வதுதான் சரியான
முறை என்கின்றனர்.

இரண்டு கைகளால் முஸாபஹாச் செய்யவேண்டும். அல்லது செய்யலாம்
என்ற கருத்துடையவர்கள் புகாரியில் இடம் பெற்ற ஹதீஸை எடுத்துக்
காட்டுகின்றனர்.
முஸாஃபஹா என்ற பாடத்தில் இந்த ஹதீஸை புகாரி இமாம் பதிவு
செய்திருந்தாலும் அந்த ஹதீஸக்கும் முஸாஃபஹாவுக்கும் எந்தச்
சம்பந்தமும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு அத்தஹிய்யாத் கற்றுத் தந்தனர்.
அப்போது எனது ஒரு கை அவர்களின் இரண்டுகைகளுக்கிடையே இருந்தது
என்பது தான் அந்த ஹதீஸ்.
நூல் : புகாரி 6265 

ஒருவருக்குக் கற்றுக் கொடுக்கும் போது ஆசிரியர் தமது இரு கைகளால்
மாணவரின் ஒரு கையைப் பிடித்துக் கொண்டு சொல்லிக் கொடுக்கலாம்
என்பதுதான் இதிலிருந்து தெரிகிறது. ஒருவரைச் சந்திக்கும்போது செய்யும்
முஸாஃபஹா பற்றி இது குறிப்பிடவில்லை

மேலும் இதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரு கைகளையும்
இப்னு மஸ்வூத் (ரலி) ஒரு கையையும் பயன்படுத்தியுள்ளனர்.
முஸாஃபஹாவுக்கு இதை ஆதாரமாகக் காட்டுவோர் 'ஒருவர் ஒரு
கையையும் மற்றவர் இரு கைகளையும் பயன்படுத்த வேண்டும்'
என்று கூறுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கட்டியணைத்தல் 

ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கட்டியணைக்கும் வழக்கமும்
மக்களிடம் பரவலாகக் காணப்படுகிறது. இந்தச் செயல் நபிவழி என்று
சொல்லும் அளவுக்கு ஏற்கத் தக்க ஆதாரம் ஏதும் இல்லை. இதுபற்றி
சில ஹதீஸ்கள் இருந்தாலும் அவை அனைத்துமே பலவீனமான
வையாக உள்ளன

'ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் மதீனாவுக்கு வந்தார்கள்.
அப்போது நபிகள் நாயகம் (ஸல்) என் வீட்டில் இருந்தனர். வீட்டுக்கு
ஸைத் பின் ஹாரிஸா (ரலி) வந்து கதவைத் தட்டினார். உடனே
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆடை இழுபட நிர்வாணமாக
அவரை நோக்கிச் சென்றார்கள். அதற்கு முன்போ பின்போ அவர்களை
நான் நிர்வாணமாகப்பார்த்ததில்லை. உடனே அவரைக்கட்டிய முத்தமிட்டார்கள்'
என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : திர்மிதி 2656


ஆயிஷா (ரலி) கூறியதாக உர்வா அவர் அறிவிக்கிறார்.
உர்வா கூறியதாக ஸஹ்ரி அறிவிக்கிறார்.
ஸஹ்ரி கூறியதாக முஹம்மத் பின் இஸ்ஹாக் அறிவிக்கிறார்.
முஹம்மத் பின் இஸ்ஹாக் கூறியதாக யஹ்யா பின் முஹம்மத்
அறிவிக்கிறார்
யஹ்யா பின் முஹம்மத் கூறியதாக அவரது மகன் இப்றாஹீம்
அறிவிக்கிறார்.
இப்றாஹீம் கூறியதாக புகாரி இமாம் அறிவிக்கிறார்.
புகாரி இமாம் கூறியதாக திர்மிதி இமாம் பதிவு செய்கிறார்.

இந்த அறிவிப்பாளர்களில் யஹ்யா பின் முஹம்மத் என்பவரும்
பலவீனமானவர். அவர்வழியாக அறிவிக்கும் அவரதுமகன் இப்றாஹீமும்
பலவீனமானவர்
பலவீனமான இருவர்வழியாக இச்செய்தி அறிவிக்கப்படுவதால் இதை
ஆதாரமாகக் கொள்ள முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்வாணமாக கதவைத் திறக்கச்

சென்றார்கள் என்பது இச்செய்தியின்பலவீனத்தை மேலும்அதிகரிக்கிறது.
நபியின் மனைவியாக இருந்தும் ஆயிஷா (ரலி) 'நபிகள் நாயகம்

(ஸல்) அவர்களை அதற்கு முன்பும் பின்பும் நிர்வாணமாகப்
பார்த்ததில்லை' எனக் கூறியதாக அறிவிப்பதும் இச்செய்தியின்
பலவீனத்தை இன்னும் அதிகரிக்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்களைச் சந்திக்கும் போது
உங்களை முஸாஃபஹா செய்வார்களா? என்று அபூதர் (ரலி)
அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் என்னை நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் எப்போது சந்தித்தாலும் என்னிடம் முஸாஃபஹா
செய்யாமல் இருந்ததில்லை. ஒரு நாள் என்னைத் தேடி
ஆளனுப்பினார்கள். நான் வீட்டில் இருக்கவில்லை. வீட்டுக்குவந்ததும்

நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் ஆளனுப்பியது எனக்குச்சொல்லப்பட்டது.
உடனே நான் நபிகள்நாயகம்(ஸல்)அவர்களிடம் சென்றேன்.அவர்கள்
தமது கட்டிலில் இருந்தனர். அப்போது என்னைக் கட்டியணைத்தனர்.
இது (முஸாஃபஹாவை விட) சிறந்ததாக இருந்தது என்று அபூதர்
(ரலி) விடையளித்தார்கள் என்று ஒரு மனிதர் கூறினார்.
நூல்கள் : அபூதாவூத் 4538, அஹ்மத் 20470, 20502


அபூதர் (ரலி)யிடம் கேட்டு அறிவிக்கும் அறிவிப்பாளரின்
பெயர் குறிப்பிடாமல் ஒரு மனிதர் அறிவித்தார் என்று அய்யூப்
பின் புஹைர் என்பார் அறிவிக்கிறார்.
அந்த மனிதரின் பெயர் என்ன? அவர் நல்லவரா? கெட்டவரா?
நினைவாற்றல் உள்ளவரா? இல்லாதவரா? என்பது போன்ற எந்த
விபரமும் கூறப்படாததால் இது ஆதாரமாகக் கொள்ள முடியாத
செய்தியாகும்.

நபித் தோழர்கள் சந்தித்துக் கொள்ளும் போது முஸாஃபஹா
செய்வார்கள். பயணத்திலிருந்து ஊர் வந்தால் கட்டியணைப்பார்கள்
என்ற அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : தப்ரானியின் அவ்ஸத்

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக கதாதா அறிவிக்கிறார்.
கதாதா கூறியதாக ஃபா அறிவிக்கிறார்.
ஃபா கூறியதாக அப்துஸ் ஸலாம் பின் ஹர்ப் அறிவிக்கிறார்.
அப்துஸ் ஸலாம் பின் ஹர்ப் கூறியதாக அஹ்மத் பின் எஹ்யா
கூறுகிறார்.
அஹ்மத் பின் யஹ்யா கூறியதாக நூலாசிரியர் தப்ரானி பதிவு
செய்துள்ளார்.
ஹதீஸின் இறுதியில் 'ஷஃபா வழியாக அப்துஸ் ஸலாம் பின்
ஹர்ப் என்பவரைத் தவிர வேறுஎவரும் இந்தஹதீஸை அறிவிக்கவில்லை.
அவர் கூறியதாக யஹ்யாமட்டுமே தனித்து அறிவிக்கிறார்' என்று தப்ரானி
குறிப்பிடுகிறார்.

அப்துஸ் ஸலாம் பின் ஹர்ப், யஹ்யா பின் சுலைமான் அல்ஜஅபி ஆகிய
இருவரும் தனித்து அறிவித்தால் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதாலேயே
தப்ரானி இவ்வாறு கூறுகிறார்.
அப்துஸ் ஸலாம் பின் ஹர்ப் என்பாரை அஹ்மத் பின் ஹம்பல்,

அப்துல்லாஹ் பின் முபாரக் ஆகியோர் குறைகூறியுள்ளனர். இவரது
ஹதீஸில் சிறிதளவு பலவீனம் உள்ளது என்று யஃகூப் பின் பா,
இப்னு ஸஅத் ஆகியோர் கூறுகின்றனர். மற்றும் பலர் இவரை
நம்பகமானவர் எனக் கூறுகின்றனர். இவர்தனித்து அறிவிப்பதை
ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதுதான் இவரைப்பற்றிய முடிவாகும்.
யஹ்யா பின் சுலைமான் அல் ஜஅபி என்பவரைப்பற்றியும் அறிஞர்கள்
இவ்வாறே முடிவு செய்துள்ளனர். எனவே இந்த ஹதீஸும்
ஆதாரத்துக்கு ஏற்றதல்ல

மேலும் இது நபிகள் நாயகம்(ஸல்)அவர்களைத் தொடர்புபடுத்திக்
கூறப்படவில்லை.நபித்தோழர்களின் நடைமுறையாகவே கூறப்பட்டுள்ளது
என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
கட்டியணைத்தல் தொடர்பாக ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸம் இல்லை.
மேலும் சிலசமயங்களில் கட்டியணைத்தல் வெறுப்பை ஏற்படுத்துவதாகவும்
அமையும். முக்கியமான ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக சலலை
ஆடையுடன் ஒருவர் செல்வார். வியர்வை நாற்றத்துடன் அழுக்கான
ஆடை அணிந்தவர் அவரைக் கட்டியணைத்தால் அவர் வெறுப்படைவார்.
அவரது சட்டை கசங்கியதால் கோபம் கொள்வார். ஒருவரை ஒருவர்
சந்திக்கும் போது அன்பைப் பரிமாறிக் கொள்வதற்காக இது வெறுப்பை
விதைப்பதைக் காண்கிறோம். 
எனது கை குலுக்குவதோடு நிறுத்திக் கொள்வதுதான் நபிவழியாகும்.

கைகளை முத்தமிடுதல்

நாம் யாரைப் பெரியவர்கள் என்று எண்ணுகிறோமோ அவர்களின்
கைகளை முத்தமிடும் முட நம்பிக்கையும் சிலரிடம் காணப்படுகிறது.
மிகச் சில நபித்தோழர்கள் மிகச் சில சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களின் கைகளை முத்தமிட்டுள்ளதற்கு சில ஹதீஸ்கள்
உள்ளன. அதன் நம்பகத் தன்மையில் கருத்து வேறுபாடு உள்ளது.
அவற்றை நம்பகமானது என்று வைத்துக் கொண்டாலும் அது
இச்செயலுக்கு ஆதாரமாகாது.

பெரியவர்கள், மகான்கள் என்று எண்ணிக் கொண்டு அவர்களின்
கைகளை முத்தமிட்டால் அதனால் பரகத் எனும் பாக்கியம்கிடைக்கும்
என்ற எண்ணத்திலேயே இவ்வாறு செய்கின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்க ளை மகான் என்று நம்புவது
மார்க்கத்தின்கடமையாக ஆகிவிடுகிறது. அல்லாஹ்வும், நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களும் யாரை மகான்கன் என்று குறிப்பிட்டுச் சொன்னார்களோ
அவர்களையும் மகான்கள் என்று நாம் நம்பலாம்.

மற்ற எவரையும் மகான் என்றோ இறைவனுக்கு நெருக்கமானவர் என்றோ
முடிவு செய்யும் அதிகாரம் நமக்குஇல்லை. நாம் மகான் என்று நினைப்பவர்
இறைவனிடம் த்தானாக இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.
எனவே மகான் என்று இறைவனாலும் இறைத்தூதராலும் அறிவிக்கப்படாத

அனைவரும் சமமான நிலையில் உள்ளவர்களே. இறைவனுக்கு இவர்
நெருக்கமானவர் என்று யாரைப் பற்றியும் முடிவு செய்யமுடியாது எனும்
போது வெறும் தாடியையும், ஜிப்பாவையும் பேச்சாற்றலையும், அரபு
மொழி அறிவையும் வைத்துக் கொண்டு மகான் என்று முடிவுசெய்வது
இறைவனது அதிகாரத்தைக் கையில் எடுக்கும் குற்றமாகும். 'மகானா
அல்லவா என்பதை நானல்லவா தீர்மானிக்க வேண்டும். இதைத்
தீர்மானிக்க நீ யார்' என்று அல்லாஹ் கேட்டால் அதற்கு நம்மிடம்
ஏற்கத்தக்க பதில் இல்லை.

எனவே எந்த மனிதரையும் முத்தமிட நமக்கு அனுமதி இல்லை.
ஸலாம் கூறுவதும் முஸாஃபஹா செய்வதும் தவிர வேறு எதுவும்
இஸ்லாத்தில் இல்லை.

காலில் விழுதல் 

சிலர் இந்த எல்லையையும் கடந்து மகான்கன் என்று இவர்களாகத்
கற்பனை செய்து கொண்டவர்களின் கால்களில் விழுகின்றனர். இது
மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும் என்பதை விளங்கிக் கொள்ள
வேண்டும்

திருக்குர்ஆன் இதைத் தெளிவாக அறிவிக்கின்றது.

உமது இறைவனிடம் இருப்போர்(வானவர்கள்)அவனுக்கு அடிமைத்தனம்
செய்வதைப் புறக்கணிக்க மாட்டார்கள். அவனைத் துதிக்கின்றனர்.
அவனுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர்
திருக்குர்ஆன் : 7:206

இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில்
உள்ளவை. சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள்!
அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப்படைத்த
அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்!
திருக்குர்ஆன் : 41:37

அல்லாஹ்வுக்கே ஸஜ்தா செய்து வணங்குங்கள்.
திருக்குர்ஆன் : 53:62 

படைக்கப்பட்டவற்றுக்கு ஸஜ்தாச் செய்யககூடாது. படைத்தவனுக்குத்
தான் ஸஜ்தாச் செய்யவேண்டும் என்பதுதான் நமக்கு இடப்பட்ட கட்டளை.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஸஜ்தாச் செய்வதை நான்
அனுமதிப்பதாக இருந்தால் மனைவியை கணவனுக்கு ஸஜ்தா செய்ய
அனுமதித்திருப்பேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி)
நூல் : திர்மிதி 1079


நான் ஹீரா எனும் ஊருக்குச் சென்றேன். அங்குள்ள தலைவருக்கு
அவ்வூர் மக்கள் ஸஜ்தா செய்ததை நான் பார்த்தேன். ஸஜ்தா
செய்யப்படுவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவரை
விட அதிக தகுதி படைத்தவர்களாயிற்றே என்று (எனக்குள்)
நான் கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்
வந்து 'ஹீரா ஊர் மக்கள் தமது தலைவருக்கு ஸஜ்தாச் செய்ததை
நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதரே நீங்கள் இதற்கு அதிகத்
தகுதி உடையவர்கள்' என்று நான் கூறினேன். அதற்கு நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் 'எனது சமாதியை நீ கடந்து சென்றால்
அதற்கு ஸஜ்தாச் செய்வாயா?' எனக் கேட்டார்கள். மாட்டேன் என்று
நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அவ்வாறு
செய்யாதீர்கள். ஒரு மனிதனை இன்னொரு மனிதனுக்கு ஸஜ்தாச் செய்ய
நான் அனுமதிப்பதாக இருந்தால் மனைவியை கணவனுக்கு ஸஜ்தாச்
செய்ய அனுமதித்திருப்பேன். ஏனெனில் அவர்கள் கணவருக்கு அதிகம்
கடன்பட்டுள்ளனர்' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பாளர் : கைஸ் பின் சஅத் (ரலி)
நூல் : அபூதாவூத் 1828

முஆத் (ரலி) ஷாம் அல்லது ஏமன் நாட்டுக்கு வந்தார். அங்கே
கிறித்தவர்கள் தங்கள் பாதிரிமார்களுக்கும், தலைவர்களுக்கும்
ஸஜ்தாச் செய்ததைக் கண்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
இதற்கு அதிகத் தகுதி படைத்தவர்கள்' என்று மனதுக்குள்
எண்ணிக் கொண்டனர். (மதீனா வந்தததும்) 'அல்லாஹ்வின்
தூதரே கிறித்தவர்கள் தமது மத குருக்களுக்கும், தலைவர்களுக்கும்
ஸஜ்தாச் செய்ததை நான் கண்டேன். (இவ்வாறு) கண்ணியம்
செய்வதற்கு நீங்கள் அதிகத் தகுதி படைத்தவர்கள் என்று என்
மனதில் எண்ணினேன். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று
கேட்டேன். இது தான் எங்களுக்கு முந்தைய நபிமார்களின்
முகமன் அவர்கள் கூறினார்கள். இதை எங்கள் நபிக்கு செய்திட
நாங்கள் அதிக உரிமை படைத்தவர்கள்' என்று கூறினார்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் தங்கள்
வேதத்தை மாற்றியது போல் தங்கள் நபிமார்கள் மீது பொய்
கூறுகின்றனர். இதை விடச் சிறந்ததை அல்லாஹ் நமக்குத்
தந்துள்ளான். அது தான் ஸலாம் என்று நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அபீஅவ்பா (ரலி)
நூல் : அஹ்மத் 18591 

சமுதாயத்தில் எவ்வளவு மதிப்புமிக்கவர் என்றாலும் அவர் காலில்
விழுவதற்கு இஸ்லாத்தில் அறவே அனுமதியில்லை.

வழிகேடர்களின் ஆதாரங்கள் 

முதல் மனிதராகிய ஆதமை இறைவன் படைத்தவுடன் அவரது
திறமையை வெளிப்படுத்திக் காட்டி அவருக்கு ஸஜ்தாச் செய்யுமாறு
வானவர்களுக்குக் கட்டளையிட்டான் என திருக்குர்ஆனின் 2:34, 7:11,
15:29,30,31, 17:61, 18:50, 20:116, 38:72 ஆகிய வசனங்களில்
கூறப்பட்டுள்ளது.

இவ்வசனங்களைச் சான்றாகக் கொண்டு பெரியார்களுக்கும்,
மகான்களுக்கும் ஸஜ்தா (சிரம் பணிதல்) செய்யலாம் என்று சிலர்
வாதிட்டு வருகின்றனர். இது முற்றிலும் தவறாகும்.
நமக்குத் தெளிவான தடை இருக்கும் போது வானவர்களுக்கு
இடப்பட்டகட்டளையை நாம் செயல்படுத்தமுடியாது. பெரியவர்களிடம்
பணிவாகவும், அடக்கமாகவும் நடந்து கொள்ளலாம். ஆனால்
அவர்களின் கால்களில் விழுவதையும், அவர்களுக்கு ஸஜ்தாச்
செய்வதையும் இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கிய சமுதாயத்தில்
இத்தகைய வழக்கம் அறவே இருந்ததில்லை. இது குறித்துத்
தெளிவாக அறிய, முக்கியமான விவரத்தை நாம் அறிந்து
கொள்வது அவசியமாகும்.

(ஸலாத்) தொழுகை, (ஸவ்ம்) நோன்பு, ஸகாத் போன்ற
சொற்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு
முன்பே அரபுகளால் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆயினும்,
இப்போது நாம் பயன்படுத்துகின்ற பொருளில் இவ்வார்த்தைகள்
பயன்படுத்தப்படவில்லை.

தொழுகையைக் குறிப்பிட ஸலாத் என்னும் வார்த்தையை
இப்போது பயன்படுத்துகிறோம். ஆனால், இவ்வார்த்தையின்
நேரடிப் பொருள் பிரார்த்தனையாகும். இப்பொருளில் தான்அரபுகள்
இவ்வார்த்தையைப் பயன்படுத்தி வந்தனர்.
குறிப்பிட்ட சில காரியங்கள் அடங்கிய குறிப்பிட்ட வணக்கத்திற்கு

ஸலாத் என்ற வார்த்தையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
பயன்படுத்தினார்கள்.

ஸவ்ம் என்ற வார்த்தை நோன்பைக் குறிப்பிடுவதற்கு இன்று
பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு
முன்னர் 'கட்டுப்படுத்திக் கொள்ளுதல்' என்ற பொருளில் இவ்வார்த்தை
பயன்படுத்தப்பட்டது.

இஸ்லாம் புதிய வார்த்தைகளைக் கண்டுபிடித்து வணக்கங்களுக்குப்
பெயர் சூட்டவில்லை. மாறாக நடைமுறையில் இருந்த வார்த்தைகளில்
பொருத்தமானதைத் தேர்வு செய்து வணக்கங்களுக்குப் பெயர்சூட்டியது.
இது போலவே ஸஜ்தா என்ற வார்த்தையும் அரபு மொழியில் நபிகள்

நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டு வந்தது.
நெற்றி, மூக்கு, இரண்டு உள்ளங்கைகள், இரண்டு முட்டுக் கால்கள்,
இரு கால்களின் விரல்கள் ஆகியவை தரையில் படும் வகையில்
பணிவது ஸஜ்தா என்று நாம் விளங்கி வைத்துள்ளோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்விளக்கம் அளிப்பதற்கு முன்னால்
இவ்வார்த்தைக்கு இவ்வாறு பொருள் இல்லை. நன்றாகப் பணியுதல்
என்பதே இவ்வார்த்தையின் பொருளாக இருந்தது. பணிவைக் காட்டும்
எல்லாக் காரியங்களையும் ஸஜ்தா எனக் குறிப்பிடப்பட்டது.
அகராதியில் மட்டுமின்றி திருக்குர்ஆனிலும் நன்றாகப் பணியுதல்
என்ற பொருளில் இவ்வார்த்தை, பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நீங்கள் இவ்வூரில் ஸஜ்தாச் செய்தவர்களாக வாசல் வழியாக நுழையுங்கள்!
(திருக்குர்ஆன்: 2:58, 4:154, 7:161) 

இவ்வசனங்களில் அகராதியில் உள்ள பணிவு என்ற பொருளைத்
தான் ஸஜ்தா என்ற சொல்லுக்குக் கொள்ள முடியும். இஸ்லாமிய
வழக்கில் உள்ள ஸஜ்தாவுக்குரிய பொருளை இங்கே கொள்ள
முடியாது. ஏனெனில் இந்த ஸஜ்தாவைச் செய்து கொண்டு வாசல்
வழியாக நுழைய இயலாது.
மனிதர்கள் மட்டுமின்றி சூரியன், சந்திரன், நட்சத்திரம், மரம்
ஊர்வன, மலை உள்ளிட்ட அனைத்தும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தாச்
செய்கின்றன என்று திருக்குர்ஆன் 22:18 வசனம் கூறுகிறது.

இவற்றுக்கு முகமோ, மூக்கோ, கைகளோ, மூட்டுக் கால்களோ
கிடையாது. குனிந்து மரியாதை செய்வதற்கான முதுகும் கிடையாது.
மலைகளோ, மரங்களோ இருக்கின்ற இடத்தை விட்டு நகர்வது கூட
இல்லை. ஆனாலும், இவை தனக்கு ஸஜ்தாச் செய்கின்றன என்று

அல்லாஹ் கூறுகிறான்.

சூரியன், சந்திரன், நட்சத்திரம் ஆகியவை ஓய்வின்றி இறைவன்
வகுத்தளித்த திட்டப்படி சுற்றிச் சுழன்று வருகின்றன. இது தான்
அவற்றுக்கான ஸஜ்தா. மரங்கள் பூத்துக் காய்த்துக் குலுங்குவது
அவற்றுக்குரிய ஸஜ்தாவாகும்.
மலைகள், இப்பூமி தடம் புரளாமல் தடுத்து நிறுத்தும் பணியை

அல்லாஹ்வின் கட்டளைப் படி செய்து வருகின்றன. இது அவற்றுக்குரிய
ஸஜ்தாவாகும்.
மொத்தத்தில் அனைத்தும் இறைவனது உயர்வையும், தங்களது
தாழ்வையும் ஒப்புக் கொண்டு பணிந்து வருகின்றன. பணிந்து நடப்பது
தான் இங்கே ஸஜ்தா எனப்படுகிறது.
திருக்குர்ஆன் 12:4, 13:15, 16:48,49 ஆகிய வசனங்களிலும் பணியுதல்

என்ற பொருளிலேயே ஸஜ்தா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதை
தெளிவாக அறியலாம்.
வானவர்கள் ஆதமுக்கு ஸஜ்தாச் செய்ததாகக் கூறும் மேற்கண்ட

வசனங்களையும் இப்படித் தான் புரிந்து கொள்ள வேண்டும். இதை
வலுப்படுத்தும் இன்னும் பல காரணங்களும் உள்ளன.
வானவர்கள் மனிதனைப் போன்றவர்கள் அல்லர். அவர்களுக்கு என

திட்டவட்டமான உருவம் ஏதும் இல்லை. அவர்களுக்கு நம்மைப்
போல் ஸஜ்தாவின் உறுப்புகள் இருக்கின்றன என்பதற்கும் சான்று
இல்லை. சில நேரங்களில் நபிகள் நாயகத்திடம் ஜிப்ரீல் என்னும்
வானவர் மனித வடிவத்தில் வந்துள்ளார். அதுவே அவரது வடிவம்
என்று கூற முடியாது. ஏனெனில், வானத்தையும், பூமியையும்
வியாபித்த வடிவத்திலும் அவர் நபிகள் நாயகத்துக்குக் காட்சிதந்துள்ளார்.
அவர்களுக்குச் சிறகுகளும்உள்ளன. எனவே, நம்மைப்போல் வானவர்களைக்
கருத முடியாது. எவ்வாறு அவர்கள் பணிவை வெளிப்படுத்த முடியுமோ
அவ்வாறு பணிவை வெளிப்படுத்தினார்கள் என்று தான் கருத முடியும்.
நாம் இப்போது செய்வது போலவே அவர்கள் ஸஜ்தாச் செய்தார்கள் என்று

ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டால் கூட அதை நாம்பின்பற்ற முடியாது.
காரணம் அல்லாஹ் கட்டளையிட்டதால் தான் வானவர்கள் ஆதமுக்கு
ஸஜ்தாச் செய்தனர்.
பெரியவர்களுக்குச் ஸஜ்தா செய்யுங்கள்'என்று அல்லாஹ்வோ,அல்லாஹ்வின்
தூதரோ நமக்குக் கட்டளையிடவில்லை. மாறாகத் தடை விதித்துள்ளனர்.
மேலும் யூஸஃப் நபி தொடர்பான பின் வரும் வசனங்களயும் சான்றாகக்
காட்டுகின்றனர்.

'என் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும்,
சந்திரனையும் நான் (கனவில்) கண்டேன். அவை எனக்குப்பணியக்
கண்டேன்' என்று யூஸுஃப் தமது தந்தையிடம்கூறியதை நினைவூட்டுவீராக!
மனிதர்களுக்கு இருப்பது போன்ற ஸஜ்தாவின் உறுப்புக்கள்

நட்சத்திரங்களுக்கும், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இல்லை
என்பதால் இங்கே பணிவு என்று தான் பொருள் கொள்ளமுடியும்.
எனவே இது அவர்களுக்கு ஆதாரமாகாது.
தமது பெற்றோரைச் சிம்மாசனத்தின் மீது அமரச் செய்தார்.
அவர்கள் அனைவரும் அவருக்குப் பணிந்தனர். 'என் தந்தையே!
முன்னர் நான் கண்டகனவுக்கு விளக்கம் இதுவே. அதை என்

இறைவன் உண்மையாக்கிவிட்டான். சிறையிலிருந்து வெளிவரச்
செய்த போது, அவன் எனக்குப் பேருதவி செய்தான். எனக்கும்,
என் சகோதரர்களுக்கும் இடையே ஷைத்தான் பிரிவினைஏற்படுத்திய
பின் உங்களைக் கிராமத்திலிருந்து கொண்டு வந்து சேர்த்து விட்டான்.
என் இறைவனோ நாடியதை நுணுக்கமாகச்செய்பவன்;அவன்அறிந்தவன்;
ஞானமிக்கவன்' என்று அவர் கூறினார்.
திருக்குர்ஆன் 12:100
திருக்குர்ஆன் 12:100 வசனத்தின் பொருளை முதலில் புரிந்து
கொள்ள வேண்டும். 12:4 வசனத்தின் விளக்கமே இப்போது.
நிறைவேறுகிறது.

நட்சத்திரங்கள் சகோதரர்களையும், சூரியன் தந்தையையும்,
சந்திரன் தாயையும் குறிக்கின்றது. கனவில் கண்டது அப்படியே
நிறைவேற வேண்டுமானால் 'அனைவரும் அவருக்கு ஸஜ்தாச்
செய்தனர்' என்பதில் யூசுப் நபியின் பெற்றோரும் அடங்க வேண்டும்.
யாருக்கு ஸஜ்தாச் செய்யப்படுகிறதோ அவர் சிம்மாசனத்தில்அமர்ந்தால்
மற்றவர்கள் ஸஜ்தாச் செய்ய ஏதுவாக இருக்கும். ஆனால் யார் ஸஜ்தா
செய்யப்போகிறார்களோ அவர்கள் சிம்மானத்தில் அமர வைக்கப்பட்டார்கள்
என்று தான் இவ்வசனம் கூறுகிகிறது. இதனால் ஸஜ்தாச் செய்யவில்லை
என்பது தெளிவாகிறது. அப்படியானால் கனவு நிறைவில்லை என்று ஆகி
விடுகிறது.

ஆனால் ஸஜ்தாச் செய்தனர் என்று பொருள் கொள்ளாமல் பணிந்தனர்
என்று பொருள் கொண்டால் இரண்டு வசனங்களும் ஒன்றை ஒன்று
மெய்ப்பிக்கிறது. சிம்மாசனத்தில் அமர்ந்தாலும் யூசுப் நபியின் மன்னர்
என்ற தகுதியை ஒப்புக் கொள்வதன் மூலம் பணிவைக் காட்ட முடியும்.
அனைவரும் பணிந்தனர் என்பது அப்படியே பொருந்திப் போகின்றது.
யூசுப் எவ்வாறு நபியாக இருந்தார்களோ அவ்வாறு அவர்களின் தந்தை
யஃகூப் அவர்களும் நபியாக இருந்தனர். அத்துடன் தந்தை என்ற தகுதியும்

அவர்களுக்கு இருந்தது. அவ்வாறிருக்க யஃகூப் நபி எவ்வாறு ஸஜ்தாச்
செய்திருப்பார்கள்? என்பதையும் சிந்தித்தால் இதில் அவர்களுக்கு எந்த
ஆதாரமும் இல்லை என்பதை உணரலாம்.

எழுந்து நின்று மரியாதை 

சந்திக்கும் மனிதர் பெரியவர் அல்லது தலைவர் அல்லது முக்கியத்துவம்
வாய்ந்தவர்என்றால் அவருக்காக எழுந்துநிற்கும் பழக்கமும் சமுதாயத்தில்
உள்ளது.

ஒருவரை வரவேற்கவும் வழிஅனுப்பவும் எழுந்து நிற்பதற்குமார்க்கத்தில்
அனுமதி உள்ளது. மரியாதைக்காக எழுந்து நிற்பதற்கு மார்க்கத்தில்
அனுமதியில்லை.

இரண்டையும் நாம் வேறுபடுத்திப் புரிந்து கொள்வது அவசியம்.
நாம் ஒருவரைச் சந்திக்கச் செல்கிறோம். நம்மைக்கண்டவுடன் அவர்
எழவில்லை என்றும். ஆனால் அவரைவிட முக்கிய தலைவர் சந்திக்கச்
சென்றால் எழுகிறார் என்றும் வைத்துக் கொள்வோம் அவர் மரியாதை
செய்வதற்காகவே எழுந்துள்ளார் என்பது தெளிவாகிறது. பெரியவரோ
சிறியவரோ யார் வந்தாலும் எழுந்து வரவேற்பார் என்றால் அவர்
மரியாதைக்காக இவ்வாறு செய்யவில்லை என்று புரிந்து கொள்ள முடியும்.
மேலும் மதிப்பு மிக்க ஒருவரும் மதிப்பு குறைந்த ஒருவரும் சந்திக்கிறார்கள்.
இரண்டாமவர் முதலாமவருக்காக எழுகிறார். ஆனால் முதலாமவர்
இரண்டாம் நபருக்காக எழுவதில்லை என்றால் இது மாரியாதை
செய்வதற்காக எழுந்து நிற்பதாகக் கருதப்படும். இப்படி கவனமாக
நடந்து கொள்ள வேண்டும்.

இது பற்றி பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ்கள் சிலவற்றைத்
தருகிறோம். அதிலிருந்து இந்த உண்மைகளை நாம் விளங்கிக்
கொள்ள முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். அவர்கள்
உட்கார்ந்த நிலையில் தொழுவிக்க அவர்கள் பின்னே நாங்கள் தொழுதோம்.
அபூபக்கர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தக்பீர் கூறுவதை
எதிரொலித்துக் கொண்டிருந்தனர். தீடீரென நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள்
எங்கள் பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். நாங்கள் நின்றுகொண்டிருப்பதைக்
கண்டு உட்காருமாறு சைகை செய்தனர். நாங்கள் உட்கார்ந்தோம்.
உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். ஸலாம்
கொடுத்த பின்னர் 'நீங்கள் பாரசீக, ரோமபுரி மக்கள் தங்கள் மன்னர்கள்
அமர்ந்திருக்க நின்று கொண்டிருப்பது போல் செய்யப் பார்த்தீர்களே?
இனி மேல் அவ்வாறுசெய்யாதீர்கள்! உங்கள் இமாம்களை நீங்கள்
பின்பற்றித் தொழுங்கள்! அவர்நின்று தொழுதால் நீங்களும் நின்று
தொழுங்கள்! அவர் உட்கார்ந்துதொழுதால் நீங்களும் உட்கார்ந்து
தொழுங்கள்' என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 624



நபிகள் நாயகம்(ஸல்)அவர்களை விட நபித்தோழர்களுக்கு
விருப்பமானவர் ஒருவரும் இருந்ததில்லை. அப்படிஇருந்தும்
நபிகள் நாயகத்துக்குப் பிடிக்காது என்பதைஅவர்கள் அறிந்திருந்த
காரணத்தால் நபிகள் நாயகத்தை அவர்கள்கண்டால் அவர்களுக்காக
எழ மாட்டார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல்கள் : திர்மிதி 2678, அஹ்மத் 11895, 12068, 13132

தனக்காக மற்றவர்கள் எழ வேண்டும் என்று யார்விரும்புகிறாரோ
அவர் தனது இருப்பிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக்கொள்கிறார் என்று
நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறியதாக முஆவியா (ரலி) அ
றிவிக்கிறார்கள்
நூல்கள் : அபூதாவூத் 4552, திர்மிதி 2679,

ஸஃது பின் முஆத் (ரலி) அவர்கள் வந்த போது உங்கள் தலைவரை
நோக்கி எழுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நூல் : புகாரி 3043, 3804, 4121, 6262

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃதுக்கு மரியாதைசெலுத்துவதற்கு
எழுவில்லை. வரவேற்கவே எழுந்தார்கள்.
ஃபாத்திமா (ரலி) அவர்கள் வரும் போது அவரைநோக்கி நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் எழுந்து செல்வார்கள்.
நூல் : அபூதாவூத், 4540, திர்மிதி 3807



நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் மகளுக்கு மரியாதைசெலுத்த எழவில்லை.
வரவேற்கவே எழுந்தார்கள்.
மதிப்பில் பெரியவர்கள் சிறியவர்களுக்காக எழுவது வரவேற்பதற்காகத்தான்
இருக்கும். ஆனால் மதிப்பில் சிறியவர்கள் எழுவது இரண்டவகையாகஇருக்கும்.
எனவே ஒருவரை மற்றவர் சந்திக்கும் போது ஸலாம் கூறுதலும்,
முஸாபஹா செய்தலும் தவிர வேறு எந்த விதமான மரியாதையும்
இஸ்லாத்தில் இல்லை என்பதை உணர்ந்து நடக்கும் நன் மக்களாக
அல்லாஹ் நம்மை ஆக்கியருள்வானாக.

நூலின் பெயர்: சந்திக்கும் வேளையில்


ஆசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன்

http://onlinepj.com/books/santhikkum-veLaiyil/


0 comments:

Post a Comment