Wednesday, December 15, 2010

நபிவழியா ? நாச வழியா ?.. கப்ரில் தொழுத பெரியார் . புத்திக்குப் புலப்படாத புதிர்ச் சரிதைகள்

தப்லீக்கின் அடிப்படை அம்சங்கள் (ஆறு நம்பர்)
இரலெல்லாம் தொழுது பகலெல்லாம் நோன்பிருப்பது நபிவழியா?? நாச வழியா??
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வீட்டுக்கு சில நபித் தோழர்கள் வந்து நபிகளாரது வணக்க வழிபாடுகள் பற்றி அவர்களின் மனைவியிடம் கேட்டனர் . அதற்கு அவர் கூறிய பதில் திருப்தியளிக்காததால் ‘நாங்களும் நபியவர்களும் ஒன்றா? நாமோ பாவிகள் அவர்களோ முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்கள் . எனவே நாம் நபிகளாரை விட அதிகம் வணக்கம் புரிய வேண்டும் எனமுடிவெடுத்தனர்’ அவர்களில் ஒருவர் நான் இன்று முதல் இரவில் தூங்கவே மாட்டேன் .இரவு முழுக்க தொழுது கொண்டிருப்பேன் என்றும் மற்றவர் நான் இனிமேல் காலமெல்லாம் நோன்பு நோற்றுக் கொண்டிருப்பேன். என்றும் மூன்றாமவர் இனி நான் மனைவியிடம் நெருங்கவே மாட்டேன் என்றும் சத்தியம் செய்து கொண்டனர். இந்தச் செய்தி நபியவர்களின் காதுக்குச் சென்றதும் நபியவர்கள் இம்மூவரையும் அழைத்து நீங்கள்தானா இவ்வாறெல்லாம் சத்தியம் செய்து கொண்டவர்கள்?? . அறிந்து கொள்ளுங்கள் . அல்லாஹ்வின் மீது சத்தியமாக நானே உங்கள் அனைவரை விடவும் அல்லாஹ்வுக்கு மிகப் பயப்படுபவனும் தக்வா உடையவனுமாவேன். இருப்பினும் தான் இரவில் தொழவும் செய்கின்றேன் தூங்கவும் செய்கின்றேன், சில நாள் பகலில் நோன்பும் நோற்கின்றேன், சில நாள் நோன்பை விட்டு சாப்பிடவும் செய்கின்றேன், பல மனைவியரை மணந்து இன்பம் அனுபவிக்கவும் செய்கின்றேன். எனவே இதுதான் எனது வழிமுறை, எனதுவழிமுறையைப் புறக்கணிப்பவன் என்னைச் சார்ந்தவனல்ல என நபியவர்கள் கூறினார்கள். (ஆதாரம் புகாரி 4675 முஸ்லிம் 2487)
நபித்தோழர் ஸல்மான் பாரிஸியும் அபூதர்தாவும் நெருங்கிய நண்பர்கள் . ஒருநாள் சல்மான் தனது நண்பர் அபூதர்தாவின் வீட்டுக்குச் சென்றார் . அங்கு அவரது மனைவி அலங்கோலமான அழுக்கடைந்த ஆடைகளுடன் இருப்பதைக் கண்டு அபூதர்தா எங்கே ? நீங்கள் ஏன் இப்படி அவலட்சனமான ஆடையுடன் இருக்கின்றீர்கள்? என வினவினார் .அதற்கு அந்த அம்மையார் ‘எனது கணவருக்கு துன்யாவில் எவ்வித தேவையுமே இல்லை . எப்போதும் வணக்க வழிபாடுகளழலேயே அவர் ஈடுபட்டிருப்பார் . என பதிலளித்தார்’ இதன் பின் ஸல்மான் தன் நன்பரைச் சந்தித்து நன்பரே’ வாருங்கள் சாப்பிடுவோம் என அழைக்க அவர் நான் நோன்பு என்றார் . நோன்பை விடச் சொல்லி விட்டு இருவரும் சாப்பிட்டனர் . இரவானதும் அபூதர்தா தொழ ஆரம்பித்து விட்டார் .உடனே ஸல்மான் வேண்டாம் இப்போது தூங்கு என்று தூங்க வைத்தார்.பின்னிரவில் இருவரும் எழுந்து தொழுதனர் . காலையில் அவரை நோக்கி அபூதர்தாவே நீங்கள் உங்கள் உடலுக்குச் செய்யும் கடமைகள் சில உள்ளன, உம் மனைவிக்குச் செய்யும் சில கடமைகள் உள்ளன, அல்லாஹ்வுக்குச் செய்யும் சில கடமைகளும் உள்ளன . எனவே ஒவ்வொரு கடமையையும் ஒழுங்காக நிறைவேற்ற வேண்டும் எனப் போதித்தார் . பின்னர் இது பற்றி அபூதர்தா நபியவர்களிடம் முறையிட்ட போது ‘ஸல்மான் சொல்வது உண்மைதான் ‘ எனநபியவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி 1823 )
இது தான் நபியவர்கள் முஸ்லிம்களுக்குக் கற்றுத்தந்த வணக்க வழிமுறை . இதைப்புறக்கணித்து நடப்பவர் என்னைச் சார்ந்தவரல்லர் என நபி (ஸல்) அவர்கள் அறிவித்து விட்டார்கள் .இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு பின்வரும் சம்பவங்களைப் படியுங்கள்.
1- பகலெல்லாம் நோன்பு நோற்றதாலும் இரவெல்லாம் நின்று வணங்கியதாலும் இளைத்துக் களைத்து இளவயதிலேயே மரணமடைந்து விட்ட ஏழை வாலிபர்களின் சம்பவம்.( தொழுகையின் சிறப்பு 10ம் ஹதீஸ் விளக்கம் .)
இச்சம்பவத்தில் அவரிடம் ஏன் இப்படி உடலை வருத்தி இபாதத் செய்கின்றீர்கள் என ஒருவர் கேட்டதற்கு ‘நாங்கள் சில வாலிபர்கள் அதிக இபாதத் செய்பவர் யார் எனப் போட்டி வைத்தோம் . மற்ற அனைவரும் இபாதத் செய்தே மரணித்து விட்டனர் நான் மாத்திரமே மிஞ்சியிருக்கின்றேன் . ஒவ்வொரு நாளும் இரு தடவைகள் என்அமல்கள் அவர்களுக்கு எடுத்துக்காட்டப்படும் நிலையில் அதில் அவர்கள் குறை கண்டால் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்றார் வாலிபர் .
இவர் செய்த இபாதத் முறை நபிவழிக்கு எதிரானது . அப்படியே சரியென வைத்துக் கொண்டாலும் தன் நண்பர்களுக்கு தன் இபாதத் காட்டப்படும் போது அதில் அவர்கள் குறைகாணக் கூடாது எனும் எண்ணத்தில் அமல் செய்திருப்பதால் இதுவே இவரது அமலை இக்லாஸற்ற முகஸ்த்துதிக்குரியதாக்கி விட்டது
2-கப்ரில் தொழுத பெரியாரின் சம்பவம் . ( தொழுகையின் சிறப்பு 14ம் சம்பவம் . )
தாபித் அல் பன்னானி எனும் பெயருடைய இப்பெரியாரின் புதல் விதம் தந்தை 50 ஆண்டுகளாக இரவு முழுக்க விழித்து வணங்கி ஸூப்ஹூ நேரத்தில் தனக்கு கப்ரில் தொழும் பாக்கியத்தைத் தருமாறு துஆ கேட்டதாகச் சொல்கின்றார் .
ஹதீஸ்க்கலை மேதையான இவர் நபிவழிக்கு மாற்றமாக எப்படி 50 ஆண்டு இரவு முழுதும் வணங்கியிருக்க முடியும் ? கப்ரில் கேள்வி கணக்கு முடிவுற்றதும் மறுமைநாள் வரை தூங்கு எனச் சொல்லி விட்டு மலக்குகள் சென்று விடுவார்கள் என நபிகளார் கூறியிருக்க இவர் எப்படி கப்ரில் எழுந்து தொழுதிருக்க முடியும் ? .
இதைத்தான் விட்டு விடுவோம் இதை நேரில் கண்டதாகச் சொல் கின்றாரே.. அவரைச் சற்று குறுக்கு விசாரணை செய்வோம்.
‘மையித்தை அடக்கிக் கொண்டிருக்கும் போது செங்கல் விழுந்து துவாரமேற்பட்டதால் அதனூடாக பெரியார் தொழுததைப் பார்த்திருக்கின்றார் இவர். மய்யித் அடக்கப்பட்டு அதன் உறவினர் சற்று தூரம் சென்றதன் பின்னரே மலக்குகள் வந்துஉயிர் கொடுத்து அவரை எழுப்பி விசாரிக்கின்றனர் . அது வரைக்கும் அவரால் எதுவும் செய்ய முடியாது .தொழுவதாயினும் நோன்பு பிடிப்பதாயினும் அது உயிர் கொடுத்ததன் பின்னரே சாத்தியப்படும். அப்படியிருக்க அதற்கு முன் பெரியார் தொழுவதை இவர் பார்த்திருக்க முடியுமா ?
‘கப்ருக்குள் ஒருவர் அடக்கப்பட்டதும் அவருக்கும் உலகுக்குமிடையில் திரையிடப்பட்டு விடுகின்றது . இது பற்றி அல்லாஹ்
‘அவர்களுக்குப் பின்னால் அவர்கள் எழுப்பப்படும் நாள் வரைக்கும் ஒரு திரை போடப்பட்டிருக்கின்றது .’என்கின்றான் .
( ஸூரா முஃமினூன் )
இவ்வசனம் கப்றில் நடக்கும் விடயங்கள் மறைவானவை . அவற்றை சாதாரண எம்போன்ற மனிதர்களால் பார்க்க முடியாது என் பதைத்திட்டவட்டமாக எடுத்துரைக்கின்றது .
நீங்கள் இறந்தவர்களை அடக்காது விட்டு விடுவீர்களோ எனும் அச்சம் எனக்கில்லாது விட்டால் நான் செவியுறும் கப்ருடைய வேதனையை நீங்களும் செவியுறுமாறு செய்திருப்பேன் என நபியவர்கள் கூறினார்கள் .. ( ஆதாரம் முஸ்லிம் )
நபியவர்களைத்தவிர வேறு எவரும் கப்ரில் நடப்பவற்றைச் செவியுற மாட்டார்கள் என சொல்லியிருக்க மேற்படி நபர் எங்ஙனம் பெரியார் தொழுததைப்பார்த்திருக்க முடியும் .
கப்ரில் நடக்கும் விசாரணை மலக்குகள் அவரை எழுப்பி இருக்க வைப்பது, வேதனை செய்வது, நல்லவர்களின் கப்று தொலைதூரத்திற்கு விசாலமாக்கப்படுவதெல்லாம் ஹதீஸில் வந்துள்ளது . ஆனால் இவை நாம் விசாரிப்பது போன்றோ, நாம் எழுந்திருப்பது போன்றோ அல்ல . இதன் முறை எப்படி யென்பதை அல்லாஹ்வே அறிவான் . இவர் பெரியார் கப்ரில் தொழுவதைப் பார்த்திருந்தால் வழக்கமாக மனிதர்கள் தொழும் முறையில் தொழுவதையே பார்த்திருக்க வேண்டும் . அது எப்படி மூன்றடி உயர கப்ரினுள் நிகழ்வது சாத்தியமாகும் ?.
அதே போல் அறபு நாட்டு கப்றின் அமைப்பும் வித்தியாசமானது . இதற்கு லஹ்த் எனப்படும் . வழக்கமான கப்று போல்த் தோண்டியதன் பின் அதன் வலது பக்கமாக பக்க வாட்டில் பொந்து போன்று உள்அறை ஒன்று தோண்டி அதனுள்ளேயே ஜனாஸா வைக்கப்படும். பின் அவ்வறை கற்களால் மூடப்படும் . கப்றுக்கு மண்போட முன்பு கூட வெளியே இருப்பவர்களுக்கு ஜனாஸா தெரியும் வாய்ப்பே கிடையாது.
இவை அனைத்தையும் வைத்து ஆராய்ந்து பார்க்கும் போது மேற்படி சம்பவத்துக்கு ஆதாரமிக்க சான்று இல்லாததாலும், இச்சம்பவம் ஹதீஸூக்கு முரணாவதாலும் பகுத்தறிவும் ஏற்க மறுப்பதாலும் இது பெரியார்கள் மீது பக்தியை உருவாக்குவதற்காகப் புனையப்பட்ட சம்பவம் என்பது தெளிவாகின்றது .
3-அறுபது ஆண்டுகள் தொடர்ந்து அழுது கொண்டே இருந்த பெரியார். தொழுகை சிறப்பு 2ம் சம்பவம் .
4-அறுபது ஆண்டுகளாக இஷாவுக்குச் செய்த ஒழுவுடன் ஸூபஹ் தொழுத பெரியார் . தொழுகை சிறப்பு 17ம் சம்பவம் .
5-தூங்கவே மாட்டேன் என சத்தியம் செய்து 40 ஆண்டுகளாகத் தூங்காத பெரியார் . தொழுகை சிறப்பு 1ம் சம்பவம் .
6-எழுபது ஆண்டுகளாக இடைவிடாது வணங்கிய பெரியார் .தொழுகை சிறப்பு 15 ம் சம்பவம் .
7-பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்து படுக்காத பெரியார் தொழுகை சிறப்பு 11ம் சம்பவம் .
8- அரசனானது முதல் மனைவியுடன் உறவு கொள்ளாத உமர் இப்னு அப்துல் அஸீஸின் சம்பவம். (தொ சிறப்பு 12ம் சம்பவம்.).
நபிவழி வாழ்ந்த ஒரு நீதியான அரசர் இப்படி மனைவியின் ஹக்குகளைப் பாழ்படுத்தியிருப்பாரா?
9-நாற்பது ஆண்டுகள் இரவெல்லாம் அழுது கொண்டும் பகலெல்லாம் நோன்பு வைத்துக் கொண்டுமிருந்த பெரியார் .
( தொ..சிறப்பு 13ம் சம்பவம் .)
10- பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவை சாப்பிட்ட பெரியார் .
(தொழுகை சிறப்பு  7ம் ஹதீஸின் விளக்கம் )
இப்படி பெரியார்களின் சாதனைப் பட்டியல்கள் நீண்டு கொண்டே செல்கின்றன . இவையெல்லாம் ஆசாபாசங்கள், உலக தேவைகளுடன் படைக்கப்பட்டிருக்கும் மனிதர்களிடமிருந்து நடப்பது சாத்தியமா? என்பது இரண்டாவது விடயம் . சரி நடந்தது என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம் . ஆனால் இதற்கு மார்க்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதா ? என்பதே கேள்வி . மார்க்கம் தடுத்திருக்கும் விடயத்தைச் செய்து விட்டு இபாதத் செய்து விட்டேன் என்று எப்படிச் சொல்ல முடியும் .? தீன் என்பது அல்லாஹ்வுடைய கட்டளையும் நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வழிமுறைகளும் என்று பெரியார்கள் சொல்லித்தந்த மந்திரத்தை பள்ளியெங்கும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் எனதன்பின் கார்க்கூன் சகோதரர்களே!!
மேற்படி பெரியார்களின் வாழ்க்கைச் சாகச நிகழ்வுகள் அல்லாஹ்வின் கட்டளையா ? அல்லது நபியவர்களுடைய வாழ்க்கை வழி முறையா?என்று ஒரு தடவையேனும் நீங்கள் சிந்தித்ததுண்டா ? சிந்தியுங்கள் இஸ்லாம் சிந்திக்கக் தூண்டும் மார்க்கம் . பகுத்தறிவுக்கு வேலை கொடுக்கும் மார்க்கம் இஸ்லாத்தை ஏற்க வரும் அன்னிய மதத்தினரைக் கூட இஸ்லாத்தைப் பற்றிச் சிந்தித்து அதன் சீரிய நேரிய தன்மையை அறிந்து விளங்கி ஏற்றுக் கொள்ளுமாறே அது தூண்டுகின்றது . எத்தனையோ மாற்றுமத நண்பர்கள் இஸ்லாத்தை அறிய விரும்பி குர்ஆன் ஹதீஸைப் படித்து இஸ்லாத்தின் மாண்புகளை அறிந்து அதனை ஏற்ற வரலாறுகள் நிறைய உண்டல்லவா? அப்படியாயின் பரம்பரை முஸ்லிம்களான நாம் ஏன் இப்படி குர்ஆன் ஹதீஸைப் படிப்பது விளங்குவதை விட்டும் எமக்கு நாமே தடைவேலி போட்டுக் கொள்ள வேண்டும் . குர்ஆன் ஹதீஸ் நமக்கு வழிகாட்டும் என்ற நம்பிக்கை இருந்தால் இன்றே அதன் பக்கம் வாருங்கள் . அதன் மூலம் இஸ்லாத்தைப் பற்றிப் படியுங்கள் . கேவலம் பத்து ரூபாவுக்கு மண்பானை ஒன்றை நீங்கள் வாங்கும் போதும் அதில் வெடிப்பேதும் உள்ளதா எனப் பதினைந்து தடவைகள் தடவிப் பார்க்கின்றீர்கள் .எதற்காக ? நாம் பத்து ரூபாய் விடயத்தில் கூட ஏமாந்து விடக் கூடாதென்பதில் ஜாக்கிரதையாக இருக்கின்றீர்கள்
இந்த மண்பானை விடயத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் கூட மார்க்க விடயத்துக்குக் கொடுக்க மாட்டேன் என்கின்றீர்களே ! ஏன்இப்படி? எனவே யார் எதைச் சொன்னாலும் சட்டென நம்பி விடாமல் குர்ஆன் ஹதீஸில் உள்ளதா ? என்று ஆதாரத்துடன் மார்க்கத்தைப் படியுங்கள் . நிச்சயமாக அல்லாஹ் எம் அனைவருக்கும்நேர்வழி காட்டுவான் . அல்லாஹ் நேர்வழி காட்ட நாடியவர்களை எவராலும் வழிகெடுக்க முடியாது இது இறைவன் வாக்கு. கடவுளை நம்பினார் கைவிடப் படார்!!!.
புத்திக்குப் பொருந்தாத புதிர்ச் சரிதைகள்.
ஹஜ்ரத் ஷக்கீக் பல்கி எனும் சூபி மகான் கூறுவதாவது ..
நாங்கள் ஐந்து விடயங்களைத் தேடினோம் அவற்றை ஐந்து இடங்களில் பெற்றுக்கொண்டோம் .
-இரணத்தில் பரக்கத்து ளுஹாத் தொழுகையிலும் ..
- கப்ருக்கு ஒளி தஹஜ்ஜத் தொழுகையிலும் ..
- முன்கர் நகீரின் கேள்விக்கு பதில் கிராஅத்திலும் .
-சிராத்தல் முஸ்தகீம் பாலத்தை எளிதாகக் கடப்பது நோன்பிலும் ஸதக்காவிலும் ..
-அர்ஷ_டைய நிழல் தனிமையிலிருப்பதிலும் கிடைக்கப் பெற்றோம் . ( தொழு ..சிறப்பு 32ம் பக்கம் . )
இரணத்தில் பரக்கத் ஏற்பட்டிருக்கலாம் .அது லுஹாத் தொழுகையால்தான் என்று எப்படி இவர் அறிந்தார்? குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் வைத்திருக்கின்றாரா?. அல்லது இவருக்குத் தனிப்பட்ட முறையில் வஹி வந்ததா ? கப்ருக்கு ஒளி தஹஜ்ஜூத் தொழுகையிலென்றால் இவர் கப்ருக்குச் சென்று பார்த்து விட்டு வந்தாரா? ஸிராத்தல் முஸ்தகீம் பாலத்தையும் பார்த்திருக்கின்றார் போலும் . அர்ஷின் கீழும் சென்று உட்கார்ந்து விட்டு வந்திருக்கின்றாரோ??….மக்களின் மார்க்க அறியாமையை மூலதனமாகப் பயன்படுத்திக் கொண்டு என்னவெல்லாம் சொல்லுகின்றார்கள் ? உண்மையிலேயே இபாதத்தின் மீது மக்களுக்கு ஆசை ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் அதற்காக குர்ஆன் ஹதீஸிலே நூற்றுக்கணக்கான சம்பவங்கள் உள்ளன . நபியவர்கள் போற்றிச் சென்ற மூன்று சிறந்த நூற்றாண்டு காலப் படுதியில் நபிவழியை அச்சொட்டாகப் பின்பற்றி வாழ்ந்த நல்லோரின் வாழ்க்கைக் குறிப்பு ஆதாரப்பூர்வமான சான்றுகளுடன் இருக்கின்றன .இவற்றையெல்லாம் விட்டு விட்டு முகவரியற்றவர்களின் மூடத்தனமான – நபிவழிக்கு முரணான, பகுத்தறிவு பழித்துரைக்கும் ஆதாரமற்ற சம்பவங்களை பக்திக் பரவசத்துடன் பள்ளியில் உட்கார்ந்து படிப்பதால் இஸ்லாத்தை அறிய முயுமா? பெரியார்கள் பெரியார்கள் என்று அவர்கள் மீது ஒரு குறுட்டுப் பக்தியை ஏற்படுத்தி பின்னர் தங்களையும் மக்கள் பெரியாகளாக மதிக்க வேண்டும் என்ற குறுகிய – சுயநல நோக்கத்துடன்தான் இவையெல்லாம் திட்டமிட்டு எழுதப்பட்டனவா ? என்று எண்ணத் தோன்றுகின்றது.
நபியவர்களை விடச் சிறந்த பெரியார் யார் ? ஸஹாபாத் தோழர்களை விடச் சிறந்த பெரியார்கள் யார்? இவர்களுடைய வாழ்க்கை எமக்கு முன்மாதிரியாக இருப்பதற்குப் போதாவிட்டால் நம்மை விட மோசமான வழிகேடர் யாரும் இருக்க முடியாது . ஸஹாபாக்களின் சம்பவங்களும் தஃலீம் தொகுப்பில் கூறப்பட்டுள்ளதுதானே என சிலர் வினவலாம் . ஸஹாபாக்களின் சம்பவங்களும் இதில் கூறப்பட்டுள்ள பெரியார்களின் சம்பவங்களும் ஒன்றுக்கொன்று முரணானவை . ஸஹாபாக்களின் சம்பவங்கள் நபிவழியை மையமாக வைத்து இடம்பெற்றிருப்பவை .இந்தப் பெரியார்களின் வாழ்வில் இடம்பெற்றதாகச் சொல்லப்படும் சம்பவங்கள் முழுக்க முழுக்க நபிவழிக்கு முரணானவை . இதை ஏற்றால் அதை மறுக்க வேண்டும் .அதை ஏற்றால் இதை மறுக்க வேண்டும் . இரவெல்லாம் நின்று வணங்குவது நபிவழியா ? பகலெல்லாம் நோன்பு நோற்பது நபிவழியா ? மனைவியுடன் உறவு கொள்ளாமல் இருப்பது நபி வழியா ? ,கப்ரில் அடக்கப்பட்டவர்களிடம் துஆக் கேட்பது நபி வழியா ? துறவறம் பூண்டு காடே கதியெனச் செல்வது நபிவழியா? சொல்லுங்கள் . சற்று சிந்தித்துப்பாருங்கள் . எந்த வழி நமக்கு வேண்டும் ? நபிவழியா அல்லது இந்த முகவரியற்ற பெரியார்களின் வழியா ? நீங்களே சிந்தியுங்கள் ,நீங்களே முடிவு செய்யுங்கள் . நாளை அல்லாஹ்வின் முன்னிலையில் நிறுத்தப்படுவீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். கப்ரிலே ஒவ்வொருவருக்கும் கேள்வி கணக்கு உண்டு .
நபியவர்களை ஒவ்வொருவருக்கும் காட்டப்பட்டு இவரைப்பற்றி என்ன கூறுகின்றாய் என்று கேட்கப்படும் . அப்போது நபிவழிப்படி நடந்த நல்லவர்கள் ‘இவர்தான் எங்கள் நபி முஹம்மது . இவர் எங்களுக்கு நேர் வழியைக் காட்டினார் .அதை நாங்கள் பின்பற்றி நடந்தோம்’ என்றும் நபிவழியைப்புறக்கணித்து வாழ்ந்தவர்கள் ‘ இவரா? இவரை எனக்குத் தெரியாதே இவரைப்பற்றி யாராரோ என்னெ ன்னவோ சொல்லிக் கொண்டிருந்தார்கள் நானும் அதையே சொல்லிக் கொண்டு திரிந்தேன் ‘ என பதிலளிப்பார்.
( புகாரி 1252 -முஸ்லிம் 1557)
இவ்விரு சாராரில் எந்தப் பிரிவில் நாம் சேர வேண்டுமென்று நீங்களே முடிவெடுங்கள் .அதற்காக என்ன செய்ய வேண்டுமென்றும் முடிவெடுங்கள் . நாமும் நபிவழிப்படி நடந்திருந்தால் தானே தக்க பதிலை அளிக்க முடியும் . இதை மனதில் கொண்டு நாம் செல்லும் பாதையை சீர்படுத்திக் கொள்வது ஒவ்வொருவரினதும் கடமையாகும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள் .

thanks to :- tableq.wordpress.com

0 comments:

Post a Comment