Monday, November 22, 2010

புலிகளின் அழிவில் புலனாகும் பாடம்

சுமார் முப்பது வருடங்களாக இலங்கையில் தமிழர்களுக்கான சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென ஆயுதமேந்திப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கை இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டு விட்டது.
விடுதலை உரிமை மீட்பு எனும் பெயர்களில் இலங்கையில் தோன்றிய இந்த இயக்கம் எவராலும் எதிர்பார்க்க முடியாத பேரழிவை இன்று சந்தித்ததற்கு நியாயமானதும் பக்கசார்பற்றதுமான ஒரு காரணம் நிச்சயமாக இருக்க வேண்டும்.
கணிசமான போராட்ட வீரர்கள் அரசாங்கத்திடம் இல்லாத கனரக ஆயுதங்கள் நவீன தொழில் நுட்ப வசதிகள் புலம் பெயர் நாடுகளிலிருந்து கிடைக்கும் நிதி வளங்கள் சூழ இலட்சக்கணக்கான பொது மக்கள் என பெரும் பௌதீக வளத்தை பெற்றிருந்தும் புலிகள் இயக்கம் எதனால் தோல்வி கண்டது என நாம் சிந்தித்தால் ஒரு விடயம் எமக்குப் புலனாகும்.
அழ்ழாஹ்வின் இப்பூமியை அநியாயத்தாலும் அக்கிரமத்தாலும் நிரப்ப யாரெல்லாம் விரும்புகின் றார்களோ அவர்கள் எவ்வளவு வசதி வாய்ப்புகள் செல்வாக்குகளைப் பெற்றிருந்தாலும் என்றோ ஒரு நாள் நிச்சயம் தோல்வியைத் தழுவுவார்கள் என்பதுவே அக்காரணம்.
தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரை அவர்கள் இந்நாட்டில் சாதித்ததுதான் என்ன? அழ்ழாஹ்வை ஸஜ்தாச் செய்த அப்பாவிகளை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றமை யாழ்பாணத்தில் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ்ந்த முஸ்லிம் குடும்பங்களை இரவோடு இரவாக உடுத்த ஆடை களுடன் சொந்த மண்னை விட்டு விரட்டியடித்தமை அன்றாடம் கூலித் தொழில் செய்யும் ஏழை முஸ்லிம்களை வயல் வெளிகளிலும் புதர் நிறைந்த காடுகளிலும் வெட்டிச் சாய்த்தமை உறக்கத்தில் இருந்த ஏறாவூர் மக்களை இருளில் இரத்த வெள்ளத்தில் மிதக்க வைத்த மகத்தான கொடுமைகளை இந்நாட்டில் செய்த கொடுங் கோலர்கள் யார்? இந்த விடுதலைப் புலிகளன்றி வேறு யாருமில்லை.
அநியாயத்தின் பெயரில் அரசாட்சி செய்யும் அனைத்து அரசியல் வாதிகளுக்கும் புலிகளின் அழிவில் நிரப்பமான பாடமும் படிப்பினையும் இருக்கின்றது. திருமறைக் குர் ஆனில் அழ்ழாஹ் குறிப்பிடுகையில்

‘மோசடி செய்வது எந்த நபிக்கும் தகாது. மோசடி செய்தவர் மோசடி செய்த பொருளை கியாமத் நாளில் கொண்டு வருவார்.
பின்னர் ஒவ்வொருவருக்கும் அவர் செய்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.’ (அல்குர்ஆன் 3:161) 

போராட்டம் எனும் பெயரில் எத்தனையோ மாற்று தமிழ் இயக்கத் தலைவர்களை சுட்டுக் கொன்ற விடுதலைப் புலிகள் இன்று வரலாற்று பக்கங்களில் மாத்திரம் வாசிக்கப்படும் இயக்கமாக மாறியிருப்பதானது அனைத்து நிறுவனங்கள் இயக்கங்கள் தனி நபர்களுக்கும் ‘அநீதமிழைத்தால் அழிவே முடிவாகும்’ எனும் பேருண்மையை நிரூபித்திருக்கின்றது.
அதே போன்று ‘விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம்’ என கொண்டாட்டங்களை நடாத்தும் இலங்கை அரசாங்கம் சிறுபான்மையின மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தி அதற்கான செயற்றிட்டங்களில் இறங்க வேண்டும்.
ஜனநாயக வழிகளில் போராடி உரிமைகள் கிடைக்காத போதுதான் அப்போராட்டங்கள் ஆயுதப் போராட்டங்களாக மாறுவதை நாம் யாரும் மறுக்க மாட்டோம். ஆயுதப் போராட்டத்தினால் அழிந்தது இந்நாட்டில் வாழ்ந்த  தமிழ் சிங்கள முஸ்லிம் எனும் மூவினமும் எமது நாட்டின் பொருளாதாரமும்தான்.
ஆகவே இந்நாட்டில் வாழும் சிறுபான்மை தொடர்பில் ஜனதிபதி கூடிய கவனம் செலுத்துவார் என அவதானிகள் எதிர்பார்க்கின்றனர். எது எவ்வாறிருந் தாலும் எல்.ரீ.ரி.ஈ இயக்கத்தின் அழிவு ‘அநீதிகள் நீண்டகாலம் நிலைப்பதில்லை’ என்பதை உலகத்திற்கு மற்றுமொரு தடவை நிரூபித்துள்ளது. நீதிக்காக யாரெல்லாம் எங்கு குரல் கொடுத்தாலும் நிச்சயம் வல்ல அழ்ழாஹ்  அவர்களை மேலோங்கச் செய்வான் என்பதில் எச்சந்தேகமும் இல்லை.

0 comments:

Post a Comment