Wednesday, October 20, 2010

இறைவனைக் காணமுடியுமா?

இறைவனைக் காண முடியுமா?

சுவர்க்கவாசிகளுக்கு, இறைவனைக் காணக் கிடைக்கும் என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.

மாற்றுக் கருத்துள்ளவர்களோ --------

1. அல்லாஹ் ஒளியாயிற்றே! அவனை எப்படிப் பார்ப்பது?

2. அல்லாஹ்வைப் பார்ப்பது என்பது, அவனைப் பார்ப்பதாக ஏற்றுக்கொள்ளக் கூடாது. அவனது பண்பைப் பார்ப்பதாகத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

3. அல்லாஹ்விற்கு உருவம் உண்டாயின், அவனுக்கு ஒரு காலா? இரண்டு காலா?
இப்படியான பல கேள்விகளை முன் வைக்கின்றனர்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக அலச முன்பு, ஒரு விசுவாசி மறைவான விடயங்களில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என குர்ஆன், சுன்னா வழி காட்டுகிறது என்பதை அறிந்துகொள்ள முயல்வோம்.

18:22. (அவர்கள்) மூன்று பேர் தாம்; அவர்களில் நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலர்) கூறுகின்றனர்(இல்லை) அவர்கள் ஐந்து பேர் தாம்; - அவர்களில் ஆறாவது அவர்களுடைய நாய்” என்று மறைவானதை ஊகம் செய்து (சிலர்) கூறுகிறார்கள்; இன்னும் (சிலர்) “ஏழுபேர் - அவர்களில் எட்டாவது அவர்களுடைய நாய்” என்று சொல்கிறார்கள் - (நபியே!) அவர்களுடைய எண்ணிக்கையை என்னுடைய இறைவன் தான் நன்கறிவான்; சிலரைத் தவிர, மற்றெவரும் அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக! ஆகவே, அவர்களைப் பற்றி வெளிரங்கமான விஷயம் தவிர (வேறெது பற்றியும்) நீர் தர்க்கம் செய்ய வேண்டாம்; இன்னும் அவர்களைக் குறித்து இவர்களில் எவரிடமும் நீர் தீர்ப்புக் கேட்கவும் வேண்டாம்.


//(அவர்கள்) மூன்று பேர் தாம்; அவர்களில் நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலர்) கூறுகின்றனர்(இல்லை) அவர்கள் ஐந்து பேர் தாம்; - அவர்களில் ஆறாவது அவர்களுடைய நாய்” என்று மறைவானதை ஊகம் செய்து (சிலர்) கூறுகிறார்கள்;// (18:22)
மேலுள்ள குர்ஆன் வசனத்தில், அல்லாஹ் அதாவது கடந்த காலமொன்றில் நடந்த சம்பவமான “அஸ்ஹாபுல் கஹ்பைப்” பற்றிக் கூறும் போது, அவர்களின் எண்ணிக்கை தொடர்பாக பலர், பலவிதமான எண்ணிக்கையைக் கூறியதாக அல்லாஹ் இங்கு குறிப்பிட்டுக் காட்டுகின்றான்.

கடந்த காலமொன்றில் நடந்த இந்த விடயத்தில் கூட, அல்லாஹ் அவர்களின் எண்ணிக்கை விடயம் ஒரு மறைவான விடயம் என்று கூறுகின்றான்.
இந்த எண்ணிக்கை தொடர்பாக வாக்கு வாதம் ஏற்பட்டால்,

“ஆகவே, அவர்களைப் பற்றி வெளிரங்கமான விஷயம் தவிர (வேறெது பற்றியும்) நீர் தர்க்கம் செய்ய வேண்டாம்;” (18:22) என்று தன் தூதருக்குக் கூறுகின்றான்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள, “வெளிரங்கமான விஷயம்” என்ற வார்த்தைகளின் கருத்து என்ன என்பதை அறிய முயல்வோம்.
அதாவது மறைவான விடயங்களை கதைக்க நேரிட்டால்,, அறிவிக்கப்பட விடயங்களை மாத்திரம் கதைக்குமாறு அல்லாஹ் இங்கு தன் தூதருக்கு அறிவித்துக்கொடுக்கின்றான்.
அதாவது மறைவான விடயங்கள், தெளிவான ஆதாரத்தின் அடிப்படையில் மாத்திரம் கதைக்கப்படவேண்டும் என அல்லாஹ் இங்கு கூறுகின்றான்.

இன்னும் சொல்லப்போனால், மறைவான விடயங்கள் தொடர்பாக ஊகிப்பதை அல்லாஹ் இங்கு தடுக்கின்றான்.

ஒரு மனிதனின், மரணத்தோடு ஆரம்பிக்கும் அத்தனை செயல்களும் மறைவான செய்திகளில் உள்ளவையாகும்.
எனவே ஒருவர் சுவர்க்கத்தில், நுழைவது என்பதும் மறைவான செய்திகளில், உள்ளவையாகும். அதே போல் சுவர்க்கத்தில் நடை பெரும் விடயங்களும் மறைவான செய்திகளில் உள்ளவையாகும்.
எனவே ஒரு விசுவாசி, சுவர்க்கத்தில் நடக்கும் செயள்களைப் பற்றி குறிப்பிடுவாராயின், தெளிவான ஆதாரங்களின் அடிப்படையிலே கூறவேண்டும். அப்படியில்லாமல் தனது ஊகித்தலின் அடிப்படையில் பேசுவாராயின், அவருக்கு மறைவான செய்திகள் பற்றி தெளிவான விளக்கம் இல்லை என பொருள் படும். இன்னும் சொல்லப்போனால், மறைவான விடயங்கள் தொடர்பாக அல்லாவிற்கு தெரியும் என்பதோடு, தனக்கும் தெரியும் எனக் கூறுகின்றார் என பொருள் படும்.

இப்போது விடயத்திற்கு வருவோம்.
296 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரு சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் வெள்ளியால் ஆனவை. (வேறு) இரு சொர்க்கங்களும் உண்டு. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் பொன்னால் ஆனவை. "அத்ன்' எனும் சொர்க்கத்தில் இருப்பவர்கள் தங்கள் இறைவனைக் காண்பதற்கு, அவன்மீதுள்ள "பெருமை' எனும் மேலாடை தவிர வேறெந்தத் தடையும் இராது.(முஸ்லிம்)
இதை அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.186
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
மேலுள்ள ஹதீஸில்,

// "அத்ன்' எனும் சொர்க்கத்தில் இருப்பவர்கள் தங்கள் இறைவனைக் காண்பதற்கு, அவன்மீதுள்ள "பெருமை' எனும் மேலாடை தவிர வேறெந்தத் தடையும் இராது.//
என்ற வாசகத்தைக் கவனியுங்கள்.

இங்கு இறைவனைக் காண்பதற்கு தடையாக இருப்பது, அவனது மேலாடையான “பெருமை” என்பதாக உள்ளது.

அடுத்த ஹதீஸைக் கவனியுங்கள்.

297 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்துவிடும்போது (அவர்களிடம்) அல்லாஹ், "உங்களுக்கு நான் இன்னும் கூடுதலாக ஏதேனும் வழங்க வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?'' என்று கேட்பான். அதற்கு அவர்கள் "(இறைவா!) நீ எங்கள் முகங்களை வெண்மையாக்கவில்லையா? எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சொர்க்கத்திற்குள் பிரவேசிக்கச் செய்யவில்லையா (இதைவிடக் கூடுதலாக எங்களுக்கு வேறென்ன வேண்டும்)?'' என்று கேட்பார்கள்.
அப்போது அல்லாஹ், (தன்னைச் சுற்றிலும் இருக்கும்) திரையை விலக்கி (அவர்களுக்கு தரிசனம் தந்தி)டுவான். அப்போது தம் இறைவனைக் (காணும் அவர்களுக்கு அவனைக்) காண்பதைவிட மிகவும் விருப்பமானது வேறெதுவும் வழங்கப்பட்டிராது.
இதை ஸுஹைப் (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள். (முஸ்லிம்)

மேலுள்ள ஹதீஸில்,

//அப்போது அல்லாஹ், (தன்னைச் சுற்றிலும் இருக்கும்) திரையை விலக்கி (அவர்களுக்கு தரிசனம் தந்தி)டுவான். அப்போது தம் இறைவனைக் (காணும் அவர்களுக்கு அவனைக்) காண்பதைவிட மிகவும் விருப்பமானது வேறெதுவும் வழங்கப்பட்டிராது.//

என்ற வாசகத்தைக் கவனியுங்கள். இங்கு அல்லாஹ் தனது திரையை அகற்றுவதாகவும், அதன் காரணமாக சொர்க்கவாசிகள் தங்களது இறைவனைக் காண்பார்கள் என்னவும் உள்ளது.

சுவர்க்கவாசிகள், தங்களது இறைவனைக் காண்பார்கள் என்று தெளிவாக வந்துள்ளதை அப்படியே சொல்லாமல், சில சகோதரர்கள் மறைவான விடயம் ஒன்றான இந்த நிகழ்வை, ஊகித்து அது அப்படியல்ல,

அது அல்லாஹ்வின் பண்பைக்காண்பதுதான் என்று புது விளக்கம் கொடுக்கின்றார்கள்.

இப்படி விளக்கம் கொடுக்கவேண்டுமாயின், தெளிவான ஆதாரம் தேவை. அப்படி உங்களிடம் ஆதாரம் இருந்தால் முன் வையுங்கள்.

291 அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "(அவனைச் சுற்றிலும் இருப்பது) ஒளியாயிற்றே! நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?'' என்று (திருப்பிக்) கேட்டார்கள். (முஸ்லிம்)

மேற் கண்ட ஹதீஸில், இறைவனைச் சுற்றிலும் இருப்பது ஒளி என வந்துள்ளது. அதாவது இந்த உலகில் உள்ளவர்களுக்கு இறைவனைக் காண்பதற்கு ஒளி, தடையாக உள்ளது என்பது தெரிய வருகின்றது.

ஆனால் மறுமையில், அதாவது சொர்க்கவாசிகள் தங்கள் இறைவனைக் காண்பதற்கு தடையாக உள்ளது, அவனுடைய மேலாடையான “பெருமை” என இதற்கு முன் கூறப்பட்ட ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.

எனவே இரண்டையும் வேவ்வேராக விளங்கிக்கொண்டால் எந்த விதக் குழப்பமுமில்லை.

அல்லாஹ்விற்கு உருவம் இருந்தால், அவனுக்கு ஒரு காலா? இரு காலா? என்று கூட இஸ்லாம் அனுமதிக்காத கேள்விகளைக்கூட சிலர் கேட்கின்றார்கள்.

குர்ஆன், ஹதீஸில் வந்துள்ளவைகளை மாத்திரம் அப்படியே சொல்வோம். அதற்கு மேலதிகமாகவோ, விளக்கமாகவோ வேறு எதையும் கூறமாட்டோம் என்பதுதான் இம்மாதிரியான கேள்விகளுக்குரிய பதிலாகும்.

ஒரு விசுவாசி அல்லாஹ்வைப் பற்றி இப்படி கேள்வி கேட்கின்றார் என்றால், மறைவான விடயங்களை எப்படி நம்பவேண்டும் என்ற தெளிவு அவருக்கு இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன். யா அல்லாஹ் ஏதும் பிழை நடந்திருப்பின் மன்னித்து, அருள் புரிவாயாக.!

நன்றி  :-

Abdullah Ibraaheem

0 comments:

Post a Comment